கோவை மாவட்டம், சின்னியம்பாளையம், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1994ல், 8ம் வகுப்பு படித்தேன். அன்று பள்ளிக்கு கல்வி அதிகாரிகள் வர இருந்தனர். வகுப்பு ஆசிரியர் சின்னசாமி, 'அதிகாரி வந்ததும் எழுந்து வணக்கம் கூறி, கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்ல வேண்டும்; ஆடு திருடன் போல் முழிக்க கூடாது...' என, முன் எச்சரிக்கை செய்திருந்தார்.
சிறிது நேரத்தில் வந்த அதிகாரிகளின் கேள்விகளுக்கு மிகச் சிலரே சரியான பதில் கூறினர். திணறியவர்களை கண்டு கோபமுற்ற ஆசிரியர், முறைத்து சைகையால் திட்டிய வண்ணம் இருந்தார்.
பதற்றத்துடன் இருந்த என்னிடம், 'கற்றது .......... கல்லாதது ..........' என, கோடிட்ட இடங்களை நிரப்ப கேட்டார் அதிகாரி. பயம் தலைக்கேற, 'கற்றது, கடலை அளவு; கல்லாதது, உலக அளவு...' என உளறினேன்; விழுந்து விழுந்து சிரித்தது வகுப்பறை.
கோபத்தின் உச்சியில் எரித்து விடுவது போல் பார்த்தார் ஆசிரியர். அதை கவனித்த அதிகாரி, 'நீ கற்றது கடலை அளவு தான்... இல்லையேல், இந்த சிறிய கேள்விக்கு, சரியான பதில் கூறி இருப்பாயே...' என்றார். வகுப்பில் கலகலப்பு ஏற்பட்டது. என் வயது, 40; ஆடை தயாரிப்பு நிபுணராக உள்ளேன். அன்று பள்ளியில் நடந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் சிரித்துவிடுகிறேன்.
- ம.புனிதா, கோவை.