வெற்றிக்கு, 'நான் ஜெயிச்சுட்டேன்...' என்று கொண்டாடுவதும், தோல்வி வந்தால், 'தோத்துட்டேன்...' என்று, திண்டாடி சோர்ந்து போவதும், நம் வழக்கம்.
இன்பமோ துன்பமோ, வெற்றியோ தோல்வியோ, கஷ்டமோ நஷ்டமோ எல்லாம் நம்மால் தான் நடக்கிறதா... எல்லாவற்றுக்கும் நாம் தான் காரணமா?
சரியாய் யோசித்துப் பார்த்தால், நம்மால் இங்கே தனியாக ஒரு துரும்பைக் கூட நகர்த்த முடியாது என்பது புரியும்.
இவ்வுலகில் நாம் கருவானதும், உருவானதும் நம்மாலா? நம் ஒவ்வொரு செயலுமே அப்படிதான். அந்தந்த தருணத்தில், சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப, சுற்றி இருப்பவர்கள் நம்மை இயக்குகின்றனர், தோள் கொடுக்கின்றனர் அல்லது அதேபோல், நாம் பிறரை இயக்குகிறோம்.
அப்படி, பொது வாழ்வில் என்னைச் சுற்றியுள்ளவர்களாலும், நட்பாலும் இயங்கின அல்லது இயக்கப்பட்ட ஜாம்பவான்களுடனான, 35 ஆண்டு எழுத்துப் பயணம் அரபு நாட்டு சேவை பணியில், 25 ஆண்டு சுவையான, சுகமான, சிலிர்ப்பான சிறப்பான அனுபவங்களுடன் சிக்கல், இடைஞ்சல், சந்தித்த சோதனைகளையும், சாதனையாக்க நட்பு மற்றும் வி.ஐ.பி.,க்களுடன் சேர்ந்து சீண்டின, தாண்டின சம்பவங்கள் அனைத்தையும், 'பளிச் பளிச்'சாக பகிரும் தொடர் இது.
இந்த பயணமும், வாய்ப்பும் வேறு எந்த எழுத்தாளருக்கும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. அந்த வகையில், இது என் பாக்கியம்!
இதை நல்கிய, 'வாரமலர்' இதழ் பொறுப்பாசிரியருக்கு, நன்றி கலந்த வணக்கங்கள்!
இனி...
நம்மவர்கள், உலகம் முழுக்க, எத்தனையோ வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். பல பெரிய பெரிய பதவிகள் எல்லாம் வகித்து வருகின்றனர்.
அதிலும், அரபு நாட்டு வேலை என்பது பலருக்கும் பெரும் கனவாக, பணம் காய்ச்சி மரமாக கருதப்பட்டு வருகிறது.
அரபி மொழி பேசும் நாடுகள் மொத்தம், 40 இருக்கின்றன. சவுதி, ஈரான், ஈராக், துபாய், கத்தார் என்று, பல பெரிய நாடுகள் இருக்கும்போது, குட்டி நாடான குவைத் மட்டும் மிகப் பிரபலமாகிக் கொண்டிருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.
அதற்கு முதல் காரணம், ஈராக் முன்னாள் அதிபரான சதாம் உசேன். அவர், குவைத் மேல் போர் தொடுத்து, உலகம் முழுக்க அந்நாட்டை பிரபலப்படுத்தினார். அடுத்து, உலகிலேயே அதிகமான அதன் பண மதிப்பு; ஒரு குவைத் தினார் என்பது, நம்மூர் மதிப்பில், 240 ரூபாய்!
அடுத்து, சமீபத்தில் நம் தேவைக்கு அதன் ஆக்சிஜன் விநியோகம்!
எழுத்தாளன் என்பதாலும், பத்திரிகை தொடர்பு இருப்பதாலும், அடியேனும் குவைத்தை பற்றி அடிக்கடி எழுதி இருக்கிறேன்.
சொர்க்கமும், நரகமும் அவரவர்களுக்கு கிடைக்கும் வேலை, சம்பளம், வசதியைப் பொறுத்தே அமைகிறது. பாதி பேர் சந்தோஷத்தில்; மீதி பேர் ஏன் வந்தோம் என்ற துயரத்தில்!
இந்த முயற்சியின் நோக்கமே, வளைகுடா நாடுகள் கனவுகளில் மோகம் கொண்டிருப்பவர்களின் அறியாமையைப் போக்குவது தான்.
அரபு நாடுகளில் எத்தனை கஷ்டப்பட்டாலும், அவற்றை மறைத்து, ஊர் திரும்பும்போது, என்னவோ அங்கே ராஜ வாழ்க்கை வாழ்ந்தது போல காட்டிக் கொள்கின்றனர், பாமரர்கள்.
அங்கே அவமானப்படுவதோ... வெயில், குளிரில் கஷ்டப்பட்டு, சரியான ஆகாரம் கூட இல்லாமல் சேமித்து, ஊருக்கு அனுப்புவதோ... உள்ளூரில் இருப்பவர்களுக்கு தெரிவிக்காமல் பந்தா விடுவதோ தான், அவர்கள் செய்யும் மாபெரும் குற்றம்.
