முன்கதை சுருக்கம்: மருத்துவமனையில் ஆராதனாவின் தாத்தா - பாட்டியிடம் தன்னை துரைராஜின் மகன் வினோத் என அறிமுகப்படுத்தி கொண்டான், விக்ரம்.
கோவளம் பீச்சில் ஆராதனா அறையவும் தடுமாறினான், விக்ரம். கூட்டத்தில் நிறைய பேர் இதை கவனித்தனர். சுற்றிலும் பார்த்து, அவன் எதுவும் பேசாமல் கன்னத்தை தடவியபடி, போய் விட்டான்.
அவன் போவதையே பார்த்தாள்.
''என்னம்மா ஒண்ணும் வாங்கலையா?''
''இப்பதான் தாத்தா ஒருத்தன் சரியா வாங்கினான். வாங்க போகலாம்,'' என்று புறப்பட்டாள்.
கொஞ்ச நாள் அவன் எங்கேயாவது வழியில் தென்படுகிறானா, எதாவது தகராறு செய்வானா என்றெல்லாம் யோசித்தபடியே அவள் வழக்கமான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். அவனை எங்கேயும் காணவில்லை.
'எந்த துரைராஜ் பையனா இருந்தா எனக்கென்ன?' என நினைத்தபடி, அவனை மறந்து போனாள்.
ஒரு சனிக்கிழமை, ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்த ஆராதனா, சாலையை கடந்து தன் காரருகே வந்தபோது திடுக்கிட்டாள்.
கார் அருகே, கையில் ஒரு லெதர் பையுடன் நின்றிருந்தான், விக்ரம்.
'அன்னிக்கு அடிச்சதுக்கு பழிவாங்க வந்திருக்கானா... பையில் கத்தி எதாவது இருக்குமா...'
அவன் சிரித்தபடியே, ''கொஞ்சம் பேசணும்,'' என்றான்.
'கிறுக்கனா இவன்...' என நினைத்தாள்.
அவளுக்கு ஆத்திரம் பொங்கி வந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் நிதானமாக, ''மிஸ்டர்... அடி வாங்கினப் பிறகும் உங்களுக்கு புத்தி வரலியா... ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சுக்கங்க... அவங்க என் ப்ரெண்டோட தாத்தா - பாட்டி.
''எனக்கு இங்க வேலை கிடைச்சதுனால, வயசானவங்களுக்கு துணையா இருந்துக்க சொன்னாங்க. அதனால, அங்கே இருக்கேன். அவங்க, ஏதோ என் மேல இருக்கற பிரியத்துல, 'உனக்கு, இந்த பையன் சரியா இருப்பா'ன்னு சொன்னாங்க. அதை நிஜம்ன்னு நம்பி வந்துடுவீங்களா... எனக்கு இதுல உடன்பாடு இல்லை. தயவுசெய்து வழி விடுங்க,'' என்றாள்.
''நானும் நீங்க நினைக்கிற மாதிரி துரைராஜோட பையன் இல்லை. அவர் யாருன்னே எனக்கு தெரியாது,'' என்றான், விக்ரம்.
''அப்படின்னா நீங்க யாரு... ஏன் என் பின்னாடி வர்றீங்க... சொல்லுங்க,'' என்றாள் பதட்டமாக.
''எங்கேயாவது உட்கார்ந்து பேசுவோமா?''
கோவிலுக்கு கொஞ்சம் தள்ளி மரங்கள் அடர்ந்த நிழல் தென்பட்டது. அருகே, டீக்கடையும் இருந்தது. அவன் தான் டீயும், வடையும் வாங்கினான். முதலில் அவள் தயங்கினாள்.
''உங்களுக்கு ரோடு கடையில் சாப்பிடறது பிடிக்கும்ன்னு தாத்தா சொன்னார்.''
அவள் எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டாள். சாப்பிட்டு முடிக்கும் வரை, இருவரும் எதுவும் பேசவில்லை.
''என் பெயர் அதர்வா. ஆன்மிக புத்தகங்களில் கோவில்களைப் பற்றி எழுதுவேன். பிரபலமான கோவில்களைப் பற்றி எல்லாருக்குமே தெரியும். பிரபலமாகாத, ஆனால், சக்தி வாய்ந்த கோவில்களை பற்றி நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை.
''சிதிலமடைஞ்ச கோவில்கள், சரியான பராமரிப்பு பூஜைகள் இல்லாத கோவில்கள் இதையெல்லாம் பற்றி நிறைய எழுதி இருக்கேன். இதுக்காக இந்தியா முழுக்க சுத்திகிட்டே இருக்கிறது தான் என் வேலை.
