முன்கதை: அன்டார்டிகாவில் இருந்து எடுத்து வந்த டைனோசர் உடல் பாகத்தை அறிவியல் கூடத்தில் உயிருள்ள குட்டியாக்கி, பிறந்தநாள் பரிசாக, சந்திரஜெயனுக்கு வழங்கினார் விஞ்ஞானி யோகிபாபு. இனி -
சந்திரஜெயன் பிறந்தநாளுக்கு வந்திருந்தவர்கள், 'முயல் குட்டி போல் இல்ல... பார்க்க, நாய் குட்டி ஜாடையாவும் இருக்கு; கொஞ்சம் பன்றி குட்டி போலவும் தெரியுது; இது என்ன...' என விசாரித்தனர்.
''இது, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன், பூமியில் வாழ்ந்த டைனோசர்! மரபியல் வரைப்படம் தயாரித்து, போன்சாய் முறையில் உருவாக்கிய, டிசைனர் டைனோசர். இப்படிப்பட்ட பரிசை கொடுக்கும் உலகின் முதல் நபர், என் மாமா; அந்த பரிசை பெறும், முதல் நபர் நான்...'' என்றான் சந்திரஜெயன்.
'சேச்சே... பதற்றமாக இருக்கு... பார்த்தால், அருவெறுப்பாகவும், பயமாவும் இருக்கு...' என்றனர் சந்திரஜெயனின் பெற்றோர்.
''பன்றி... பன்றி...'' என, தோளை குலுக்கினாள் தீவிதா.
'இதை இங்கே வைத்து இருந்தா... தெருவுல நாங்க குடியிருக்க மாட்டோம்...' என்றனர் ஊர் மக்கள்.
யோகிபாபுவை பார்த்து, ''நல்லது செய்வ என நினைத்தால், என் குடும்பத்துக்கு, தீமை செஞ்சிருக்கியே... இது நியாயமா...'' என்றார் சந்திரஜெயனின் அப்பா.
''தப்பா புரிஞ்சிருக்கீங்க மச்சான்...'' என்றார் யோகிபாபு.
''உன் கைய, காலா பிடிச்சு கெஞ்சி கேக்குறேன்... ஒரு நிமிஷம் கூட தாமதிக்காம, இதை துாக்கிட்டு கிளம்பி போ...''
வீடே இடிந்து போகும் அளவுக்கு, உச்சக்கட்ட கோபத்தில் கத்தினார் சந்திரஜெயனின் அப்பா.
''எதுக்கப்பா கத்துறீங்க...'' என்றான் சந்திரஜெயன்.
''இதை வெச்சுக்க பிடிக்கல...''
''என் வளர்ப்பு மிருகங்களுக்கு கொடுக்குற மரியாதைய, இந்த டைனோவுக்கு கொடுங்க...''
''அதென்னடா டைனோ... முழுசா டைனோசர்ன்னு சொல்லு; மனிதர்களை கொத்து கொத்தாய் விழுங்க கூடிய ராட்சஷ மிருகம் டைனோசர்; அதோட ஜெராக்சை நீ வெச்சுக்கிறது எனக்கு பிடிக்கல...''
''டைனோசரின் கொடூர குணங்களை எல்லாம் அகற்றி விட்டு, செல்ல பிராணியாக உருவாக்கியிருக்கிறார் மாமா...''
''அளவு மாறினாலும், அதோட குணம் மாறுமா...''
''நோய் பரப்பும் கிருமிகளிடமிருந்து, நோய் பரப்பும் குணத்தை அகற்றி, அதே நோய்க்கான தடுப்பூசியாக பயன்படுத்துகிறோம். பாம்பு விஷத்திலிருந்து ஆளைக் கொல்லும் திறனை அகற்றி, பாம்புக்கடிக்கான மருந்தாக உபயோகிக்கிறோம்; ஆட்கொல்லி டைனோசரிலிருந்து, ஒரு அழகிய வளர்ப்பு மிருகத்தை வார்த்தெடுத்திருக்கிறோம்... பிடிவாதமாக இருந்தா எப்படி... எனக்காக கொஞ்சம் விட்டுக் கொடுங்கப்பா...''
