நேற்றிரவு கணேசனுக்கு சரியாய் துாக்கம் வரவில்லை. ஏதோ தொண்டையை அடைப்பது போன்ற ஒரு உணர்வு. திடுக்கிட்டு எழுந்தவர், தண்ணீரைக் குடித்தும், அதே உணர்வு காலை வரை நீடித்தது.
அலாரம், 6:00 அடிக்க, வாசல் அழைப்பு மணி அழைத்ததில், ஏதோ ஒரு அசம்பாவிதம் ஒலித்தது.
''சார், நான் பாரதி நகரிலிருந்து வர்றேன். சுப்பிரமணி, உங்க நண்பர் தானே?'' முன்பின் பார்க்காத ஒரு பையன்.
''நான் கணேசன். என் உயிர் நண்பன் தான் சுப்பிரமணி... நீங்க?''
''ஸாரி சார். இன்னிக்கு அதிகாலை, 5:00 மணிக்கு, 'ஹார்ட் அட்டாக்'ல தவறிட்டார். அவங்க வீட்ல சொல்லச் சொன்னாங்க,'' பதிலை எதிர்பாராது, வந்தவன் படியிறங்கினான்.
வாசலிலிருந்து ஹாலுக்கு வந்தவருக்கு லேசாய் தலை சுற்றியது.
சோபாவில் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திய பின், வெளியே புறப்பட்டார்.
சுப்பிரமணியின் வீட்டு பெயர், 'வணக்கம்!'
வாசலில், நேற்று வரை பயணித்த மாருதி கார் அனாதையாய் இருந்தது, ரெண்டு ரோஜா மாலைகளுக்கு நடுவில், ஹாலில் சுப்பிரமணி கிடந்தார்.
'டேய்... மணி, எல்லாத்திலேயும் என் கூட இருப்பியேடா. இப்ப மட்டும் நீ ஏன்டா என்னைய தனியா விட்டுட்டு... எப்படிடா...' கதறினார், கணேசன். அவருக்கு ஆறுதல் வார்த்தை சொல்ல யாருமில்லை.
அழுது வீங்கிய முகத்துடன் கண்களில் கண்ணீர் குளமாய், ஓரமாய் சுப்பிரமணியின் மனைவி, சுசீலா.
''என்னம்மா, ஒரு வார்த்தை சொல்லியிருந்தா ஓடோடி வந்திருப்பேனே... ஆஸ்பத்திரிக்கு அழைத்து போய், எப்படியாவது...'' பேச்சு வரவில்லை தொண்டை அடைத்தது, கணேசனுக்கு.
''இல்லைங்க... எனக்கே தெரியாம, என்னைய விட்டுட்டு போயிட்டாரு. காலைல, 6:00 மணிக்கு, 'வாக்கிங்' போக எழுந்திரிக்கலையேன்னு தொட்டா... இப்படி,'' தலையில் அடித்துக் கதறிய சுசீலாவை, கணேசனால் தேற்ற முடியவில்லை.
சிறிது நேரம் அமைதி காத்த கணேசன், ''அம்மா சுசீலா, உங்க பையன் மோகனுக்கு சொல்லியாச்சா... ஏன்னா, மோகன் கலிபோர்னியாவிலிருந்து கிளம்பி வர ரெண்டு நாளாவது ஆகுமே?''
''இல்லை... இனிமே தான். எனக்கு உறவுன்னு யாரு இருக்கா... நீங்கதான் உதவி செய்யணும்; அவருடைய மொபைல்போன்ல மோகன்னு நம்பர் இருக்கும். கொஞ்சம் பேசுங்க,'' என்ற சுசீலாவுக்கு, ஒரே படபடப்பு, கூடவே பயம் கலந்த நடுக்கம். பேச முடியாமல், மயங்கினாள்.
மோகன் நம்பருக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் கணேசன் அழைக்க, சற்று இடைவெளிக்குப் பின், ''ஹலோ... அப்பா நான் மோகன்,'' எதிர் முனையில், இந்திய ஆங்கிலம்.
''ஹலோ... நான் கணேசன், உங்க அப்பா சுப்பிரமணியத்தோட நண்பன். வந்து, இன்னிக்கு காலைல...'' வார்த்தைகள் வர மறுத்தது, கணேசனுக்கு.
''சொல்லுங்க... நேரா விஷயத்துக்கு வாங்க, அப்பா எண்ல நீங்க எப்படி?'' எதிர்முனை குரலில் சற்று கரகரப்பு.
''எப்படி சொல்வேன், உங்க அப்பா நம்மை விட்டு போயிட்டார். இன்னிக்கு காலை, 5:00 மணிக்கு,'' குரல் உடைந்து போனார், கணேசன்.
''அப்பா...'' அதிர்ச்சியாய் கேட்டது மோகனின் குரல்.
