துண்டிலில் சிக்காத மீன் துப்பட்டாவில் சிக்காமலா போகும்?
மகன் குமரனுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும், மருமகள் பாமினியின் வயிற்றில் ஒரு புழு, பூச்சி உருவாகவில்லையே என்பது தான், பரிமளத்தம்மாவிற்கு குறையாக இருந்தது.
'அதென்ன புழு பூச்சி... அதுக்கு என்ன பேர் வைப்பீங்க அத்தை?' என, கேலியாக பாமினி பேசியதை ஆரம்பத்தில் ரசித்த பரிமளத்தம்மாள், வர வர எரிச்சலானாள்.
''அத்தை, நாங்க ரெண்டு பேரும் போய், 'டெஸ்ட்' பண்ணிக்கட்டுமா?''
''எனக்கு ஒண்ணும் குறையில்லை. நீ வேணா, 'டெஸ்ட்' பண்ணிக்க,'' என்றான், குமரன்.
எப்போதுமே, குமரனுக்கு ஈகோ அதிகம். எல்லாவற்றிலும் தான் சொன்னது தான் இறுதித் தீர்ப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.
''அதான் பாமினி சொல்றாள்ல... எதுக்கும் நீயும் கூடப் போய் ஒரு வாட்டி பார்த்துட்டு வந்துடேன்.''
''சும்மா இரும்மா... வேணும்ன்னா இன்னொரு கல்யாணம் கட்டி வை... புள்ளை பொறக்குதா பார்த்துடலாம்.''
''சரி சரி... முதல்ல நான் லேடி டாக்டரைப் பார்த்துட்டு வந்துடறேன். அப்புறமா முகூர்த்த நாள் குறிக்கலாம்,'' என்றாள், பாமினி.
ஒரு வாரமானது. வீட்டில் இனம் புரியாத இறுக்கம். யாருக்குமே காரணம் தெரியவில்லை.
அன்று -
''அத்தை, கொஞ்ச நாள் பொறந்த வீட்ல இருந்துட்டு வரட்டுமா? ரொம்ப நாளா குல தெய்வம் வழிபாடு தடைபட்டுட்டே போகுது... அம்மா சொல்லிட்டு இருக்காங்க.''
''நீ என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ, எனக்குப் பேரன் வேணும்.''
கிளம்பினாள், பாமினி.
எப்போதுமே பிறந்த வீட்டு நினைவுகள் இனிமையானவை.
கல்லுாரி ஹாஸ்டலில் தங்கிப் படித்த, தங்கை யாமினி, அக்காவுடன் சில நாட்கள் இருக்க வேண்டும் என்று வந்திருந்தாள். கலகலப்பாக இருந்தது, வீடு.
''அக்கா, ஒரு மாசம் தங்கப் போறியாமே... என்ன விசேஷம், ஆராரோ ஆரிராரோவா?'' கண் சிமிட்டினாள், யாமினி.
''ஆமாம்... ஆராரோ நீ யாரோ நான் யாரோ தான்.''
இருவரும் சிரித்தனர்.
''அத்தான் வரலியாக்கா? இன்னிக்கு மாதிரி இருக்கு. உன் கல்யாணத்தின் போது நான் சின்ன பெண். பாவாடையிலே பாயசத்தைக் கொட்டி அழுதுட்டு இருந்தப்போ, அத்தான் தான், என்னை சமாதானப்படுத்தி, டிரஸ் மாத்தி விட்டார். நைஸ் மேன்.''
யாமினி, மொபைலில் என்னவோ பார்த்துக் கொண்டிருக்க... சட்டென்று தங்கையின் கையிலிருந்த மொபைலை தட்டிப் பறித்தாள், பாமினி.
''அக்கா... ப்ளீஸ் பார்க்காதே,'' என்று கத்தினாள்.
அதிலிருந்த ஆடவனின் படத்தைப் பார்த்த பாமினி, ''இது என்ன?'' என்றாள்.
தலை குனிந்தாள், யாமினி.
பாமினி, யாமினி, அவர்களது அம்மா, மாமியார் பர்வதத்தம்மாள் மற்றும் குமரன் அனைவரும், குல தெய்வம் கோவிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.
