தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,
வணக்கம். மாற்றுத்திறனாளி மகளை பறிகொடுத்துட்டு தவிக்கிற பரிதாபத்திற்குரிய தாய் நான். சங்கரன்கோவில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லுாரி நிர்வாகத்தோட அஜாக்கிரதை தான் என் மகள் மரணத்துக்கு காரணம்!
மே 10, 2019. அன்னைக்கு இடி, மின்னலோட கடுமையான மழை. பி.ஏ., முதலாமாண்டு தேர்வு எழுதப் போன என் பொண்ணு மேல, பழுதடைந்த கல்லுாரி கட்டடத்தோட சுவர் இடிஞ்சு விழுந்து அவ இறந்துட்டா!
சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையத்துல வழக்கு பதிவாச்சு! பல்கலைக்கழக துணைவேந்தர், கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள் எல்லாரும் ஆறுதல் சொன்னதோட, அதே கல்லுாரியில டிகிரி முடிச்சிருக்கிற என் மூத்த மகளுக்கு அரசுப்பணி கிடைக்க பரிந்துரைக்கிறோம்னு நம்பிக்கை தந்தாங்க. 4 லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைச்சது. திருநெல்வேலி/ தென்காசி மாவட்ட ஆட்சியர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், முதல்வர் எல்லாருக்கும் மனு கொடுத்தேன்.
'100 நாட்களில் குறை தீர்ப்பேன்'னு நீங்க சொன்னதை நம்பி உங்ககிட்டேயும் மனு கொடுத்தேன்; பிரயோஜனமில்லை! காலம் முழுக்க நாங்க கண்ணீர் விடணும்; நீங்க கலகலன்னு வாழணும்... அப்படித்தானே; சந்தோஷம்யா!
- கல்லுாரி சுவர் சரிந்ததில் மாற்றுத்திறனாளி மகள் மகாலட்சுமியை இழந்த செல்வி மாரியப்பன், பி.ஆலங்குளம், தென்காசி.