''இப்பக்கூட கேரளாவுல இருக்கிற சின்ன சின்ன கோவில்கள் பத்தி எழுத வந்தேன். ஓரளவுக்கு திருவல்லா, வயநாடு, வைக்கம் அப்படின்னு நிறைய இடங்கள் சுத்திட்டு, இப்ப திருவனந்தபுரம் வந்திருக்கேன்.''
''அது சரி, என்கிட்ட பேசணும்னீங்களே... அது என்ன?'' கேட்டாள், ஆராதனா.
''உங்களுக்கு கனவுகளிலே நம்பிக்கை உண்டா?''
''இல்லை.''
''எனக்கு உண்டு.''
''சரி, அதுக்கென்ன?''
''ரொம்ப நாளா என் கனவுல ஒரு பொண்ணு வந்துகிட்டே இருக்கா. பாவாடை தாவணி, சுடிதார், புடவைன்னு வெவ்வேறு உடையில். போகப்போக அவ என் கனவுல வராத நாளே இல்லேன்னு ஆயிடுச்சு.
''அப்படி ஒரு பொண்ணு இருக்காளா... இதுக்கு முன் அவளை நான் பார்த்ததே இல்லையே... எங்கேருந்து அவ என் கனவுல வரா... ஒரு சமயம் எது நிஜம், எது கனவு என்கிற மாதிரி ஒரு குழப்பமே வந்துருச்சு.''
ஞாபகமறதியில் சிகரெட்டை எடுத்தவன், ''சாரி!'' என்று பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.
''நீங்க ஏதோ கதை சொல்லி என் நேரத்தை, 'வேஸ்ட்' பண்ற மாதிரி தோணுது,'' என்று ஆராதனா எழுந்தபோது, ''இன்னும் கொஞ்சம் தான்,'' என்றான்.
அவள் உட்கார்ந்தாள்.
''எங்க பத்திரிகை ஆபீஸ்ல, படம் வரையறவர்கிட்ட என் கனவுல வந்த பொண்ணோட அடையாளத்தை ஒண்ணு விடாம சொல்லி வரைந்து கொடுக்கச் சொன்னேன். வரைந்து குடுத்தார். அப்படியே அச்சு அசலாக என் கனவுல வந்த பொண்ணு. பார்க்குறீங்களா?'' என்றவன், லெதர் பையிலிருந்து ஒரு ஆல்பத்தை எடுத்தான்.
வாங்கிப் பார்த்தவள், அதிர்ச்சி அடைந்தாள்.
ஒவ்வொரு பக்கத்திலும் கலர்கலராக எல்லாம் அவளே தான். போட்டோ மாதிரி இருந்தது. மரத்தில், ஊஞ்சலில், டூவீலரில் என்று விதவிதமாக போஸ்கள்.
கண்களை அகல விரித்து ஆச்சரியமாக பார்த்தவள், ''எப்படி?'' என்றாள்.
''எனக்கே தெரியலை. நிஜமாவே எங்கேயோ ஒரு பொண்ணு இருந்து அவ தான் என் கனவுல வந்திருக்கா. ஆனால், அவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்... ஏன் என் கனவுல வரணும்?''
அவனையே பார்த்தாள், ஆராதனா.
''இந்த கனவு மேட்டர் எனக்கு ஒரு புதிராகவே இருந்தது. கோவில் பத்தி எழுத, வெவ்வேறு ஊருக்கு போற போது கனவுல வந்த பொண்ணு எங்கேயாவது என் கண்ணுல படுவாளான்னு ஒருபக்கம் தேடுவேன். வீண் முயற்சி... இருந்தாலும், ஒரு நப்பாசை.
''அப்படி இங்க வந்தபோது தான், நீங்க ஒருநாள் வேகமா ஆஸ்பத்திரிக்கு கார்லே வந்து இறங்குனீங்க. உங்களைப் பார்த்ததும், துாக்கிவாரிப் போட்டது. என் கனவுல வந்த பொண்ணு பொய்யில்லை, நிஜம். அது நீங்கதான்னு தெரிஞ்சதும், மனசுக்குள்ள சந்தோஷமாய் இருந்தது. வானத்தில் பறந்தேன். நீங்க யாரு, நான் யாரு, என்ன தொடர்பு இது?''
கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள், ஆராதனா.
''நான் உங்களை தேடிக்கிட்டு உள்ள வர்றதுக்குள்ள நீங்க போயிட்டீங்க. நீங்க உங்க தாத்தாவை பார்க்க வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். இதையெல்லாம் அவங்ககிட்ட சொல்லி கேட்க முடியுமா? அறை வாசலிலேயே தயங்கி நின்னேன்.
