'பசிக்கின்றதா... எடுத்துக்கோங்க...' இது கோவை புலியகுளத்தின் ஷப்ரீனா சதீஷ், தங்கள் வீட்டின் முன் அமைத்திருக்கும் வெஜ் பிரியாணி உணவக வாசலில் எழுதி வைத்திருக்கும் வாசகம்; இங்கு, பிரியாணியின் விலை 20 ரூபாய் மட்டுமே; பணம் இல்லாதவர்கள் தயங்கவே வேண்டாம்; உரிமையாக எடுத்துச் சென்று பசியாறலாம்.
ஆசைகள் துறந்தவரா ஷப்ரீனா?
(சிரித்தபடியே...) எல்லாருக்கும் அம்மாவா இருந்து பசியாற்றணும்; தினமும் 100 பேருக்காவது சோறு போடணும்னு பேராசை கொண்டவள் நான்!
இப்படி ஒரு வாழ்க்கையில என்ன சாதிச்சிட முடியும்னு நினைக்கிறீங்க?
என் மகளுக்கு 13 வயசு. 'என்னையும் தம்பியையும் நல்லா நீங்க வளர்த்திருக்கிறதா எல்லாரும் சொல்றாங்க. எதிர்காலத்துல நான் ஆரம்பிக்கப் போற ஆதரவற்ற இல்லத்துக்கு வர்ற குழந்தைகளையும் நீங்கதாம்மா வளர்க்கணும்'னு அவ சொல்றா; நான் சாதிச்சிட்டேன்தானே?
'கொரோனா' கால ஊரடங்கில் இவருக்கும், இவரது கணவர் சதீஷிற்கும் வேலையிழப்பு! இந்த சூழலில் உணவகம் துவக்கும் யோசனை பிறந்திருக்கிறது. வேலையிழப்பில் சந்தித்த பசி கொடுமையால், 2020 டிசம்பர் இறுதியில் கடை துவக்கியதும், 'பசிக்கின்றதா... எடுத்துக்கோங்க...' என்று பலகை வைத்திருக்கிறார்.
இந்த சேவைக்கு உங்க பெண்மை எப்படி உதவுது?
'பசி'ன்னு வந்தும் தன்மானம் தடுக்கிறதால உணவை எடுத்துக்க தயங்குறவங்க நிறைய பேர்; அவங்களை என் தாய்மை அடையாளம் கண்டுபிடிச்சிடும்; நானே கூப்பிட்டு சாப்பாடு கொடுத்திருவேன்; தினமும் 20 பேர் இப்படி சாப்பிடுறாங்க! கதவைத் தட்டி, 'ஆத்தா... சாப்பாடு இருக்கா; அக்கா... பசிக்குது'ன்னு உரிமையா இப்போ கேட்குறாங்க!
வர்றவங்க எல்லாருமே நல்லவங்களா?
அதையும் கண்டுபிடிச்சிடுவேன். மனைவி மகனோட பைக்ல வந்த ஒருத்தர் சாப்பாட்டை எடுத்தார். 'இப்போதான் மீன் வாங்கிட்டுப் போறோம்; சமைக்க நேரமாகும்; அதான்...'னு தலை சொறிஞ்சார்.
'நம்ம குழந்தைங்க நம்மளை பார்த்துதான் சார் வளர்றாங்க!'ன்னு சொன்னேன். 'மன்னிச்சிடுங்கம்மா...'ன்னு எடுத்ததை வைச்சிட்டு கிளம்பிட்டார்.
மழை நேரமென்றால் சாலையோரவாசிகளுக்கு உணவளிப்பது ஷப்ரீனாவின் வழக்கம். இவரது சேவையை அறிந்து பண உதவி செய்ய விரும்பினால், 'பணம் வேண்டாம்; என்கிட்டே சாப்பாடு பொட்டலம் வாங்கி இந்த பெட்டியில வைச்சிடுங்க... அதுபோதும்' என்கிறார்!
பணத்தை பார்த்து ஏன் இந்த பயம்?
'பணம் மனசை அழுக்காக்கிடும்'னு பரிபூரணமா நம்புறேன்; வேற ஒண்ணும் இல்லை.
ஷப்ரீனா சதீஷின் புதுப்புது அர்த்தங்கள்!
உதவி? - வரம்
பசி? - சவால்