கையில் குச்சியுடன் காட்டில் அலைந்தபடி, கண்ணில் கண்ட பாம்புகளை எல்லாம் கொன்று வந்தார், ருரு என்ற ரிஷி.
ஒருநாள், அவ்வாறு போகும்போது, வயதான, விஷமில்லாத தண்ணீர் பாம்பை பார்த்தவுடன், அந்தப் அதைக் கொல்ல முயன்றார், ருரு.
அப்போது, 'முனிவரே, உங்களுக்கு நான் சிறிதளவும் தீமை செய்யவில்லையே... எதற்காக என்னைக் கொல்ல வருகிறீர்கள்...' என, கேட்டது, தண்ணீர் பாம்பு.
'என் உயிருக்குயிரான மனைவியை, ஒரு பாம்பு கடித்து விட்டது. படாதபாடு பட்டு, நான் அவளை மறுபடியும் உயிருடன் மீட்டேன். அன்று முதல், பாம்பை எங்கு கண்டாலும் கொல்ல வேண்டும் என்பதற்காகவே, குச்சியும், கையுமாக அலைந்து கொண்டிருக்கிறேன்...' என்றார் ரிஷி.
'முனிவரே, மனிதர்களைக் கடிக்கும் பாம்புகள் வேறு. தண்ணீர் பாம்புகள், விஷப் பாம்புகளைப் போல தோற்றமளித்தாலும், இரண்டுக்கும் சுபாவம் வேறு வேறு. ஆனால், அடுத்தவர்களால் வரும் உபத்திரவ, துயரங்கள் மட்டும் ஒன்றாகவே இருக்கின்றன. வேத, தர்மங்கள் அறிந்த நீங்கள், தண்ணீர் பாம்புகளைக் கொல்வது தர்மமல்ல...' என்றது, பாம்பு.
தண்ணீர் பாம்பின் பேச்சால், ருருவின் கோபம் சற்று அடங்கியது; அவருக்கு, ஓர் உண்மை விளங்கியது. பாம்பு வடிவில் அங்கே தன்னுடன் பேசிக்கொண்டிருப்பது, ஒரு ரிஷி என்பதைப் புரிந்து கொண்டார்.
'சுவாமி, நீங்கள் பாம்பல்ல; யார், உண்மையைச் சொல்லுங்கள்...' என்று வேண்டினார். அதற்கு, தண்ணீர் பாம்பு சொன்ன கதை:
சகஸ்ரபாத் என்ற ரிஷி, தவசீலரான மற்றொரு ரிஷியுடன் மிகுந்த நட்போடு இருந்தார். அவ்வப்போது நண்பரைச் சீண்டுவதும், விளையாடுவதுமாக இருப்பார், சகஸ்ரபாத்.
ஒருநாள், நண்பர் தவத்தில் ஈடுபட்டிருந்தபோது, புல்லால் செய்யப்பட்ட ஒரு பாம்பை நண்பரின் மீது வீசி எறிந்து பயமுறுத்தினார், சகஸ்ரபாத்.
தவம் கலைந்த சீற்றத்தில்,'எனக்கு பயம் உண்டாவதற்காக, நீ எந்த பொய் பாம்பை துாக்கி எறிந்தாயோ, அதேபோல் நீயும் பாம்பாக ஆவாய்...' என, சாபம் கொடுத்தார், நண்பர்.
சாபம் பெற்ற சகஸ்ரபாத், நண்பரின் கால்களில் விழுந்து, சாப விமோசனம் வேண்டினார்.
'நண்பா... தண்ணீர் பாம்பாக இருக்கும் நீ, ருரு என்னும் உத்தமமான ரிஷியை சந்திப்பாய். அப்போது உன் சாபம் விலகும்...' என்றார்.
இந்த தகவல்களையெல்லாம் ருருவிடம் சொன்ன தண்ணீர் பாம்பு, 'சாபம் பெற்ற சகஸ்ரபாத், நான் தான். எனக்கு சாப நீக்கம் அளிக்கும் ருரு, நீங்கள் தான்...' என்று கூறி, தன் பாம்பு வடிவை விட்டு, பழையபடி சகஸ்ரபாத் எனும் ரிஷி வடிவை அடைந்தார்.
'ஒப்பற்ற தவசீலரே... பிராணிகளை இம்சிக்காமல் இருப்பதே முதல் தர்மம். அதுவும் உங்களைப் போன்ற ரிஷிகள், இப்படி செய்யலாமா... ஏதோ ஒரு விஷப்பாம்பு உங்கள் மனைவியை கடித்ததற்காக பாம்பினத்தையே அழிப்பேன் என்பது என்ன நியாயம்... பாம்புகளைக் கொல்லும் பாவச்செயலை விடுங்கள்...' என்று கூறி, அங்கிருந்து மறைந்தார், சகஸ்ரபாத்.
உள்ளத்தில் இருந்த கோபத்தை விட்ட ருரு, தெளிந்த மனதுடன் திரும்பினார்.
விளையாட்டு வினையாகும் என்பதை விளக்கும் இக்கதை, வியாசர் சொன்னது.
பி. என். பரசுராமன்