'வேண்டுதல் எல்லாம் புருஷன் - பொஞ்சாதி சேர்ந்து பண்ணணுமாம்... எப்படியாவது உங்க மகனையும் கூட்டிட்டு, நீங்களும் வந்திடுங்க அத்தை...' என்று, அம்மா சொன்னதாக, கணவனையும், மாமியாரையும் வற்புறுத்தி அழைத்திருந்தாள், பாமினி.
'எனக்கு லீவே கிடையாது. ஷேத்திராடனம் போக நேரமில்லை...' என்று முதலில் சொன்னவன், பிறகு, மனம் மாறி வந்து விட்டான்.
அது, ஒரு மலைக் கோவில். முருகக் கடவுள் வீற்றிருக்கும் இடம்.
நுாறு படிகள் ஏற வேண்டும். பர்வதத்தம்மாளும், பாமினியின் அம்மாவும் மெல்ல கீழ் படியில் வந்து கொண்டிருக்க... பாமினி, 10 அடிகள் பின் நடக்க, குமரனுடன் போட்டி போட்டு, அவனுக்கு இணையாக நடந்தாள், யாமினி.
'இந்த முருகன் மாதிரி எனக்கு ஒரு அழகான பேரப் புள்ளையை கொடு முருகா... கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா...' என்று சம்பந்திகள் இருவரும் மனதுள் வேண்டி, காவடி எடுத்து, கோவிலை அடைந்தபோது, கோவில் மணி முழங்கிற்று.
அபிஷேக ஆராதனைகள் முடிந்து, பிரசாதம் பெற்று, வீடு திரும்பினர்.
மயக்கம் வருவதாக, வாசலிலேயே அமர்ந்த யாமினி, திடீரென்று வாந்தி எடுத்தாள்.
குடும்ப டாக்டரை அழைக்க, அவர் வந்து பார்த்துவிட்டு, ''கன்கிராட்ஸ்... யாமினி, கர்ப்பமா இருக்கா... எப்போ கல்யாணம் ஆச்சு?'' என்றார்.
டாக்டர் சென்றதும், ''அடிப்பாவி... பட்டம் வாங்கிட்டு வருவேன்னு படிக்க வைச்சா... அம்மா பட்டம் வாங்கிட்டு வந்திருக்கியே,'' என,
தலையில் அடித்து அழுதாள், அம்மா.
''இரும்மா விசாரிக்கலாம்,'' என்ற பாமினி, கணவனிடம், ''இதுக்குக் காரணம் நீங்கதானே?'' என்றாள்.
''ஐயோ, சத்தியமா எனக்குத் தெரியாது.''
''யாமினியோட மொபைல் போன்ல உங்க போட்டோ எப்படி?''
''அது, சாதாரணமா எடுத்தது. நான் எந்தத் தப்பும் பண்ணலை.''
பர்வதத்தம்மாளுக்கு ஏகக் குழப்பம்.
''சரி விடுங்க, இப்பவே டாக்டர்கிட்டே போகலாம்... இப்போதான், டி.என்.ஏ., டெஸ்ட் அது இதுன்னு நிறைய வசதிகள் இருக்கே. யாரும் பொய் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு போக வேண்டாம்னு பார்க்கறேன்.''
''நானே சொல்லிடறேன். என்னால அப்பா ஆக முடியாது,'' மெல்ல சொன்னான், குமரன்.
அனைவரும் திகைக்க, விவரித்தான், குமரன்.
அன்று...
இவன் பாமினியைப் பெண் பார்த்து சம்மதம் சொன்ன பின், நண்பர்களுடன் பைக்கில், 'ஜாலி ரைட்' கிளம்பினான். போட்டி போட்டு குடி மயக்கத்தில் பைக் ஓட்ட, விபத்தில் இவனுக்கும்,
இவன் நண்பனுக்கும் பலத்த அடி.
குமரனின் அம்மா பயந்து போய் விடபோகிறார் என்று, உண்மையை மறைத்து, திடீரென்று ஆபீஸ் வேலையாக வெளியூர் போனதாகவும், ஒரு வாரத்தில் வருவான் என்றும்
தகவல் அனுப்பி சிகிச்சையை தொடர்ந்தனர்.
'டிஸ்சார்ஜ்' ஆகும் நாளில், விபத்தின் காரணமாக பிறப்புறுப்பில் அடிபட்டு, விதைப் பைகள் சேதமடைந்து, மலடாகிய உண்மையை, குமரனிடம் கூறினார், டாக்டர்.
