ஊர் கூடி தேர்... கட்டுரை (2)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2021
00:00

குவைத் இந்திய துாதரகத்தில் பதிவு செய்து, இந்தியர்களின் சேவைக்காகவே, 'இந்தியன் பிரன்ட்லைனர்ஸ்' அமைப்பு இயங்கி வருகிறது.
ஒரு குழு அமைத்து, இந்திய சாதனையாளர்களை நானும் தேடிப் பிடித்து, ஆண்டுக்கு ஒரு புத்தகம் என எழுதி, அது, இதுவரை, 22 தொகுதிகள் வெளிவந்துள்ளன.
மேலும், சேவை குணமுள்ள நண்பர்களை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சிகள் நடத்தி,--- அதன் மூலம் இந்தியாவில் இருக்கும் ஏழைகளின் படிப்பு, ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்கள், மருத்துவ உதவி என, விருட்சமாய் வளர்ந்து, குவைத்தில் ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்திருக்கிறோம்.

அகில இந்திய அளவில் புகழ்பெற்ற, வி.ஐ.பி.,களை அந்த நிகழ்ச்சிகளுக்கு அழைக்க விரும்பினோம்.
இசையில் சகாப்தம் படைத்துள்ள, இசைஞானியை அழைக்கலாம் என, முடிவெடுத்தோம். விடுமுறைக்கு நான் ஊருக்கு வந்தபோது,-- இளையராஜாவுடனான சந்திப்புக்கு அவருடன் ஆத்மார்த்த நெருக்கம் கொண்ட, கவிஞர் பொன்னடியார், பிரசாத் ரிக்கார்டிங் தியேட்டரில் ஏற்பாடு செய்தார். துணைக்கு, லேனா தமிழ்வாணன்!
அவர், அலட்டலில்லாமல் எளிமையாக, 'நீங்க, நல்ல காரியங்கள் செய்து வருகிறீர்கள். அதற்காக வர சம்மதிக்கிறேன். என்ன நிகழ்ச்சி அது?' என்று கேட்டார்.
சொன்னேன்.
'செஞ்சிடலாம்...' என்றவர் -நீண்ட நேரம் அன்போடு பேசி, எங்களை வழியனுப்பி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து, விசா, டிக்கெட் அனுப்பி வைத்தோம். அச்சமயம், யாரோ ஒரு புண்ணியவான் இளையராஜாவிடம், 'ஈராக் யுத்தம் வரப்போகுது, இப்போ போய் குவைத் போறீங்களே...' என்று கூறியுள்ளார். இதனால், அவரது குவைத் பயணம், 'கேன்சல்' என்று தகவல் வந்தது.
பிறகு, பொன்னடியார் தலையிட்டு, சரி செய்தார். அதுமட்டுமல்ல, நிகழ்ச்சிக்கு முதல் நாள், ---உடல்நலக் குறைவு காரணமாக அவரது பயணம் ரத்து என, மறுபடியும் ஒரு தகவல்!
எங்களுக்கெல்லாம் பேரதிர்ச்சி.
இளையராஜா வரவில்லை என்பதை ஜீரணிக்கவும் முடியவில்லை. இனி, அதை அறிவிக்கவும் அவகாசம் இல்லை. விழாவில், எதிர்பார்ப்புடன் வரும் அவரது ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டால், என்ன செய்வது?
இருப்பினும், நிகழ்ச்சிக்கான வேலைகளை கவனிக்க ஆரம்பித்தோம். லேனாவும், நடிகர் மயில்சாமியும் முதல் நாளே வந்திறங்கினர்.
சென்னையில் பொன்னடியார், எங்களது ஒருங்கிணைப்பாளர் ரவி தமிழ்வாணன், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் என பலரும், ராஜாவிடம் பேசினர். இறுதியாக, பொன்னடியாருடன் மதியம் புறப்பட்டு, மாலை, 7:00 மணிக்கு வந்திறங்கி, 8:00 மணிக்கு அரங்கத்தில் ஆஜரானார், இசைஞானி.
அக்., 31, 2002ல், குவைத் - இந்திய நிகழ்ச்சிகளில், வரலாறு காணாக் கூட்டம்!
ஒரு மணிநேரம் அவர் ரசித்து, -லயித்து,- சுவையாக பேசி, இடையிடையே பாடல்கள் உருவான விதத்தை எடுத்துச் சொல்லி, பாடிக் காட்டினார், இளையராஜா. அரங்கமே அதிர்ந்தது. அடுத்து, போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளித்து, அறைக்கு ஓய்வெடுக்க சென்று விட்டார்.
மறுநாள் காலை உணவின் போது என்னிடம், 'ரொம்ப, 'அப்சட்' ஆயிட்டீங்க போல. நிகழ்ச்சிக்கு நான் வராம போயிருந்தா என்ன ஆகியிருக்கும்...'
