வாழ்ந்து காட்டுவோம்!
உறவினர் பெண்ணின் திருமணத்திற்காக, பிளவுஸ் தைக்க கொடுக்க சென்றவளுடன், நானும் சென்றேன். ராசியான கடை என்று ஒரு சிறிய கடைக்குள் நுழைந்தாள். அங்கு தைத்துக் கொண்டிருந்தவர், ஒரு திருநங்கை. அவருக்கு உதவியாக, இன்னொரு திருநங்கை.
'இவங்க விதவிதமான டிசைன்ல, பேஷனா பிளவுஸ் தைச்சு தருவாங்க. அதுவும், கல்யாண பெண்ணுக்கு அலங்காரமா தச்சு தர்ற பிளவுஸ் ரொம்ப அழகா இருக்கும்...' என்று பாராட்டினாள், உறவினப் பெண்.
'எங்களை போல இருக்கிறவங்களா சேர்ந்து, 'சுய நங்கையர் குழு'ன்னு வச்சிருக்கோம். எங்களுக்காக, தமிழக அரசு, நல வாரியம் ஒன்று வைத்து, தொழில் பயிற்சி கொடுக்கிறாங்க.
'ஆட்டோ ஓட்டுதல், டிபன் சென்டர், சோப்பு, நாப்கின் தயாரிக்கிறதுன்னு அவரவருக்கு இஷ்டமான தொழிலை கத்துக்கிறோம். 'டெய்லரிங், ஆரி எம்ப்ராய்டரி'ன்னு கத்துகிட்டு, நான் இந்த தொழில் பண்றேன்.
'வங்கி கடனுக்கும் ஏற்பாடு பண்ணித் தர்றாங்க. கல்யாண பெண்களுக்காக, நான் தைச்சு தர்ற பிளவுஸ் ரொம்ப அழகா, ராசியா இருக்குன்னு என்னைத் தேடி நிறைய வாடிக்கையாளர்கள் வர்றாங்க... 'ஆர்டர்' நிறைய வர்ற சமயத்துல, உதவிக்கு ஆள் வச்சுக்குவேன். மாச செலவு போக, 20 ஆயிரம் ரூபாய் வரை கையில மிஞ்சுது.
'நாங்களும் உங்களைப் போல மனுஷங்க தான். நாங்களும் சுயமாக வாழ்ந்து காட்டுவோம்...' என்றவரின் நிறைவான பேச்சு, அவர் முகத்துக்கு தனி பொலிவை கொடுத்தது.
திருநங்கையர் என்றாலே விலகிப் போவது, கிண்டல் பண்ணுவது என்ற நிலைமை, இவர்களை போன்றவர்களால் மாறிக் கொண்டிருப்பதை சொல்லி, அவரை பாராட்டி வந்தேன்.
— என். விஜயலட்சுமி, மதுரை.
உயிருடன் விளையாடாதீர்!
சமீபத்தில், நண்பரின் வீட்டிற்கு நானும், கணவரும் சென்றிருந்தோம். அங்கே, என் கணவரின் கழுத்து வலி குறித்து பேச்சு வர, குறிப்பிட்ட ஒரு மாத்திரையின் பெயரை சொல்லி, மருந்து கடையில் வாங்கி போட வலியுறுத்தினார், நண்பர்.
டாக்டரின் பரிந்துரை இல்லாமல், மருந்து கடையில் வாங்கிச் சாப்பிடும் வழக்கம் எங்களுக்கு இல்லாததால், அதை தவிர்த்து விட்டோம். அன்றே மருத்துவரிடம் சென்றோம். வேறு ஒரு மருந்தை பரிந்துரை செய்தார், மருத்துவர்.
மருந்து சீட்டை கையில் வாங்கியதும், சிறிது தயக்கத்துடன், நண்பர் பரிந்துரைத்த மாத்திரை பற்றி மருத்துவரிடம் விசாரித்தேன்.
வெகுண்டெழுந்த மருத்துவர், 'உங்களுக்கு யார் அந்த மாத்திரையை பரிந்துரைத்தது...' என, கேள்வி எழுப்பியதோடு, 'அது, குறிப்பிட்ட வலி நிவாரணி மாத்திரை தான். ஆனால், நோயாளியின் வயது, உடல் திறன், நோயின் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டே மாத்திரையை பரிந்துரைப்போம்.
'எங்கேயோ, யாருக்காகவோ பரிந்துரைக்கப்பட்ட மாத்திரையை பயன்படுத்துவது முற்றிலும் தவறு. அதிலும், அந்த மாத்திரை வீரியமிக்கது. டாக்டரின் அறிவுரையில்லாமல் அந்த மாத்திரையை பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏராளம்...' என, எடுத்துரைத்தார்.
நாங்கள் புரிந்துகொண்டோம்.
கண்டதையும், கேட்டதையும் வைத்து, மருத்துவரை போல மருந்துகளை பரிந்துரைத்து, மற்றவர்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற நபர்கள் என்று தான் திருந்துவரோ?
- தனுஜா ஜெயராமன், சென்னை.
மாற்றி யோசிக்கலாம்!
மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்தான், நண்பன்.
அழைப்பிதழில், மணமகன் தேவை என, சிலரது பெயருடன், படிப்பு, பணி செய்யும் இடம் சம்பளம், தொலைபேசி எண்கள் தரப்பட்டிருந்தது. அதேபோல, இன்னொரு பக்கத்தில், மணமகள் தேவை என, சிலரது பெயரும், படிப்பு, பணி செய்யும் இடமும் கொடுக்கப்பட்டிருந்தது.
இதைக்கண்டு வியந்து, 'என்ன நண்பரே... கல்யாண பத்திரிகையிலயே வரன் தேடலா?' என்றேன்.
'ஆமாம் நண்பா... உறவினர்கள் வழியில், சில பெண்களுக்கும், பையன்களுக்கும் வரன் தேடி வருகிறோம். ஆயிரம் பத்திரிகைகள் அச்சடித்துள்ளேன். துாரத்து உறவினர்கள் பலருக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளேன்.
'இதில், பலர் வரன் தேடிக் கொண்டிருக்கலாம். இதற்காக ஆயிரக்கணக்கில் புரோக்கர்களுக்கும், 'மேட்ரிமோனியல்' நிறுவனத்தாருக்கும் பணம் செலவழித்து வரன் பார்ப்பதை விட, எளிதான வழிமுறை என்பதற்காகவே இதை முன்னெடுத்துள்ளேன்...' என்றார்.
நண்பரின் யோசனை சிறப்பாக தோன்றியது. உங்களுக்கு...
- பெ.பாண்டியன், காரைக்குடி