சில நிமிடங்கள் அழுகையில் கழிய, ''தம்பீ... தைரியமா இருங்க,'' தேற்ற முயன்றார், கணேசன்.
''எப்படி திடீர்னு? என்னால நம்ப முடியல. இப்ப நான் என்ன செய்ய?'' என்றான், மோகன்.
''தம்பீ, உடனே புறப்பட்டு வாங்க. உள்ளூரில் சொல்ல வேண்டியவங்களுக்கு உடனே தகவல் சொல்லிடறேன். நீங்க வந்தாத்தான் எல்லாம்,'' என்றார், கணேசன்.
''சார், நான் எப்படி? அப்பா, அம்மாவுக்கு சொந்தம், பந்தம் அதிகமா இல்ல. பாதி பேர் மேல போயிட்டாங்க. மீதி பேர் என்னைய மாதிரி வெளிநாட்டுல. என் நிலைமை என்னன்னா...'' மோகன் இழுக்க, ''தம்பீ, நிலைமையா?'' கணேசனுக்கு கோபம் தலைக்கேறியது.
''கொஞ்சம் புரிந்து உதவி பண்ணுங்க... சார், நீங்களே எப்படியாவது காரியத்தை முடிச்சுடுங்க. நான், 10 நாளுக்குள்ள வர முயற்சிக்கிறேன்.''
''மோகன்... செத்துப் போயிருக்கிறது உங்க அப்பா. இதில், நீ வராம எப்படி? இறைவா... என்னால நினைச்சுக் கூடப் பார்க்க முடியலை,'' தன்னையும் அறியாது கத்தினார், கணேசன்.
''சார், ப்ளீஸ்... நான் பறந்து வந்ததும், எங்க அப்பா திரும்ப வரப்போறாரா என்ன? அதனால், உடனே கிளம்பி வர முடியாது. ஒரு முக்கியமான புராஜெக்ட் முடிக்க ஒத்துகிட்டு இருக்கேன்; முடிச்சு குடுக்கணும். இல்லைன்னா, உடனே கிளம்பி வந்திடுவேன்,'' மீண்டும் தன் தரப்பு பதிலையே கூறினான், மோகன்.
''ஐயோ... தம்பீ, அது என்ன மண்ணாங்கட்டி புராஜெக்ட்? இந்த உலகத்திலே இதைவிட பெரிய தவறு வேற எதுவுமே கிடையாது. இது ஒரு எமர்ஜென்சி. அதுவும், அப்பா இறந்தும் நீங்க வரலைன்னா, புரிஞ்சுக்கப்பா... உடனே, விமானத்தில் புறப்பட்டு வா. சுப்பிரமணிக்கு நீ ஒரே வாரிசு,'' அனலாய் கொதித்தார்.
''சார், எனக்கும் என் கடமை புரியுது. விமானம் என்ன, ரயில் வண்டின்னு நினைச்சீங்களா... அதுவும் நம் ஊரு பொதுப் பெட்டியில் பாத்ரூம் ஓரமா, ஒட்டிக்கிட்டு வர்றதுக்கு?''
''ஒரு விஷயம் தம்பீ... நீங்க மெத்தப் படிச்சவங்க. உங்க உயர்வுக்காக, உங்கப்பா ஓடாய் உழைச்சு, உடம்பை தேச்சு, இப்ப கட்டையா கிடக்கிறாரு. அவருடைய ஆன்மா சாந்தி அடையணும்ன்னா, அது உங்க கையில்...
''நீங்க வைக்கிற, 'கொள்ளி'யில் தான் இருக்கு. இதுக்கெல்லாம் நேரம், காலம் பார்த்து வர முடியாது; இது கடைசி வாய்ப்பு. திரும்ப கிடைக்காது தம்பீ,'' குரல் உடைந்தார், கணேசன்.
''சார் நான் பேசறது, யதார்த்தம். இப்ப நானே தவறிப் போயிருந்தால், அப்பா என்ன செய்வார்?'' எதிர்முனையில், மோகன்.
''ஐயையோ தம்பீ... தயவுசெய்து அப்படி எல்லாம் பேசாத. ஆண்டவன் அருளாலும், இறந்து போன என் ஆருயிர் நண்பன் சுப்பிரமணி ஆசியாலும், நீ நுாறு வயசு வாழணும். இது என் ஆசை மட்டும் இல்லை... நிச்சயமா உங்க அம்மாவோடதும் கூட. சரி, காரியங்கள் எல்லாம்...'' கேட்டார், கணேசன்.
''கவலைப் படாதீங்க... மொத்தமா எல்லா காரியத்தையும் சேர்த்து செய்துடலாம். பணம் எவ்வளவு ஆனாலும் சரி, எப்படியும், மத்த எல்லாத்தையும், 'டிஸ்போஸ்' பண்ண நான் வரணுமே. ஆமா, அம்மா எங்கே கூப்பிடுங்க,'' என்றான், மோகன்.
