அன்புள்ள அம்மாவுக்கு...
என் வயது, 15; 10ம் வகுப்பு முடிக்கப்போகும் மாணவி; என் பெற்றோர் அரசுப்பணியில் இருப்பவர்கள். என் தம்பி, 5ம் வகுப்பு படிக்கிறான்.
வகுப்பில் எப்போதுமே, 75 சதவீத மதிப்பெண் எடுப்பேன்.
என் பெற்றோர் ஒரு முடிவெடுத்துள்ளனர்; பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கவும், நீட் தேர்வு எழுதவும், இரண்டு ஆண்டுகள், பிரபல ரெசிடென்ஷியல் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க உறுதி பூண்டுள்ளனர்.
பெற்றோரையும், தம்பியையும் பிரிந்திருக்க விரும்பமில்லை; வீட்டோடு இருந்தே படிக்க விரும்புகிறேன். இதற்காக அடம் பிடித்து வருகிறேன்; அவர்கள் மசியவில்லை.
எனக்கு நல்லதாக ஒரு ஆலோசனை கூறுங்கள் ஆன்டி...
அன்பு மகளே...
ஆண்களின் கல்வி குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் நன்மை பயக்க கூடியது; பெண்களின் கல்வி பல தலைமுறைக்கும் நன்மை பயக்க கூடியது.
ஆங்கிலத்தில், 'ரெசிடென்ஷியல்' என்பதை, தமிழில், 'உண்டு உறைவிடப் பள்ளி' என கூறுவர். அவை எல்லாம் குருகுலம் போன்றவை.
'நீட்' தேர்வுகள் வருவதற்கு முன், உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து எடுக்கும் மதிப்பெண்களை வைத்தே மருத்துவ படிப்பில் சேர்ந்து விடலாம்.
'நீட்' தேர்வு வந்த பின், உண்டு உறைவிடப் பள்ளியின் தேவைகள் வெகுவாய் குறைந்து விட்டன. இப்போது, உண்டு உறைவிடப் பள்ளிகள், மாணவ, மாணவியருக்கு கூடுதலாய், 'நீட்' தேர்வு பயிற்சியை கொடுக்க ஆரம்பித்து விட்டன.
இப்பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலானோர் எளிதாக, 'நீட்' தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து மருத்துவ படிப்பில் சேர்கின்றனர். இதனால், மீண்டும் இப்பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்து விட்டது.
உண்டு உறைவிடப் பள்ளியின் நன்மைகள்...
* வீட்டு பிரச்னையின்றி, கவனச்சிதறல் இல்லாமல் படிக்க முடியும்
* ஒரு நாளில், 24 மணிநேரத்தையும், படிப்புக்கு செலவிடலாம்
* ஆசிரியர்களின் சேவை முழுமையாக கிடைக்கும்
* அதிகாலையில் எழுந்து படிப்பதால், உடல், மன ஆரோக்கியம் கூர்மை பெறும்
* குழு விவாதம் சாத்தியமாகும்
* சினிமா, 'டிவி' மற்றும் கூடாத நண்பர்களின் சேர்க்கை அந்நியமாகும்
* போட்டி போட்டு படிக்கும் மனோபாவம் உருவாகும்
* உணவின் மீதான நாட்டம் குறையும்.
மொத்தத்தில், ராணுவ பயிற்சி பெற்ற பாவனை, இரண்டு ஆண்டுகளுக்கு தாராளமாக கிடைக்கும்.
உண்டு உறைவிடப் பள்ளியின் தீமைகள்...
பிராய்லர் கோழிகள் போல, மாணவ, மாணவியர் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்படுகின்றனர். இரண்டு ஆண்டுகளில், பெற்றோரையும், உடன் பிறந்தோரையும் ஓரிரு முறை தான் பார்க்க முடியும்.
வாரம் ஒருமுறை சில நிமிடங்கள் மட்டுமே தொலைபேசியில் பேச முடியும்; இது, மாணவ, மாணவியரின் மனநலனை வெகுவாக பாதிக்கும். இதனால், சிலர் பள்ளியை விட்டு ஓடி விடுகின்றனர்; வீட்டில் தங்கி படித்து எடுக்கும் மதிப்பெண்ணை விட, குறைவாக பெறுகின்றனர்; சிலருக்கு தோல் நோய்கள் வர வாய்ப்புண்டு.
படிப்புக்காக, இரண்டு ஆண்டுகள் பிரிந்திருக்கும் பெற்றோரை சுயநலவாதிகள் என ஆயுளுக்கும் நினைக்க வாய்ப்பிருக்கிறது; சில இடங்களில் உறவு விரிசல் நிரந்தரமாகி விடுகிறது.
மகளே... வீட்டில் தங்கி படிப்பது உசிதமானதா, உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி படிப்பது உசிதமானதா என்பதை, உன் ஆழ் மனதை கேட்டு முடிவு செய்.
உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்ப்பது, உன் பெற்றோரின் சொந்த முடிவா, யாரையாவது பார்த்து சூடு போட்டு கொண்டதா என பார்!
சாதகபாதங்களை அலசி, ஒளிமயமான எதிர்காலத்தை மனதில் வைத்து, சரியான முடிவை எடு செல்லம்... வாழ்த்துகள்!
- கூடை நிறைய அன்புடன், பிளாரன்ஸ்