கண்ணனுக்கு பாமா, ருக்மிணி என்ற மனைவியர் உண்டு. பாமாவை, பூமாதேவி என்றும், ருக்மிணியை, ஸ்ரீதேவி (லட்சுமி) என்றும் அழைப்பர். இதுபோக, நீளாதேவி என்பவளும் கண்ணனின் துணைவியாக இருந்தாள். இவள் கண்ணனின் முறைப்பெண்.
நீளா என்றால், 'தலைவிகளுக்கெல்லாம் தலைவி!' ஏனெனில், இவளே தண்ணீரின் அதிபதி. செல்வம் இல்லாமல் வாழ்ந்து விடலாம். ஆனால், தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது.
நீளாதேவி யார் தெரியுமா?
கண்ணனின் வளர்ப்புத்தாய் யசோதையின் அண்ணன் கும்பன் என்பவனின் மகள். அயோத்தியை தலைநகராகக் கொண்ட கோசல தேசத்தின் அரசன்; கண்ணனுக்கு தாய் மாமன்.
தன் அத்தை மகன் கண்ணனை கணவனாக அடைய வேண்டும் என, நினைத்தாள், நீளாதேவி. ஆனால், தன் மகளின் திருமணத்துக்கு ஒரு நிபந்தனை விதித்திருந்தான், கும்பன்.
தான் வளர்க்கும் ஏழு காளைகளை ஒரே சமயத்தில் யார் அடக்குகிறாரோ, அவரே நீளாவை மணக்க முடியும் என்பது நிபந்தனை.
இந்த சாதனையை செய்பவருக்கு தன் மகளை மட்டுமல்ல, சீர் வரிசையாக, 10 ஆயிரம் பசுக்கள், 9,000 யானைகள், 9 லட்சம் தேர்கள் வழங்குவதாக அறிவித்தான். பிறகென்ன, எத்தனையோ வீராதி வீரர்கள் போட்டிக்கு வந்தனர். ஆனால், உயிரை இழந்தனர்.
தன் முறைப்பெண் தன்னை விரும்புவதை அறிந்த கண்ணன், இந்த போட்டிக்கு வந்தான். காளைகளை அடக்கி, நீளாதேவியை துணைவியாக அடைந்தான்.
திருப்பாவையில் நீளாதேவியை, நப்பின்னை என்று குறிப்பிடுகின்றனர். ஆண்டாள், தன் பாடலில், 'கொத்தலர் பூங்குழல் நப்பின்னை' என்று புகழ்கிறாள். கொத்து கொத்தாக பூச்சூடுவதில் நப்பின்னைக்கு மிகவும் பிரியம்.
திருமாலை நாராயணன் என்பர். 'நாரம்' என்றால் தண்ணீர். 'அயனன்' என்றால், சயனத்தில் இருப்பவன். நீளாதேவி தண்ணீரின் வடிவான கடல். அவள் ஆதிசேஷன் என்ற பாம்பையும், அதன் மேல் இட்ட மெத்தையில் படுத்திருக்கும் நாராயணனையும் தாங்கிக் கொண்டிருக்கிறாள்.
இதனால், மற்ற தேவியரை விட இவளுக்கு முக்கியத்துவம் அதிகம். பல பெருமாள் கோவில்களில், ஸ்ரீதேவி, பூதேவியுடன், நீளாதேவியும் அருள்பாலிப்பதைக் காணலாம்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகிலுள்ள பச்சைப்பெருமாள்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோவில் புகழ்மிக்கது. இங்கு, பெருமாளுடன் நீளாதேவி அருள் செய்கிறாள். இவளை வணங்கினால் தடையற்ற மழை கிடைக்கும்.
கடல் சார்ந்த பொருள் விற்பனை செய்பவர்கள், இவளை வணங்கி வர, வியாபாரம் விருத்தியாகும். மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்கு சென்று திரும்ப, இவளை வணங்குவது வழக்கமாக உள்ளது.
தி. செல்லப்பா