ஜாடையாய், சுசிலாவை கணேசன் அழைக்க, பொங்கிய அழுகையை அடக்க முடியாது, வாயில் புடவைத் தலைப்பை திணித்து, அருகில் வந்தாள். பிறகு மனம் மாறி, ''வேண்டாம்; போனை வச்சுடுங்க. நான் பேச விரும்பலை,'' என்றாள், சுசீலா.
தன் உயிர் நண்பன் சுப்பிரமணி போன துக்கத்தை விட, அவன் பையன் மோகனின் வார்த்தைகள் இடியாக இறக்கியது. 'குபுகுபு'வென வழிந்த கண்ணீரை துடைக்க மறந்து, ஓவென அழுத கணேசனை, பக்கத்து வீட்டு பாலசிங்கம் தேற்றினார்.
''விடுங்க. இது தான் நடுத்தர, கொஞ்சம் மேல்தட்டு பெற்றோர்களோட நிலைமை. சார், நீங்களே இப்படி இடிஞ்சிட்டா, இவங்க நிலைமையை யோசிங்க. இனி, நடக்க வேண்டியதை பார்ப்போம்,'' என்று சொல்லி, செயலில் இறங்கினார்.
சுப்பிரமணியின் இறுதிக் காரியங்கள் துவங்கியது.
'யார் கொள்ளி போட?' துவங்கிய கேள்வி... தொடர் கதையாய், விடுகதையாய் கணேசனின் மனசுக்குள் எழ, தன் ஆருயிர் நண்பன் சுப்பிரமணியின் நினைவுகளை அசை போடத் துவங்கியது.
சுப்பிரமணியும், கணேசனும் பால்ய சினேகிதர்கள். படிப்பில் புலி, சுப்பிரமணி. கணக்கில், 'வீக்' கணேசன். மற்ற பாடங்கள் பரவாயில்லை. சுப்பிரமணி தான் தேர்வு சமயங்களில், கணேசனுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி, 10வது பாஸ் பண்ண வைத்தார்.
பின்னர், கணேசன் தன் அப்பாவின் கடை பக்கம் ஒதுங்க, சுப்பிரமணி மடமடவென பள்ளிப்படிப்பை முடித்து, இன்ஜினியர் ஆகி, கை நிறைய சம்பாதித்து, கல்யாணமும் சீக்கிரமே முடித்து விட்டார்.
சுப்பிரமணிக்கு ஒரே பையன், மோகன். ஆசை ஆசையாய் பையனை, 'கான்வென்டில்' படிக்க வைத்தார்.
'புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?'
இன்று, அமெரிக்காவில் இன்ஜினியர். லட்சக்கணக்கில் சம்பளம். மோகனை வழியனுப்ப, கணேசனும், சுப்பிரமணியுடன் விமான நிலையம் போயிருந்தார். அச்சமயம், 'டேய் சுப்பிரமணி, ஜமாய்ச்சிட்டே. வாழ்கையிலே முழுமையா வெற்றி அடைந்த மனிதன்னா நீதான்... என் பார்வையில, உன் குறிக்கோள் நிறைவேறிடுச்சு இன்னிக்கு...' என, பாராட்டினார், கணேசன்.
சற்று சோகமாய் சிரித்தபடியே, 'அவசரப்படாத கணேசா... அப்பா ஸ்தானத்துல, நான் என் கடமையை செய்துட்டேன். ஆனா, என் பையன், எனக்கு கடைசி கடமையை செய்ய வருவானா? விடை தெரியாத வினா... விடுகதை மாதிரி...' என்று, சுப்பிரமணி கண்ணைத் துடைத்துக் கொள்ள, 'டேய், என்னடா நீ, சந்தோஷமான நேரத்துல போய் இப்படி பேசிக்கிட்டு...' என்றார்.
'இல்லை கணேசா, நீ என் ஆத்ம நண்பன். ஏதோ தோணிச்சு சொல்லிட்டேன். ஆனா, இது யதார்த்தம். நம் நாட்டுல, பாதி நடுத்தரக் குடும்பங்களோட நிலைமை இது தான்.
'பையனைப் படிக்க வைக்க, ராப்பகலா உழைச்சு சேர்த்த கொஞ்ச நஞ்ச சொத்தையும் தொலைச்சு, வெளிநாட்டுக்கு அனுப்புறோம்... அவங்க நம்மளைக் காப்பாத்தி கரை சேர்ப்பாங்கன்னு நம்பி.
'ஆனா, அந்த நிமிஷத்தோட சரி, பெற்றோர் மேல அவங்க காட்டறப் பாசம்... திரும்ப அவங்க பெற்றோருக்கு என்ன செய்வாங்கன்னு ஆண்டவனுக்கே வெளிச்சம்...'