'ஐயோ... அதை நினைச்சு பார்க்கவே முடியலை சார்...'
'ஏன்... என்ன பெருசா நடந்திட போகுது... இந்த உலகில் எதுவுமே சாஸ்வதமில்லை, நிரந்தரமுமில்லை. சில நாட்களில் எல்லாம் சரியாயிரும்...' என்றார்.
'பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு, அதுவும் வெளிநாட்டில் உழைத்து,- பொது சேவை செய்து சம்பாதித்து வைத்துள்ள பெயர். நீங்கள் வந்திருக்கா விட்டால் ஒரே நாளில் அழிந்து போயிருக்கும். அதன் பின், நான் என்ன சொன்னாலும்--, செய்தாலும் நம்ப மாட்டார்கள். உண்மையில், நீங்கள் என் பொது வாழ்வு அஸ்தமித்து விடாமல் காப்பாற்றி இருக்கிறீர்கள். நன்றி...' என்று, உருக்கமாக கூறினேன்.
அதுவரை இறுக்கமாயிருந்தவர் பிறகு சகஜமாய் பழக ஆரம்பித்தார். வெளியே சுற்றிப் பார்க்க வந்தார். பாலைவனத்தில் ஒட்டகங்களை ரசித்தார். கடை வீதிகளுக்கு, 'விசிட்' அடித்தார். அப்புறம் ஊருக்கு திரும்பின பிறகும், கனிவாய் பேசுவார்.
திடீரென ஒருநாள், என்னை போனில் அழைத்து, 'திருவாசகத்தை சிம்பனியாக எழுதணும். குவைத்துக்கு வந்து தங்கட்டுமா...' என்றார்.
'தாராளமாய் வாங்க சார்...' என்றேன்.
அவர், என் மகளின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு, ஆத்மார்த்தமாய் வாழ்த்தினதும், அதன்பின், ஜூலை 15, 2016ல், பொன்னடியாரின், முல்லைச்சரம் பொன் விழாவில் அவரது கையால் விருது பெற்றதும், சிலிர்ப்போ சிலிர்ப்பூ!
அரபு நாடுகளில் பணிப்பெண்களின் பிரச்னைகள் பரிதாபமானவை. 18 முதல் 50 வயதுடையோர் அனைவரும், தங்களை அகதிகளாக,-- அபலைகளாக உணர்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர், ஊருக்குத் திரும்பி போனால் போதும் என நினைப்பர்.
சிலரோ, 'வேறு இடத்திற்கு வேலைக்கு போகணும். சம்பாதிக்கன்னு நம்பி கடன் வாங்கி செலவு செய்து வந்துட்டோம். வாங்கின கடனை அடைக்காம திரும்பிப் போறதுக்கு பேசாம இங்கேயே சாகலாம்...' என, விரக்தியாக இருப்பர்.
அவர்களுக்கு படிப்பறிவும் குறைவு. மொழி பிரச்னை வேறு.
நம்மூர் ஏஜன்ட்டுகள் போல, இங்கும் ஏஜென்சிகள் உண்டு. இவர்கள், இத்தகைய பணியாட்களை, ஷேக்குகள் வீடுகளுக்கு, 'சப்ளை' பண்ணுவர். அதிலும், முதல் மூன்று மாதத்திற்குள் ஆள் சரியில்லை என்று திருப்பி அனுப்பப்பட்டால் அவ்வளவு தான்.
ஏஜன்ட்கள், இந்த பணியாட்களை அடித்துத் துன்புறுத்தி, வேறு இடத்திற்கு அனுப்புவர்.-- இரண்டு பக்கமும் கமிஷன். ஒரு பணியாளருக்கு மாதம், 10 ஆயிரம் வரை சம்பளம் பேசப்படுகிறது. ஆனால், அதையும் சரியாக தராதபோது தான் பிரச்னை.
கேட்டுப் பார்த்து, நியாயம் கிடைக்காத போது, 'எம்பஸி'க்கு போனால், தீர்த்து வைப்பர் என்று இவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி வந்து விடுகின்றனர்.
தங்களின் வீட்டு வேலைக்கு என்று அழைத்து வந்தபின், அவர்களை வைத்து பணம் பார்க்கும் குவைத்திகளும் உண்டு. அவர்களிடம் விசா புதுப்பிக்கவென்று, ஆண்டுக்கு, 60 ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டு வெளியே போய் வேலை செய்ய அனுமதிக்கும் ஸ்பான்சர்களும் உண்டு.
இப்படி வெளியே வந்து கும்பலாய் தங்கி வேலை செய்வது, சட்டப்படி குற்றம். போலீசிடம் மாட்டினால் ஜெயில். அப்புறம் ஊருக்கு, 'பேக் - அப்' தான்.
நிறைய பேர், பிரச்னையை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதும் உண்டு.
தொடரும்
என். சி. மோகன்தாஸ்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X