''அறையில் இருந்த தாத்தாவும், பாட்டியும், என்ன வேற யாரோன்னு புரிஞ்சுகிட்டு, உங்களைப் பத்தின விபரம் எல்லாம் சொன்னாங்க. உங்களை பார்க்கணும், பேசணும்ன்னு பின்னாடியே அலைஞ்சேன். அடியெல்லாம் வாங்கினேன்.''
''ஐயாம் வெரி சாரி,'' என்றாள், ஆராதனா.
''பரவாயில்லை... இனிமே என்னை ஒரு பொறுக்கின்னோ, பொம்பள பின்னாடி சுத்துறவன்னோ நினைக்க மாட்டீங்களே?''
''நிச்சயமா இல்லை.''
''துரைராஜுக்குத்தான் நன்றி சொல்லணும். நம்ம ரெண்டு பேரையும் சந்திக்க வெச்சதுக்கு.''
''ஆமா,'' என்றாள், சிரித்தபடி.
''எப்ப வேணும்னாலும் இந்த நம்பர்லே கூப்பிடலாம். நீங்க கூப்பிட்ட உடனே எடுப்பேன்,'' என்று, 'விசிட்டிங் கார்டை' தந்து, பலமான அஸ்திவாரம் போட்டு விட்ட மகிழ்ச்சியில் சிரித்தபடி போனான், அதர்வா (எ) விக்ரம்.
இரண்டு மூன்று நாட்களாக விக்ரமை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள், ஆராதனா.
'அவன் பேசணும், பேசணும்ன்னு வந்தபோது, புரிஞ்சுக்காம திட்டினேன். 'பீச்'சுல, எல்லார் முன்னாடியும் அறைஞ்சேன். அவன் என்னை பார்த்து ஆச்சரியப்பட்ட விஷயத்தை பற்றி பேச வந்திருக்கான். அவ்வளவுதானே!
'ச்சே... என்ன அவசரப் புத்தி எனக்கு. துரைராஜ் பையன் இவன்னு நினைச்சு குழப்பிக்கிட்டு, என்ன மடத்தனம் பண்ணிட்டேன். ஆனாலும், எப்படி நான் அவனோட கனவுல வந்திருக்க முடியும்?' என குழம்பினாள்.
கார் ஓட்டும்போதும், ஹோட்டலில் வேலையில் இருந்தபோதும், திரும்பத் திரும்ப இதே நினைவுகள் வந்து போயின. அன்று இரவு டின்னருக்கு, பிஸிபேளா, புலவ், சப்பாத்தி, தயிர் சாதம் எல்லாம் அவள் வேலை செய்யும் ஹோட்டலில் இருந்தே வீட்டுக்கு வாங்கி வந்திருந்தாள். தாத்தா, பாட்டியுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
''பாட்டி கனவுங்கிறது நிஜமா பொய்யா?''
''நமக்கு சாதகமாக இருந்தால் நிஜம்... இல்லைன்னா பொய்,'' என்று சிரித்தாள், பாட்டி.
''ஐயோ... நான் சீரியஸா கேக்கறேன்.''
''நான் சொல்றேம்மா... நாம் பார்த்த சந்தோஷமான விஷயங்கள், மனசுல நாம் நினைச்சுக்கிட்டே இருக்கிற விஷயங்கள், மனச பாதிச்ச விஷயங்கள் எல்லாம் தான் கனவாக வரும். சில கனவுகள் பலிக்கும். அது தற்செயல் தான்.
''சில கனவுகள் துாங்க விடாது. சில கனவுகள் மறுபடியும் மறுபடியும் வரும். பொதுவாக கனவுகளில் கோர்வை இருக்காது. ஏம்மா திடீர்னு கேட்கறே?''
''அது வந்து தாத்தா... முன்னபின்ன தெரியாத, அறிமுகமில்லாத ஒரு பெண், ஒருத்தரோட கனவுல தொடர்ந்து வர முடியுமா?''
''வாய்ப்பே இல்லம்மா... ஆனா, அப்படி யாருக்காவது வந்தால் அது அபூர்வம். ஒருவேளை பூர்வஜென்ம தொடர்பா இருக்கலாம். தெரியலை,'' என சிரித்தார்.
''ஏன் உன் கனவுல யாராவது வர்றாங்களா?'' கேட்டாள், பாட்டி.
''இல்ல பாட்டி, இன்னிக்கு ஹோட்டல்ல சும்மா பேசிகிட்டு இருந்தோம். அதான்...''
இரவு முழுவதும் ஆராதனாவுக்கு துாக்கம் வரவில்லை.
— தொடரும்.
கோபு பாபு