திருமணத்திற்கு சில தினங்களே இருந்த நிலையில் என்ன செய்வது என்று புரியாமல் மவுனம் காத்தான். பிறகு, பல பரிசோதனைகள் செய்த போதும், இவனால் தகப்பனாக முடியாது என்கிற உண்மை மட்டும் பூதாகரமாகத் தெரிய, கோபமும், ஆத்திரமும் வந்தது தான் மிச்சம்.
இதற்கிடையில், பேரப் புள்ளை கேட்டு, தாயின் நச்சரிப்பு... பரிசோதனை செய்து கொள்ள வற்புறுத்தும் மனைவி...
குமரன் பேசி முடித்ததும், தன் தங்கையின் கையிலிருந்த மொபைல்போனை எடுத்து, அதன் முகப்புப் பக்கத்தைக் காட்டினாள், பாமினி.
''இது, யாமினியின் பாய் பிரண்ட் புகைப்படம். இதைக் காட்டி என் சம்மதம் பெறத்தான் யாமினி இங்கே வந்திருக்கிறாள். இதைப் பார்த்ததும் தான் எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. உங்க வாயாலேயே உண்மையை வரவழைக்க தான், இப்படி ஒரு திட்டம் போட்டேன்.
''ஏன்னா உங்களைப் பத்தின உண்மை எனக்குத் தெரியும். திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன், என் சினேகிதியின் சகோதரனுக்கு விபத்து என்று அழைத்தனர். ஒரு பயங்கர உண்மையை சந்திக்கப் போகிறோம் என்று புரியாமலே, நான் உடன் சென்றேன்.
''நீங்கள் அடிபட்டு மயக்க நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தேன். என்னை அடையாளம் தெரிந்து கொள்ளாத நண்பர்கள், எல்லா உண்மைகளையும், என் சினேகிதியிடம் போட்டு உடைத்தனர்.
''ஊர் முழுவதும் பத்திரிகை கொடுத்து, உறவுகளை அழைத்து, திருமண ஏற்பாடுகளைச் செய்த பின், தந்தையும் இல்லாத தாய்க்கு எத்தனை சோதனைகள், எத்தனை அவமானங்கள்... உண்மை
தெரிந்தால், திருமணத்தை நிறுத்தி விடுவர்...
''வாழ்க்கை என்பது பிள்ளை பெற்றுக் கொள்வது மட்டுமல்ல... அன்பும் அறனும் உடைய இல்வாழ்வில் பண்பைப் பெற்றால் போதாதா?'' என்றாள், பாமினி.
திகைத்தான், குமரன்.
உண்மை தெரிந்தும் இவனை மன்னித்து ஏற்றிருக்கிறாள், பாமினி.
சுயநலத்தால் பண்பை இழந்த இவன்.
'துாண்டிலில் சிக்காத மீன் துப்பாட்டாவில் சிக்காமலா போகும்?' என்பர்.
''நிறைய கருத்தரிப்பு மையம் இருக்கு. நீ வேணா,'' என்றான், கண்ணீருடன் குமரன்.
''குழல் இனிது யாழ் இனிது தான். ஆனா, பெற்றால் தான் பிள்ளையா? ஏதாவது அனாதைக் குழந்தைக்கு வாழ்வு கொடுத்தா கூட அதுவும் ஒரு பிள்ளைப் பேறு தான். தேவகி வயித்துலே பிறந்த கண்ணன், யசோதையிடம் வளரவில்லையா... முருகனை கார்த்திகைப் பெண்கள் வளர்க்கவில்லையா?
''சூரிய கதிர்கள் தாமரையைத் தழுவவில்லையா... மேகத்திலிருந்து பொழிந்த மழைநீர் மீண்டும் ஆவியாக மாறி ஆகாயம் தாவவில்லையா...'' என்றாள், பாமினி.
பாமினியின் கரம் பற்றிய பரிமளத்தம்மாள், ''சீக்கிரமா குழந்தைங்க காப்பகம் போகலாம்... அதுக்குள்ள, உன் தங்கச்சிக்கு கல்யாண ஏற்பாடு பண்ணிடு... மறக்காம உன் லேடி டாக்டரையும் கூப்பிடு,'' என்றாள்.
அனைவரும் சிரிக்க... எங்கோ, 'கந்த சஷ்டி' பாடல் ஒலித்தது.
ஆரபி