அன்புள்ள அம்மா —
என் வயது: 39. தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிகிறேன். 11 ஆண்டுகளுக்கு முன், ஒரு பெண்ணை காதலித்து, மணந்து கொண்டேன். எங்களுக்கு, 10 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
மத்திய அரசு பணியில் இருந்தார், மனைவி. மென்மையான மனம் கொண்டவர்; சைவ உணவுகளையே சாப்பிடுவார்.
மனைவியை எப்போதுமே சந்தேக வார்த்தைகளால் தேள் போல் கொட்டி கொண்டே இருப்பேன். என் அமில வார்த்தைகளால் மனம் புண்பட்டு அழுது விடுவார். தொடர்ந்து இரண்டு மூன்று நேரம் சாப்பிடாமல் இருந்து, தன்னை வருத்திக் கொள்வார்; கெஞ்சி, சாப்பிட வைப்பேன்.
முதலில் என் சித்திரவதைகளை அமைதியாக எதிர்கொண்டவர், ஒரு கட்டத்தில் வாய்விட்டு புலம்ப ஆரம்பித்தார்...
'நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணியிருக்கக் கூடாது. நான் மிகப்பெரிய தப்பு பண்ணிட்டேன். ஒரு காகத்துக்கும், ஒரு மணிப்புறாவுக்கும் காதல் வரலாமா?
'நீங்க என்னை கோடரியால் இரண்டாய் பிளந்தால் கூட இவ்வளவு வேதனைப்பட மாட்டேன். உங்கள் வசவுகள் மரண வேதனையை தருகின்றன. எங்காவது துார தேசத்துக்கு ஓடி விட மனம் விரும்புகிறது!
'விவாகரத்து தேவையில்லாமல் நாம் பிரிந்து விடலாமா... ஆயுட்காலத்துக்கு நாமிருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளக் கூடாது.
'உங்களை விட்டு பிரியும் நான், நிச்சயம் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன்; இன்னொரு ஆண் துணை தேட மாட்டேன். பிரிவு துயரில் நீங்களும், உங்கள் மகனும் துடிப்பதை ஒளிந்து நின்று, பார்த்து கொண்டே இருப்பேன்!'
இவ்வாறு உளறுவதை, கோபத்தில் கூறுவதாக நினைத்து, அஜாக்கிரதையாய் இருந்து விட்டேன். போட்டிருந்த நகைகளை கழற்றி வைத்துவிட்டு, கட்டிய புடவையுடன் காணாமல் போய் விட்டார், மனைவி.
ஒரு இடம் விடாமல் தேடி பார்த்து விட்டேன். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். 'டிவி'யில், செய்திதாளில் விளம்பரம் தந்தேன். உள்ளூர் முழுக்க போஸ்டர் ஒட்டினேன். மார்ச்சுவரி, அனாதை பெண் பிணங்களில் மனைவி முகம் தேடினேன்.
திருமணமான மூன்றாவது ஆண்டு காணாமல் போனவர், எட்டு ஆண்டுகளாக கிடைக்கவில்லை. அழுதேன்; புரண்டேன்; கதறினேன். தாடி வளர்த்தேன்.
'உன் பொண்டாட்டி எவனையோ இழுத்துக்கிட்டு ஓடிட்டா... அவளுக்காக அழுது புலம்பாம இன்னொரு கல்யாணம் பண்ணிக்க...' என, துாண்டி விட்டனர், உறவுக்காரர்கள்.
'உன் மனைவி ஒரு ரோஷக்காரி. அவ தற்கொலை பண்ணி செத்து போயிட்டா. அவ செத்துட்டான்னு எழுதி கொடுத்து, வேலை செஞ்ச எடத்ல அவளுக்கு சேர வேண்டிய பணத்தை வாங்கு...' என்கின்றனர், நண்பர்கள்.
என் மனதுக்குள் ஒரு நப்பாசை. மனைவி சாகவில்லை. எங்கோ ஒளிந்துகொண்டு தினம் தினம் நானும், மகனும் படும்பாடுகளை ரசிக்கிறார் என, நம்புகிறேன்.
