'கொரோனா தொற்றில் இருந்து முற்றிலும் வெளியில் வந்து விட்டேன். ஆனாலும் இயல்பாக எந்த வேலையும் செய்ய முடியவில்லை; படுத்துக் கொண்டே இருந்தால் தேவலை என்று இருக்கிறது; எழுந்திருக்க முடியவில்லை' என்று சொல்பவர்கள் வயது வித்தியாசம் இல்லாமல் நிறைய பேர் இருக்கின்றனர்.
தாங்களாகவே தங்கள் வேலையை செய்ய முடியாமல், மற்றவரை சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. என்ன செய்தால், பழைய நிலையை அடைய முடியும் எனக் கேட்கின்றனர். படுக்கையில் இருப்பவர்களை ஒன்று என்றும், ஆரோக்கியமாக இருந்தால் ஐந்து என்றும் சொன்னால், ஒன்றில் இருந்து ஐந்தை படிப்படியாகத் தான் எட்ட வேண்டும்.
தொற்றுக்கு பின் உடல், மனநிலையில் என்ன பிரச்னை உள்ளது என்பதை தெரிந்து, அதற்கேற்ப மருத்துவ ஆலோசனை, வழிகாட்டுதலுடன் பயிற்சிகளை செய்ய வேண்டும். நடக்க முடிகிறது... படியேற சிரமமாக இருக்கிறது என்றால், அதற்கு தகுந்தவாறு பயிற்சி செய்வது அவசியம்.
இப்படி அவரவரின் தேவைக்கு தகுந்த உடற்பயிற்சிகளை, தகுந்த பயிற்சியாளரின் கண்காணிப்பில், முழுமையாக புரிந்து பயிற்சி செய்தால் தான், பழைய நிலைக்கு திரும்ப முடியும். உடலுக்கு மட்டும் இல்லாமல், மனதிற்கும் சேர்த்து பயிற்சி கொடுக்க வேண்டியது முக்கியம். தொற்றில் இருந்து வெளியில் வந்தவர்களுடன், அவர்களுக்கு விருப்பமான விஷயங்கள் குறித்து பேசும் போது, மனதிற்கு இதமாக இருக்கும்.
உடற்பயிற்சி, மனப்பயிற்சிக்கு பிராணாயாமம் செய்வதுடன், ஆரோக்கியமான உணவும் இருந்தால், சிறிது சிறிதாக மாற்றங்களை உணர முடியும். 40 வயதிற்குட்பட்டவர்கள் பயிற்சி செய்தால், சில வாரங்களில் பழைய நிலைக்கு வரலாம். வயதானவர்களுக்கு அதிக காலம் பிடிக்கும் என்பதும் தவறான கருத்து. யாராக இருந்தாலும், பிரச்னையில் இருந்து வெளியில் வர வேண்டும் என்ற உத்வேகமும், முயற்சியும், நம்பிக்கையும் தான் முக்கியம்.
தினமும் குறைந்தது, 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, பயிற்சி செய்யும் போது தசைகளின் ஆரோக்கியத்திற்கு உதவும். விளையாட்டு வீரர்கள் பயிற்சி மற்றும் போட்டிகளின் நடுவே அவ்வப்போது மிடறு மிடறாக தண்ணீர் குடிப்பதற்கு காரணம், நீர்ச்சத்து உடலில் குறையும் போது, மெல்லிய தசைநார்கள் ஒட்டி பாதிப்பு வராமல் இருப்பதற்காக தான்.
டாக்டர் கண்ணன் புகழேந்தி,
ஸ்போர்ட்ஸ் மருத்துவம், சென்னை.
96596 50000