* எஸ். கனகா, பாபநாசம், நெல்லை: எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேனே...
வருத்தப்பட்டுக் கொண்டு தவிக்கும் மன நிலையை, எப்போதும் மாற்றிக் கொள்ள வேண்டும். சிரித்து பேசுபவராக, உங்கள் மன நிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்... சந்தோஷம் தான் மிஞ்சும்!
கோ. குப்புசாமி, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி: மொபைல் போனை மேல் சட்டை பாக்கெட்டில் வைக்கலாமா சார்?
வைக்கக் கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். காரணம், மொபைல் போனிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சு, எலும்பையும், சதையையும் பாதிக்கும்... அதிக கதிர்வீச்சு சில மொபைல் போன்களில் இருக்குமாம். அது, நுரையீரலையும் பாதிக்குமாம்; ஜாக்கிரதை!
சி. கோபால், கோவை: அந்துமணி பதில்கள் பகுதியில் பரிசு பெறும், வெளிநாட்டு வாசகர்களுக்கு பரிசுப் பணம் எப்படி அனுப்புவீர்கள்?
அவர்கள் நம் நாட்டு வங்கிகளின் கணக்கு விபரங்களை அனுப்பி விடுவரே... அதற்கு பரிசு போய் சேர்ந்து விடும்!
மு. தமிழ்ச்செல்வம், சூரங்குடி, துாத்துக்குடி: கட்டம் போட்ட, கோடு போட்ட சட்டைகளையே அணிகிறீர்களே... ஏன்?
என் பிறந்த மாதத்தில் தான் அந்த ஆண்டுக்கான சட்டைகளை, டவுசர்களை வாங்குவேன்... சென்னை அடையார், 'இந்தியன் டெரைன்' கடையின் விற்பனையாளர், பிர்லாவுக்கு, போன் செய்து சட்டைகளை எடுத்து வரச்சொன்னால், இப்படித்தான், 60 சட்டைகளை எடுத்து வந்து, 'இதுதான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது...' என்பார். ஆனால், ஆண்டுக்கு, 30 சட்டைகள் தான் வாங்குவேன்... உங்களுக்கு பிடிக்கவில்லையா இந்த சட்டைகள்?
ஜி. மஞ்சரி, கிருஷ்ணகிரி: ஒரு பத்திரிகையின் மிகப்பெரிய பலம் அதன் வாசகர்களா... ஊழியர்களா அல்லது விளம்பரதாரர்களா?
மஞ்சரி... உங்களைப் போன்ற வாசகர்கள் தான், முதலாளி... அதன்பின் அவர்களுக்காக உழைக்கும் ஊழியர்கள்! விளம்பரதாரர்கள் இல்லாவிட்டாலோ, இத்தனை பக்கங்களும், செய்திகளும் குறைந்த விலைக்கு பத்திரிகையைத் தர முடியாது!
ஆர். பாரதி, முன்னீர்பள்ளம், திசையன்விளை, நெல்லை: நான் வெற்றிகரமானவனாக திகழ வேண்டும் என்று நினைக்கிறேன்... என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் பணியாற்றும் துறையில் அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அதைச் செய்தால், செய்யும் தொழிலில், வேலையில் நீங்கள் வெற்றிகரமாக திகழ முடியும்!
* எம். தனலட்சுமி, கோவை: செந்தமிழ் நடை என்கின்றனரே... அப்படி என்றால் என்ன?
மற்ற மொழி கலப்பின்றி, தமிழில் எவ்வகை பிழையும் இல்லாமல் எழுதப் பெறுவது தான் செந்தமிழ் நடை... (ப்ளீஸ்... எனக்கு அவ்வாறு எழுத வராது! சாரி!)