பா - கே
சனிக்கிழமை மதிய வேளை...
உண்ட மயக்கம் கண்களை சுழட்ட, லேசாக, 'சாமியாடி' கொண்டிருந்தனர், உதவி ஆசிரியைகள்.
இதைப் பார்த்த லென்ஸ் மாமா, 'இப்பப் பாரு அவங்களை சுறுசுறுப்பாக்குகிறேன்...' என்று, அவர்கள் அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.
எனக்கும் வேலை முடிந்து விட்டதால், அவர்களை கவனித்தபடியே அமர்ந்திருந்தேன்.
'வேலையெல்லாம் முடிஞ்சுடுச்சா... நாம ஒரு புதிர் விளையாட்டு விளையாடலாமா...' என்றார், மாமா.
அவரை, ஒரு சந்தேக பார்வை பார்த்தபடி, சம்மதித்தனர், உதவி ஆசிரியைகள்.
'நான் ஒரு கதை சொல்வேன். அதில், ஒரு குறிப்பிட்ட வார்த்தை அடிக்கடி இடம்பெறும். அது என்ன வார்த்தை, எத்தனை முறை இடம்பெற்றுள்ளது என்று கண்டுபிடிக்கணும், சரியா...' என்றார், மாமா.
'ஓ... சரியா கண்டுபிடிச்சிட்டா, சாயந்திரம் மொளகா பஜ்ஜி வாங்கித் தரணும்...' என்றனர்.
'சரி... சரி... ஆரம்பிப்போமா...' என்று கதையை சொல்ல ஆரம்பித்தார், மாமா:
ஒருநாள் காலை, என் பொண்ணு காலேஜுக்கு போறப்ப, 'அப்பா... கை செலவுக்கு பணம் கொடுங்க... நேத்தே கொடுக்க மறந்துட்டீங்க...'ன்னு சொன்னாள்.
நான் அவகிட்ட, 100 ரூபாயை கொடுத்து, 'நேத்து கொடுக்கலையே எப்படி சமாளிச்சே...'ன்னு கேட்டேன்.
'ஒரு தோழிகிட்ட, 50 ரூபா கைமாத்து வாங்கினேன்... ஏம்பா... மாசக் கடைசியானா, கையக் கடிக்குதுன்னு சொல்லிட்டிருக்கீங்களே...'ன்னு ஆச்சரியமாக கேட்டாள்.
'பின்ன என்ன செய்யிறது... உன் படிப்பு செலவுக்கே அப்பப்ப நிறைய பணம் கைய விட்டுப் போகுதே...'ன்னு சொன்னேன்.
அவள் காலேஜுக்கு செல்ல, நானும் ஆபீசுக்கு கிளம்பினேன். போகும்போது ஒரு நண்பர் வீட்டுக்கு போய், 'சம்பளம் வந்ததும் கொடுத்துடறேன். அவசரமா, 1,000 ரூபா வேணும்...'ன்னு கேட்டேன். ஆனா, அவரு கைய விரிச்சுட்டாரு. ஆபீசில் இன்னொரு நண்பர் எனக்கு கை கொடுத்தார். 1,000 ரூபா கிடைச்சது.
ஆனா, சாயங்காலம் ஆபீசிலேர்ந்து பஸ்ல வரும்போது, எவனோ ஒருத்தன் என் பாக்கெட்டில் பிளேடு போட்டு கைவரிசைய காட்டிட்டான். என்ன செய்ய, 'கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலை...' என்று, நினைச்சுக்கிட்டே வீடு வந்து சேர்ந்தேன்.
என் பொண்ணு காலேஜ் விட்டு வந்தவுடன், 'அப்பா... அம்மா பெயர்ல, நீங்க ஏதாவது சைடுல பிசினஸ் ஆரம்பிச்சா என்ன... கை நிறைய பணம் கிடைக்குமே...
'பிசினஸ் ஆரம்பிக்கணும்ன்னா கைவசம் கொஞ்சமாவது பணம் இருக்கணும். இல்லாட்டி, கைத்தொழில் ஏதாவது தெரிஞ்சிருக்கணும்...
'அம்மாவுக்கு தான் வித விதமா ஸ்வீட் செய்றது கை வந்த கலையாச்சே... விசேஷ நாட்களில் செய்து, அக்கம் பக்கத்தினருக்கு விற்பனை செய்யலாமே...' என்றாள்.
'உங்கம்மாவை கைப்பிடிச்ச உடனேயே ஒரு பார்ட்னரோடு சேர்ந்து, 'ஸ்வீட் ஸ்டால்' ஆரம்பிச்சேன். ஆரம்பிச்ச புதுசுல என்கிட்ட கையிருப்பு நிறைய இருந்துச்சு... அந்த பார்ட்னரும் முதல்ல எனக்கு வலது கை மாதிரிதான் இருந்தான். அப்புறம் தான் தெரிஞ்சது, அவனுக்கு கை சுத்தம் இல்லைன்னு... நிறைய பணத்தை கையாடல் பண்ணிட்டான்...' என்றேன்.
'அந்த பார்ட்னரை கையும் களவுமா பிடிச்சிருக்கலாமே...'
'நீ சொல்ற மாதிரியே அவனை பிடிச்சேன்... அதனால, எங்களுக்குள்ள லேசா கை கலப்பு கூட வந்துச்சு... என்ன செய்யிறது, அவன் ஒரு கைநாட்டு. பணத்தையெல்லாம் இஷ்டம் போல சொந்தக்காரங்களுக்கு கொடுத்து ஏமாந்துட்டான்.
