பா - கே
சென்னையின் பிரபல, 'ஷாப்பிங் மால்' ஒன்றுக்கு என்னையும் அழைத்துச் சென்றார், லென்ஸ் மாமா.
புத்தாண்டு பிறக்கிறதே... மாமிக்கு புது சுடிதார் வாங்கி பரிசளித்து, அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டுமாம்; அதன் மூலம், புத்தாண்டுக்கு முந்தைய நாள், புதுச்சேரி செல்ல அனுமதி வாங்கி விட வேண்டும் என்பது தான், மாமாவின் திட்டம்.
அன்று, விடுமுறை நாளாக இல்லாவிட்டாலும், 'மாலில்' ஏகப்பட்ட கூட்டம். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இப்போதே களைக்கட்டி இருந்தது.
உள்ளே இருந்த கடைகளை ஒருமுறை சுற்றிப் பார்த்த மாமா, கண்கவர் நிறங்களில் விதவிதமான சுடிதார்கள் தொங்க விடப்பட்டிருந்த ஒரு கடைக்கு சென்றார்.
'மாமா, நான் இங்கேயே நிற்கிறேன். நீங்க போய் நல்ல தரமா, 'டிரெண்டி' ஆக பார்த்து வாங்கிட்டு வாங்க. முன்பு ஒருமுறை, 'அடிச்சான்' கலரில் வாங்கிக் கொடுத்து, 'அர்ச்சனை' வாங்கியது போதாதா... மீண்டும் மாமியிடம் மாட்டிக் கொள்ளாதீர்...' என்று எச்சரித்தேன்.
'அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். இந்த முறை, 'செலக்ட்' செய்ய நான், வேற வழி கண்டுபிடித்துள்ளேன்...' என்றபடி, கடையினுள் நுழைந்தார்.
விற்பனை பிரிவில் இருந்த பெண், மாமாவிடம் ஹிந்தியில் பேச, இவரும் சரளமாக ஹிந்தியில் பேசியபடி, தன் மொபைலில் இருந்த மாமியின் புகைப்படத்தை காட்டி, அவருக்கு பொருத்தமான சுடிதாரை எடுத்துத் தர சொல்வது ஓரளவுக்கு எனக்கு புரிந்தது.
'ஆஹா... மாமா உஷாராகத்தான் இருக்கிறார்...' என்று நினைத்து, வெளியே பார்வையை ஓட்டினேன்.
மும்பைக்கோ, பெங்களூரூக்கோ வந்து விட்டோமோ என்று எண்ணும்படி, தலைமுடியை விரித்துவிட்டபடி, அரைகுறையான நவநாகரிக உடையில் நடந்து சென்றனர், இளம்பெண்கள். இவர்களை பின்தொடர்ந்து இளைஞர் பட்டாளங்களும் சென்றுக் கொண்டிருந்தன.
இவர்களில் எவரும் பொருட்களை வாங்க வந்தவர்கள் அல்ல; சும்மா வேடிக்கை பார்த்து பொழுதுபோக்க வந்தவர்கள் என்பது தெரிந்தது. அதற்கேற்ப, சற்றுத் தொலைவில் இருந்த தீனிக் கடை ஒன்றின் முன், ஒரு கூட்டமே கூடி நின்று, 'சாட்' அயிட்டங்களை வாங்கி மொசுக்கிக் கொண்டிருந்தது.
அப்போது, வெளிநாட்டு சுற்றுலாப் பயணியர் கூட்டம் ஒன்று, 'மால்'க்குள் நுழைந்தது. அவர்களில் பெண்கள், தலைமுடியை துாக்கிக் கட்டி, மல்லிகை பூச்சரத்தை கழுத்து வரை தொங்கவிட்டபடி, இன்னதென சொல்ல முடியாத அளவுக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஆடை அணிந்திருந்தனர். அரை டிரவுசர், டீ - ஷர்ட் அணிந்து, முதுகில் பெரிய பெரிய பைகளை சுமந்திருந்தனர், ஆண்கள்.
நம் பாரம்பரிய, பழங்கால பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் நுழைந்து, 'வாவ்... சூப்பர்...' என, கண்கள் விரிய, வாயை பிளந்து பார்த்தனர். அவர்களை அப்படியே அமுக்கி, 'டாலர்'களாக கறந்து விட வேண்டுமென்று நினைத்தனரோ என்னவோ! கடை முதலாளி உட்பட ஊழியர்களும் சூழ்ந்து நின்று, ஹிந்தி உச்சரிப்பில் ஆங்கிலம் பேசியது வித்தியாசமாக இருந்தது.
