மார்கழி என்றால் கோலம் போடுவது, பூசணிப் பூ வைப்பது, பஜனைக்கு செல்வது, கோவிலில் விசேஷ பூஜை நடத்துவது என்ற அளவில் நமக்கு தெரியும். இந்த மாதம் பற்றி தெரியாத சில விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
மார்கழிக்கு, மார்க்கசீர்ஷம், அக்ரஹாயணம் மற்றும் ஹேமந்தம் என்று பெயர்கள் உண்டு. மார்க்கசீர்ஷம் என்றால், உயர்வான வழி; அதாவது, கடவுளை அடையும் வழியே உயர் வழி என்று அர்த்தம். இதற்கு இந்த மாதம் வழி காட்டுகிறது.
அக்ரஹாயணம் என்றால் முதல் பயணம். தட்சிணாயணம் எனும் சூரியனின் தெற்கு நோக்கிய பயணத்தின் கடைசி மாதம். இக்காலத்தில், காலையில், 6:00 மணிக்கு எழும் பழக்கமுள்ளவருக்கு, 5:30 மணிக்கே துாக்கம் கலைய ஆரம்பிக்கும்.
அதுபோல், தேவர்கள் ஆடியில் துாங்க ஆரம்பித்து, தை முதல் நாள் எழுவர். அதற்கு முன்னதாக மார்கழியில் துாக்கம் கலையும். தேவர்களின் துாக்க காலத்தில், நம் முன்னோர் நம்மை பாதுகாப்பர். இதனால் தான் ஆடி, புரட்டாசி, மார்கழி மாத அமாவாசைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழகத்தில், மார்கழி அமாவாசை பற்றி அதிகம் தெரியவில்லை.
வடமாநிலத்தவர் இம்மாத அமாவாசை மட்டுமின்றி, 30 நாளுமே தொடர்ச்சியாக தர்ப்பணம், சிரார்த்தம் செய்து, முன்னோரை மகிழ்விப்பர். இவ்வாறு செய்வது முன்னோரை மட்டுமின்றி, சூரியன், அக்னி, சிவன், விஷ்ணுவையும் மகிழச் செய்யும் என, நம்புகின்றனர்.
ஹேமந்தம் என்றால் குளிர்காலம். சூரியனுக்குரிய திதி சப்தமி. மார்கழி வளர்பிறை சப்தமியை, 'மித்ர சப்தமி' என்பர். 'மித்ர' என்றால் நட்பு.
மார்கழியில் குளிர் அதிகம் வாட்டும். அப்போது, சூரியனே நம் நண்பனாக இருந்து, வெப்பம் தருகிறார். இதனால், உடல் வெப்பத்தில் சமநிலை கிடைக்கிறது. இதற்கு நன்றி கூறும் விதத்தில், சூரியனுக்கு பூஜை செய்வர். அன்று பழங்கள் மட்டும் சாப்பிட்டு, மறுநாள் அஷ்டமியன்று, இனிப்பு சாப்பிட்டு விரதம் முடிப்பர்.
வடமாநிலங்களில் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டி, இம்மாதம் முழுவதும் காத்யாயனி விரதத்தை அனுஷ்டிப்பர், பெண்கள். மார்கழி பவுர்ணமியன்று, புனித நதிகளில் நீராடி, கல் உப்பு தானம் செய்வர். இவ்வாறு செய்வதால், தானம் செய்யும் குடும்பத்தினர் முதுமை வரை அழகு குறையாமல் இருப்பர் என்பது நம்பிக்கை. இதை, 'லவண தானம்' என்பர். லவணம் என்றால் உப்பு.
இம்மாத வியாழக்கிழமைகளில் லட்சுமி பூஜை செய்வதால், செல்வ விருத்தி ஏற்படும். ஒடிசாவில் இந்த பூஜை விசேஷம். தமிழகத்தில், ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின், திருவெம்பாவை பாடி, தெய்வ வழிபாடு செய்கிறோம். அத்துடன் மேற்கண்டவற்றையும் கடைப்பிடித்து, மார்கழியின் முழு பலனையும் அடைவோம்.
தி. செல்லப்பா