படித்து, குறிப்பிட்ட துறையில் முன் அனுபவம் உள்ளவர்கள், முறைப்படி, 'இன்டர்வியூ' செய்யப்பட்டு, எழுத்துப்பூர்வ வேலைக்கு, 'ஆர்டர்' பெற்று, பணிபுரிபவர்களுக்கு பிரச்னையில்லை. அவர்களுக்கு சம்பளம், டிக்கெட், விடுமுறை மற்றும் இதர வசதிகள், ஒப்பந்தத்தில் உள்ளபடி கிடைத்து விடுகின்றன.
நம் கவலை எல்லாம் பாமரர்களை பற்றி தான். கடை வேலைக்கு என்று சொல்லி, 70 ஆயிரம் - 1 லட்சம் ரூபாய் செலவு பண்ணி, அழைத்துப் போய், அங்கே, ஆடு - ஒட்டகங்களை மேய்க்க விடும் அவலங்கள் நடக்கின்றன.
ஊரில் ஏஜன்ட்டுகளிடம் பணம் கொடுத்து, வெறும் வாய் வார்த்தைகளை நம்பி பறப்பவர்களுக்கு சிக்கல்.
எந்த காரியத்திற்கும் திட்டமிடல் மிக முக்கியம். ஆனால், திட்டமிட்டவைகளே தோற்றுப் போவதும் உண்டு. சில சமயம், எந்தவித லட்சியமுமின்றி, அது ஆல மரம் போல வளருவதும் உண்டு.
'குவைத் - இந்தியன் பிரன்ட்லைனர்ஸ்' அமைப்பு, இதில் இரண்டாம் ரகம்.
இதை நான் திட்டமிட்டு ஆரம்பிக்கவில்லை. இதற்கு வித்திட்டவர், 'இலக்கியவீதி' இனியவன். அவர் மூலம் அறிமுகமான, 'தொழில் முதலீடு' இதழ் ஆசிரியர், அரிதாசன்.
நம் நாட்டில் தொழில் செய்வதே கஷ்டமாக இருக்கிறது. அப்படி இருக்க, அரபு நாட்டில், நம்மவர்கள் தொழில் செய்து, பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை தருகின்றனர் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
'வெற்றிகரமாய் செயல்படும், குவைத்திலுள்ள இந்திய சாதனையாளர்களை பற்றி தொடர்ந்து எங்களுக்கு எழுத முடியுமா...' என்று, கேட்டார்.
அப்படி எழுத ஆரம்பித்து உருப்பெற்றது தான், 'இந்தியன் பிரன்ட்லைனர்' புத்தகங்கள்!
அதன் முதல் தொகுதியை, 'இலக்கியவீதி' அமைப்பு சென்னையில் வெளியிட்டது.
அதில், சுஜாதா, தென்கச்சி சுவாமிநாதன், லியோனி, லேனா தமிழ் வாணன், கல்கி ராஜேந்திரன் போன்ற ஜாம்பவான்கள் கலந்துகொண்டனர். தலைமை தாங்க, ஜி.கே.மூப்பனாரை அழைத்தால், அகில இந்திய வெளிச்சம் கிடைக்கும்; அது, குவைத்திலும் எதிரொலிக்கும் என முடிவாயிற்று.
அதற்காக, அந்துமணி அவர்களை அணுக, அவர் உடனே, தலைமை நிருபரான நுாருல்லாவை அனுப்பி, அவரது சம்மதத்தைப் பெற்றுக் கொடுத்து விட்டார். 'இந்தியன் பிரன்ட்லைனர்ஸ்' புத்தகத்தின் முதல் பாகம், சென்னையில், செப்., 8, 1998ல் சிறப்பாக வெளியிடப்பட்டது.
ஆனால், எல்லா நேரங்களிலும் நிகழ்ச்சி இது மாதிரி சுலபமாய் நடந்து விடுவதில்லை.
ஒரு எழுத்தாளனாய் இருக்கும்போது கிடைக்காத அனுபவங்களும், சுவாரஸ்யங்களும், விழாக்கள் மூலம் எனக்கு கிடைத்திருக்கின்றன.
குவைத்தில் பணிபுரிந்த காலகட்டத்தில், நானே முன்னின்று பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன்; சிலவற்றிற்கு துணையாக இருந்திருக்கிறேன்.
ஒரு நிகழ்ச்சியை முடிப்பதற்குள் ஏகப்பட்ட நெருக்கடிகள். அதுவும் அரபு நாட்டில், சட்ட திட்டம், விசா, ஸ்பான்சர் என்று, தாவு தீரும்.
விழாவிற்கு முனைப்புடன் ஏற்பாடு செய்தாலும், திருப்தியாய் நடக்க விடாமல் இடையூறுகள் மட்டுமின்றி, பேரிடிகளும் கூட விழுவதுண்டு.
அப்படி ஒரு பேரிடி, இசைஞானி இளையராஜா மூலமாக...
— தொடரும்
என். சி. மோகன்தாஸ்