'சரி, சரி அது போகட்டும். இப்ப ஒண்ணும் கெட்டுப் போகலை... நீ படிச்சு முடிச்சா, கை மேல் பலன் நிச்சயம் கிடைக்கும்...'
'நீங்க நினைக்கிற மாதிரியே நான் படிச்சு முடிச்சு, நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிப்பேன்...'
அந்த நேரம் பக்கத்து வீட்டுல புதுசா குடி வந்திருந்த ஒரு பெண்மணி, எங்க வீட்டுக்கு அவசரமா வந்தாங்க. அவங்க எங்கம்மாகிட்ட, 'என் குழந்தைக்கு திடீர்ன்னு சளி பிடிச்சு மூக்கு அடைச்சிருக்கு... எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை...' என்றார்.
'ஒரு கை மருந்து இருக்கு, கொண்டு வர்றேன்னு...' உள்ளே போனாங்க, என் அம்மா.
அதுக்குள்ள என் மனைவி, 'அத்தை... அது கைக்குழந்தை... மூச்சு விட முடியாம கஷ்டப்படுது... பிள்ளையார் கோவில் பக்கத்துல ஒரு டாக்டர் இருக்காரு... அவரு நல்ல கைராசி டாக்டர்... அவர்கிட்ட போய் உடனடியா குழந்தையை காட்டலாம்...'ன்னு சொன்னாள்.
நானும், மனைவியும், அந்த பெண் கூட துணைக்கு போனோம். டாக்டர், ஊசி போட்டு, மருந்து கொடுத்ததுல, குழந்தைக்கு குணமானது.
'டாக்டர்... ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு என்ன கைமாறு செய்யிறதுன்னே தெரியலே...'ன்னு கை குவித்து நன்றி சொன்னாங்க, அந்த பெண்மணி.
'நான் என் கடமையைத்தான் செஞ்சேன்... கடவுள் உங்களை கைவிடலை...'ன்னு பெருந்தன்மையா சொன்னாரு, டாக்டர்.
அந்த பெண்ணையும், குழந்தையையும் அவங்க வீட்டுல விட்டுட்டு, நானும், மனைவியும் எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சோம். அந்த நேரம், 'டிவி'யில, 'ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ... உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ...'ன்னு பாட்டு ஒலிச்சது.
நான் என் மனைவிகிட்ட, 'பாட்டு ரொம்ப நல்லாயிருக்கே... எந்த சினிமாவிலே...'ன்னு ஆர்வமா கேட்டேன்.
அதுக்கு என் மனைவி, 'கை கொடுத்த தெய்வம்...'ன்னு சொன்னாள்.
'கதை முடிந்தது. கண்டுபிடித்து விட்டீர்களா...' என்று கேட்டார், லென்ஸ் மாமா.
கை என்ற வார்த்தையை கண்டுபிடித்தவர்கள், எண்ணிக்கையை கோட்டை விட்டனர்.
'அப்பாடா... செலவு மிச்சம்... மணி, நீ சொல்லு...' என்று என்னிடம் கேட்க, நான், 30 என்று சரியான எண்ணிக்கையை கூற, 'நீ வா, போய் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டு வரலாம்...' என்று கூறி, அவர்களை கடுப்பேற்றினார்.
'நாம் செய்யும் செயல்களுக்கு கைகள் பயன்படுவது போல், பேச்சிலும் கை எவ்விதத்தில் எல்லாம் பயன்படுகிறது...' என்று வியந்தபடி, லென்ஸ் மாமாவுடன் கிளம்பினேன்.
ப
இறைவன் நமக்கு இலவசமாக கொடுத்த உறுப்புகளின் இன்றைய விலை:
* ஒரு செயற்கை பல் வைக்க ரூ.6,000
* மாற்று இதயம் பொறுத்த ரூ. 1.5 கோடி.
* செயற்கை இதயத்தின் விலை ரூ.80 லட்சம்
* ஒரு கிட்னி ரூ.30 லட்சம் (பொருத்த ஆகும் செலவு ரூ.20 லட்சம்)
* செயற்கை முடி வைக்க ரூ.2 லட்சம்
* ஒரு செயற்கை விரல் வைக்க ரூ. 1.5 லட்சம்
* செயற்கைக் கால் வைக்க ரூ.2 லட்சம்
* கண்ணுக்கு லென்ஸ் பொறுத்த ரூ.50 ஆயிரம்
* எலும்புக்கு பதிலாக, 'பிளேட்' வைக்க ரூ.50 ஆயிரம்
* கிட்னிக்கு பதிலாக ஒருமுறை டயாலிசிஸ் பண்ண ரூ.3,000
* இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க ரூ.45 ஆயிரம்
* ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க ரூ.50 ஆயிரம்
* ரத்தம் ஒரு யூனிட் வாங்க ரூ.2,000.
மேலும், உயிருக்கு விலை மதிப்பே இல்லை.
கோடி கோடியாக செலவழித்து, செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் அவை இயற்கை உறுப்புகள் போன்று செயல்படாது.
நம் மேல் அளவில்லா அன்பு வைத்த இறைவனுக்கே புகழனைத்தும்... அவருக்கே நன்றி சொல்வோம்!
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.