டிச., 5, ஜெயலலிதா நினைவு தினம்
மு.நியாஸ் அகமது எழுதிய, 'மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை' ஜெயலலிதா டைரி குறிப்புகள் நுாலிலிருந்து:
கோவையில் நடைபெற்ற கைத்தறி கண்காட்சியில், 'சினிமா நட்சத்திரங்கள், தேச நலன் கருதி, கைத்தறி புடவைகளை தான் உடுத்த வேண்டும். தான் உடுத்துவது மட்டுமல்லாமல், தன் ரசிகர்களுக்கும் இதையே பரிந்துரைக்க வேண்டும்...' என்று பேசியிருந்தார், மா.பொ.சிவஞானம்.
இதை முன் வைத்து, அப்போது ஒரு வார இதழ், கட்டுரை தயார் செய்ய முடிவு செய்தது. அதாவது, ஒரு பிரபலத்தை, கைத்தறி புடவையை விற்க வைத்து, அந்த அனுபவங்களை கட்டுரையாக எழுதுவது. இதற்காக அவர்கள் தேர்வு செய்த பிரபலம், ஜெயலலிதா.
இதை, ஜெயலலிதாவிடம், அந்த பத்திரிகையின் நிருபர், திரைஞானி சொன்னவுடன், 'சரி, நான் வருகிறேன். ஆனால், எனக்கொரு சந்தேகம். என்னை ஏன் இதற்காக தேர்வு செய்தீர்கள்...' எனக் கேட்டர்.
'அதாவது, கைத்தறி புடவைகளை உடுத்த வேண்டும் என்று சொன்னவர் பெயர், சிவஞானம். நீங்கள் குடியிருக்கும் தெரு பெயர், சிவஞானம் தெரு. அதனால் தான்...' என்று ஒரு பதிலை சொல்லி சமாளித்திருக்கிறார், திரைஞானி.
ஜெ., சிரித்தபடியே, 'சரி... தெருத் தெருவாக தான் விற்க வேண்டுமா...' என்று தயக்கத்துடன் கேட்க, 'தெருத் தெருவாக கூவி விற்க வேண்டும் என்பதில்லை. தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்தால் போதும்...' என்றிருக்கிறார், திரைஞானி.
ஜெயலலிதா கைத்தறி புடவை உடுத்தியபடி, ஒரு மூட்டை கைத்தறி துணிகளுடன், புடவை விற்க நிருபருடன் சென்றிருக்கிறார். முதலில் அவர்கள் சென்ற இடம், அந்த சமயத்தில், ஜெ.,வுக்கு நெருக்கமாக இருந்த எழுத்தாளர், சிவசங்கரி வீடு.
ஏதோ ஒரு கட்டுரைக்காகதானே செல்கிறோம் என்றில்லாமல், புடவைகள் குறித்த விபரங்களை முழுவதுமாக தெரிந்து கொண்டு, 'இது, கோயம்புத்துார் காட்டன்; இது, காஞ்சிபுரம் காட்டன்; இது, கந்துவால்; இது, வெங்கடகிரி...' என்று, ஒவ்வொரு புடவையின் சிறப்பு குறித்தும் விளக்கியிருக்கிறார், ஜெயலலிதா.
'ஒரு காரியத்தில் ஈடுபட்டால், அதைப்பற்றி முழு விபரங்களையும் தெரிந்து, கொள்வார், ஜெ.,' என்று குறிப்பிட்டிருக்கிறார், திரைஞானி.
இதுபோல இன்னொரு சம்பவம்:
பாலா என்ற பத்திரிகையாளர், ஒரு திரைப்பட படப்பிடிப்பு நடக்கும்போது, ஜெயலலிதாவை பேட்டி காண சென்றிருக்கிறார்.
இவர் கேட்ட கேள்விகளுக்கு, ஜெ., சுவாரஸ்யமாக பதில் சொல்லிக் கொண்டிருக்க... அப்போது, அந்த படத்தின் கதாநாயகன் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.
தயக்கத்துடன் பாலா, அங்கிருந்து எழ... 'ஏன் எழுகிறீர்கள்... இப்போது நீங்கள் என் விருந்தாளி... யாருக்காகவும் எழுந்திருக்க தேவையில்லை...' என்றிருக்கிறார், ஜெ.,
இதை பின்னாளில், தான் எழுதிய ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார், பாலா.
நடுத்தெரு நாராயணன்