நகல் எடுக்கப் போறீங்களா...
அலுவல் சம்பந்தப்பட்ட எந்த வேலையாக இருந்தாலும், 'சிம் கார்டு' வேண்டுமென்றாலும், ஆதார் மற்றும் அரசின் அங்கீகார அத்தாட்சி சான்றிதழ்களின் நகல்களை கொடுக்க வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம்.
உலகமே டிஜிட்டல் முறைக்கு மாறி விட்டது. எந்த அளவு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறதோ, அதே அளவுக்கு குறுக்கு வழி தொழில்நுட்பமும் வளர்ந்து விட்டது.
சமீபகாலத்தில் புழக்கத்திலுள்ள அதி நவீன நகல் எடுக்கும் இயந்திரத்தில், 'மெமரி' வசதி இருக்கிறது. அந்த வசதியுள்ளதில், பட்டனை அழுத்தினால், நகலெடுக்கும் ஆவணங்கள் தானாகவே, அதில் பதிவாகி விடுகின்றன.
இம்மாதிரியான கடைகளை, சிலர் நோட்டமிட்டு, அணுகி, அதாவது, 'மெமரி'யில் பதிவான தனி நபர்களுடைய ஆவணங்களை, ஒரு ஆவணத்திற்கு குறைந்தது, 5 ரூபாய் கொடுத்து, வாங்கிச் செல்கின்றனர்.
பணத்திற்கு ஆசைப்பட்டு, இப்படி முறைக்கேடாக நடந்து கொள்கின்றனர், சில பணியாளர்கள்.
இதை வாங்கிச் செல்லும் நபர்கள், இந்த ஆவணங்களை வைத்து, 'சிம் கார்டு' முதல் வங்கி கடன் வரை, பலவிதமான மோசடிகளுக்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
எனவே, அன்பர்களே... முக்கிய ஆவணங்களை நகல் எடுத்த பின், 'மெமரி'யில் உள்ளதை, 'டெலீட்' செய்ய வற்புறுத்தவும்.
நகல் எடுக்க, பெரிய கடைகளுக்கு போவதை தவிர்த்து, சாதா இயந்திரங்கள் வைத்திருக்கும் கடைகளுக்கு செல்வது இன்னும் நல்லது.
- எம். ஜான்சிராணி, சென்னை.
திரையரங்கில் வித்தியாசமான நொறுக்ஸ்!
டவுனில் புதிதாக கட்டிய திரையரங்கு திறப்பு விழாவுக்கு என்னை அழைத்திருந்தார், கிராமத்து நண்பர் ஒருவர்.
திரையரங்கை சுற்றிப் பார்த்தேன். அங்கு அமைக்கப்பட்டிருந்த, 'ஸ்டால்'களில், கரும்பு ஜூஸ், கேழ்வரகு கூழ், இளநீர், மோர், குழி பணியாரம், முறுக்கு, வேர்க்கடலை உருண்டை, வறுத்த வேர்க்கடலை போன்ற கிராமத்து நொறுக்கு தீனிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
'என்ன, இம்மாதிரியான, 'ஸ்டால்'கள் வைத்திருக்கிறீர்கள்... எப்போதும் எல்லாரும் வைப்பது போல, சமோசா, 'சாண்ட்விச், பிசா, பர்கர்' மற்றும் அயல்நாட்டு குளிர் பானங்களுக்குத் தானே மவுசு. அதானே லாபம்...' என்று கேட்டேன்.
'அவை எல்லாம் உடம்புக்கு கெடுதல் தருபவை. சுற்று வட்டார ஏழை மக்கள், விவசாயிகள், வேலை முடிந்து பொழுதுபோக்க, திரையரங்குக்கு வரும்போது, உடம்புக்கு கேடு விளைவிக்காத இயற்கை உணவு வகைகள், இயற்கை பானம் மற்றும் உடம்புக்கு தெம்பூட்டும் பொருட்களை தான் விற்பனை செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தேன்.
'அடிப்படையில் நான் ஒரு விவசாயி. என்னை போன்ற பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை செழிக்க வைக்கவே, இதுமாதிரியான, 'ஸ்டால்'களை திறந்துள்ளேன். இதனால், நினைத்ததை விட நல்ல வரவேற்பு...' என்றார்.
மாற்றி யோசித்து, நல்லது செய்தவரை, மனதார பாராட்டி வந்தேன்.
— ஆனந்த் ஸ்ரீனிவாசன், சென்னை.
வியக்க வைத்த சமூக அக்கறை!
ஒருநாள், என் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பரின் பையை யதார்த்தமாக பார்த்தேன். அதில், வாகனங்களில் ஒட்டும், 'ரிப்ளக்டர் ஸ்டிக்கர்' - ஒளி பிரதிபலிப்பான் ரோல் மற்றும் கத்தரிக்கோல் இருந்தது.
அதற்கான காரணத்தை கேட்டேன்.
'அலுவலகம் முடிந்து இரவு நேரங்களில் வீடு திரும்பும்போது, பழுது காரணமாகவோ அல்லது ஓய்வுக்காகவோ பின்புற விளக்குகள் எரியாமல் வாகனங்கள் சாலையோரங்களில் நிற்கும். அவை நிற்பது தெரியாமல், வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
'இதுபோன்ற வாகனங்கள் என் கண்ணில் படும்போது, அதில், 'ரிப்ளக்டர் ஸ்டிக்கரை' வெட்டி, ஒட்டி விடுவேன். இந்த ஸ்டிக்கரின் அவசியத்தை பற்றி, அந்த வாகன ஓட்டியிடமும் எடுத்துரைப்பேன். ஆதலால், இவை இரண்டையும் எப்போதும் என் பையில் வைத்திருப்பேன்...' என்றார்.
நண்பரின் சமூக அக்கறையை வெகுவாக பாராட்டினேன்.
ஸ்ரீதர் மாரிமுத்து, மீஞ்சூர், திருவள்ளூர் மாவட்டம்.