''குரங்கு, நாய், பூனை, வாத்து, மயில் போன்றவற்றை வளர்க்கிறேன் என்றாய்; அனுமதித்தேன். இப்போது, ஒரு பேயை வளர்க்க போவதாக கூறுகிறாய்; அதை எப்படி அனுமதிப்பது...''
''நான் உருவாக்கி இருப்பது ஒரு அழகான கீழ்படிதல் உள்ள வளர்ப்பு மிருகம்; மிகவும் சாதுவானது. யாருக்கும் சிறு கெடுதல் கூட செய்யாது...'' குறுக்கிட்டார் யோகி பாபு.
பதில் எதுவும் கூறாமல், மவுனமாக இருந்தார் சந்திரஜெயனின் அப்பா.
''அப்பா... உங்களுக்கும், எனக்கும் ஒரு சிறு ஒப்பந்தம்...''
''என்ன ஒப்பந்தம்...''
''டைனோ ஒரு மாசம் என் தோட்டத்தில் வளரட்டும்; இந்த குறிப்பிட்ட கால இடைவெளிக்குள், எதாவது அசம்பாவிதம் நடந்தால், அதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்; டைனோவை மீண்டும் யோகிபாபு மாமாவிடம் ஒப்படைத்து விடுகிறேன்...''
''ஒரு மாத அவகாசம் தர முடியாது...''
''சரி... 15 நாள் அவகாசம் தாருங்கள்; அதே நிபந்தனைகளுடன்...'' என்று கூறினான் சந்திரஜெயன்.
யோசித்தார் சந்திரஜெயனின் அப்பா.
''சரி...''
'உங்க சண்டைலாம் அப்புறம் வெச்சுகோங்க; நாங்க டைனோவுடன் செல்பி எடுத்துக்கொள்ள விரும்புறோம்... அனுமதிப்பீர்களா...' என்றனர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றோர்.
''செல்பி எடுக்கும் போது, கடிச்சி வச்சிராதே...''
''யாரையும் கடிக்காம இருக்க டைனோவுக்கு, 'மவுத்கார்டு' மாட்டி விட்டா என்ன...''
''பயப்படாதீங்க... டைனோவை அணைப்பா துாக்கி வெச்சுக்கிறேன்; நீங்க எல்லாம் எனக்கு பின்னாடி ரெண்டு பக்கமும் வந்து நில்லுங்க; செல்பி எடுத்திடலாம்...'' என்றான் சந்திரஜெயன்.
அனைவரும் சம்மதித்தனர்.
''டைனோ... கமான் கமான்...''
இரு கைகளையும் நீட்டி அழைத்தான்; கண்களை உருட்டி உருட்டி பார்த்தது. பின், ஓடி வந்து சந்திரஜெயன் கைகளுக்குள் தாவியது டைனோ.
உதடுகளை குவித்து, விரல்களைக் காட்டி, செல்பிக்கு போஸ் கொடுத்தனர்.
மீண்டும் காட்சியமைப்புக்குள் வந்தார் அப்பா.
''இந்த, ௧௫ நாள்ல, டைனோவால எதாவது பிரச்னை வந்தா, உடனே யோகிபாபுவுக்கு பார்சல் செய்துடுவேன்...''
''பிரச்னையை யாரும் செயற்கையாய் உருவாக்கி விடாதீங்க...'' என்றான் சந்திரஜெயன்.
டைனோவுக்கு தன்னை பற்றி பேசுகின்றனர் என புரிந்தது; அதன் உடல் மெலிதாக நடுங்கியது.
- தொடரும்...
- வஹித்தா நாசர்