'சுப்பிரமணி, என்ன ஆச்சு உனக்கு... ரொம்ப உணர்ச்சிவசப்படாத. இப்படி பேச மாட்டியே...'
'பயப்படாதே கணேசா... மனசிலப் பட்டதை சொல்றேன். இதே பெரிய பணக்காரக் குடும்ப பசங்கன்னா, படிப்பை முடிச்சுட்டு, பிசினஸ் பண்ண, திரும்ப நம் நாட்டுக்கே வந்திடுவாங்க. ஆனா, நம் பசங்க அப்படியில்ல...'
'சுப்பிரமணி, விடு. நாம், நம்முடைய கடமையை சரியா செய்தாச் சந்தோஷம்தான். அதைப் பற்றி முதல்ல யோசிப்போம். மற்றதை, 'அவன்' பார்த்துக்குவான். நமக்குக் கடமை செய்ய ஆண்டவன் ஒருத்தரை நிச்சயமா அடையாளம் காட்டுவார்...'
'ஆமாடா... என்னையப் பொறுத்தமட்டில், அவன் யார் தெரியுமா? சுடுகாட்டில் பிணம் எரிந்து சாம்பலாகும் வரை பக்கத்திலேயே பாதுகாப்பா, பொறுப்பா நிற்கிறானே, அந்த வெட்டியான் தான். என்னதான் நெருங்கிய நட்பு, உறவுன்னாலும், பத்த வச்சு மறு நிமிஷமே ஓடி ஒளிஞ்சிடுவாங்க...
'அவன் ஒருத்தன் தான், நம் உடம்பை கரை சேர்க்கிற, 'கடமைவாதி!' ஆனா, நம் சமூகம் அவன் தொழிலை அசிங்கமா, அருவெறுப்பா பார்க்குது...'
''போதும், போதும்...'' தன்னையறியாமல் கத்திய கணேசன், தான் மயானத்தில் நிற்பதை உணர, சிறிது நேரம் பிடித்தது.
''சரி, கணேசனோட பையன் வரலை. அதனால், சுப்பிரமணிக்கு எல்லாரும் பொதுவா, 'கோவிந்தா' கொள்ளிப் போடுவோம்,'' என்று யாரோ சொல்ல, 'கடமைவாதி' தன் கடமையைத் துவங்கினான்.
அப்போதுதான், சுப்பிரமணியின் வார்த்தைகள் முழுமையாக கணேசனுக்கு புரிந்தது.
அடுத்தநாள், சுப்பிரமணியின் குடும்ப வக்கீல், கணேசனைப் போனில் அழைக்க, மீண்டும், 'வணக்கம்' வீடு போனார்.
''சுப்பிரமணி சார், எழுதின உயிலை வாசிக்கிறேன், கேளுங்க... சொத்து முழுவதும் என் மறைவுக்குப்பின், மனைவி சுசிலாவையேச் சேரும். இது, நான் உழைச்சு தேடிய சொத்து. அவள் மறைவுக்குப்பின், எனக்கு கொள்ளி வைத்த அந்த கடமைவாதியைச் சேரும். இதை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு... என் ஆருயிர் நண்பன் கணேசனைச் சேரும்...''
படித்து முடித்த வக்கீல், கணேசனை பார்த்து, ''புரியலையே எனக்கு. ரொம்ப வித்தியாசமாத் தெரியுது,'' என்றார்.
''காலம் வரும்போது அல்லது அவசியப்படும்போது நானே சொல்றேன், வக்கீல் சார். என் நண்பன் சுப்பிரமணி ரொம்பத் தெளிவு. வழக்கம் போல அவன் நல்ல, தீர்க்கச் சிந்தனைவாதி; புரட்சிக்காரன். அவன் செஞ்சது, நிச்சயமா ரொம்ப யதார்த்தமானது,'' என்று சோகமாய்ப் பதில் சொல்லி படியிறங்கிய கணேசன், அந்த, கடமைவாதியின் விபரம் சேகரிக்கப் போனார்.
கி. முரளிதரன்
வயது: 52. தென்னக ரயில்வேயில் பொறியாளராக பணிபுரிகிறார். கடந்த, 25 ஆண்டுகளாக, கதை, கட்டுரை, நாடகம் மற்றும் கவிதை ஆகியவற்றை எழுதி வருகிறார். மதுரை வானொலியில் இவரது நாடகங்கள், சிறுகதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.
இதுவரை, ஐந்து புத்தகங்களை எழுதி, வெளியிட்டுள்ளார்.
உலக தமிழ் பல்கலைக் கழகம் இவரது சிறுகதை நுாலை, இந்த ஆண்டுக்கான சிறந்த நுாலாக தேர்ந்தெடுத்துள்ளது.