கடைக்காரர்கள் செய்த அலம்பலில், எதுவுமே வாங்காமல் அவர்கள் வெளியேறினர். நானும், அவர்களை பின்தொடர்ந்து, 'மாலில்' இருந்து வெளியே வந்தேன். அங்கு நின்றிருந்த ஆட்டோகாரர்களை அணுகி, தங்கியிருந்த ஹோட்டலுக்கு செல்ல, கட்டண விபரங்களை கேட்டனர். ஆட்டோக்காரர்களும் அவர்களிடம் சரளமாக ஆங்கிலத்தில் பேசியது, ஆச்சரியத்தை அளித்தது. இறுதியில், சாமர்த்தியமாக பேரம் பேசி, நாலைந்து ஆட்டோக்களில் ஏறி சென்றனர், வெளிநாட்டினர்.
ஒருவழியாக, 'பர்சேஸ்' முடித்து, வெளியே வந்த மாமாவும், நானும், காரில் ஏறி அலுவலகம் வந்தோம்.
மாமா, என்ன டிரஸ் வாங்கினார் என்று கேட்கிறீர்களா... இந்த முறையும், அவர் தலை உருளப் போவது மட்டும் நிச்சயம்.
ப
வாசகி ஒருவர் அனுப்பிய கடிதம் இது:
இருபது ஆண்டு காலம், அதாவது 1955 - 1975 வரை நடைபெற்ற போரில், கடும் போராட்டத்துக்கு பின், அமெரிக்காவை வென்றது, வியட்நாம்.
போர் முடிந்ததும், வியட்நாம் அதிபரிடம், 'இது, எப்படி சாத்தியம்... ஒரு சிறிய தெற்காசிய நாடு, வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி...' என்றார், ஒரு செய்தியாளர்.
'அமெரிக்கா போன்ற வல்லரசை, தோற்கடிப்பது முதலில் கடினமாகத்தான் இருந்தது. ஆனால், சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும், தீரமும் செறிந்த கதையை படித்தேன். அது, எனக்குள் எழுப்பிய கனலால் தான் இந்த வெற்றி சாத்தியமாகியது. அந்த மாவீரனின் போர் தந்திரங்கள், யுக்திகளை எங்கள் போரில் கடைப்பிடித்தோம்; வெற்றி கிடைத்தது...' என்றார், அதிபர்.
'யாரந்த மாவீரன்...' என, வினவினார், செய்தியாளர்.
'வேறு யாருமில்லை. கிழக்காசியாவை வென்ற, ராஜ ராஜசோழன் தான். வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால், இந்நேரம், உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும்...' என்றார்.
சில ஆண்டுகளுக்கு பின், அந்த அதிபர் இறந்து போனார். அவரின் கல்லறையில், அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்: ராஜராஜனின் பணிவான பணியாள், இங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்...
சில ஆண்டுகளுக்கு பிறகு, வியட்நாம் வெளியுறவுத் துறை அமைச்சர், இந்தியா வர நேரிட்டது.
வழக்கம்போல், நம்மவர்களும், 'இது, காந்தி சமாதி... சக்தி ஸ்தல்... செங்கோட்டை அது இது...' என்று, சுற்றிக் காட்டினர்.
அலுத்துப்போன அமைச்சர், 'ராஜராஜன் பிறந்த ஊர், அரண்மனை, சிலை எங்கே உள்ளது...' என, அதிகாரிகளை கேட்டார்.
ஆச்சரியத்துடன், 'அது, தமிழகத்திலுள்ள, தஞ்சாவூரில் இருக்கு...' என்றனர்.
'உடனே, தஞ்சாவூர் போக வேண்டும்...' என கூறினார், வியட்நாம் அமைச்சர்.
தஞ்சாவூர் பறந்தனர்.
அங்கு சென்று, தஞ்சை பெரிய கோவிலில், அவர் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின், கையளவு மண்ணை அள்ளி மரியாதையுடனும், வாஞ்சையுடனும் தன் பையில் சேமித்துக் கொண்டார்.
இதைக் கண்ட செய்தியாளர்கள், வழக்கம்போல வினா எழுப்பினர்.
'இந்த மண்... வீரமும், வெற்றியும் நிறைந்த ராஜராஜ சோழன் பிறந்து வளர்ந்த மண்... வியட்நாம் சென்றடைந்ததும், என் தேச மண்ணில், இந்த மண்ணை கலந்து விடுவேன்...
'இனி, வியட்நாம் மண்ணில், பல்லாயிரம் ராஜராஜ சோழன் பிறக்கட்டும்...' என்றார்.