உண்மையாகவே என் மனைவி உயிருடன் இருக்கிறாரா, இருந்தால் கிடைப்பாரா? அவரை தேடி கண்டுபிடிக்க வேறு வழிகள் இருந்தால் சொல்லுங்கள், அம்மா. கோகினுார் வைரத்தை தொலைத்துவிட்டு தேடும் எனக்கு, பாவ மன்னிப்பு உண்டா?
— இப்படிக்கு,
அன்பு மகன்.
அன்பு மகனுக்கு —
பொதுவாக மனைவியர், அனிச்சமலர்கள் போன்றவர்கள். கணவரின் கடுஞ்சொல்லுக்காக, 30 ஆண்டுகள் அவரிடம் பேசாமல் இருக்கும் மனைவியரை எனக்கு தெரியும். ஸ்திரிலோலன் கணவனை தண்டிக்க, அவனுக்கு குழந்தை பெற்றுத் தராமல், 'மெனோபாஸ்' வரை வன்மத்தை கடத்திய மனைவி ஒருத்தியை நேரில் சந்தித்திருக்கிறேன்.
அதே நேரம், மனைவியர் தொட்டால் சிணுங்கி அல்ல. உப்பு சப்பில்லாத வார்த்தைக்கு கோபித்து அழிசாட்டியம் பண்ணுவதில்லை, அவர்கள்.
வாராது வந்த மாமணியை தொலைத்து விட்டு, பரிதவிக்கிறாய் நீ.
உன் மனைவி உயிருடன் இருக்கிறாள் என்று, நானும் முழுமையாக நம்புகிறேன். நீ மறுமணம் செய்து கொள்ளாது மனைவிக்காக காத்திரு. ஆன்மிகத்தில் ஈடுபாடு உடைய மனைவியை, காசி, ராமேஸ்வரத்தில் தேடு.
வாரா வாரம் கோவிலுக்கு சென்று இறைவனிடம் பாவ மன்னிப்பு கேள். ஏழைகளுக்கு அன்னதானம் செய். நம்பிக்கையை விடாது ஒவ்வொரு ஆண்டும் பத்திரிகையில் விளம்பரம் செய்து, அதில், உன் மனைவியிடம் மன்னிப்பு கேள்.
'அப்பாவை தண்டிக்கிறேன் என்று, அப்பாவியான என்னையும் தண்டித்து விட்டாயம்மா. நீ இல்லாமல் வாடுகிறேன். எனக்கு அம்மாவாக இருக்க என்னிடம் வந்து சேர்ந்து விடு அம்மா. உன்னை நான் சந்தோஷமாக பார்த்துக் கொள்கிறேன்...' என, மகன் புகைப்படத்துடன் முறையிடும் விளம்பரத்தை, தமிழின் எல்லா முன்னணி தினசரிகளிலும் கொடு.
மனைவியின் நெருங்கிய தோழியரிடம் கண்ணீர் விட்டு அழு. உன் அழுகையை பார்த்து மனமிரங்கி, மனைவியின் தோழியர் உனக்கு உதவக்கூடும். பெண்களிடம் பதவிசாய் நடந்து கொள்ள மகனுக்கு கற்றுக்கொடு.
'மனைவி கிடைத்தால், திருப்பதிக்கு நடை பயணம் வந்து, தங்க தாலி உண்டியலில் போடுகிறேன்...' என வேண்டு. உன் மகன் படிக்கும் பள்ளிக்கு அவ்வப்போது
மனைவி வந்து பார்க்க சந்தர்ப்பம் இருக்கிறது. பள்ளி ஆசிரியைகளிடமும், வாட்ச்மேனிடமும் உன் நோக்கத்தை கூறி விசாரி.
உன் மனைவி கிடைக்க, நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன். உன் துயரமான வாழ்க்கை, கோபக்கார சாடிஸ்ட் கணவன்களுக்கு நல்ல பாடமாய் அமையட்டும்.
தொடர்ந்து நம்பிக்கை இழக்காமல் தேடு மகனே!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.