எப்போதுமே காலை, 5:00 மணி ஆகிவிட்டால், 'வாக்கிங்' போக தயாராகிக் கொண்டிருப்பார், கோபால். ஆனால், இன்று குளித்து முடித்து, தன் பழைய மர பீரோவில் இருக்கும் வெள்ளையும் சந்தனமும் கலந்த கலர் சட்டையையும், வேஷ்டியும் எடுத்து கட்டிக் கொண்டார்.
வெளியூர் அல்லது எதாவது சுப நிகழ்ச்சிக்கு போகத்தான் இந்த ஆடைகளை உடுத்துவார். இன்று, மதுரையில் இருக்கும் தன் நண்பன் கணேசன் மகளை, தன் மகனுக்கு பேசி முடிக்க, அவனைப் பார்க்க கிளம்பினார்.
வாசலில் கோலம் போட்டு வீட்டிற்குள் நுழைந்த மீனாட்சி, பீரோவில் இருக்கும் லெதர் கை பேக்கை எடுத்து வந்து, கோபாலிடம் கொடுத்து, அவரை மேலேயும், கீழேயும் பார்த்தாள்.
''ஏன் அப்படி பார்க்கிறாய்?'' என்றார், கோபால்.
''ஒண்ணுமில்லை, ஏதோ உங்களிடம் குறை இருக்கே.''
''என்ன குறை?''
''உங்க நெற்றியில் சந்தனம், குங்குமம் காணோம். பக்கத்தில் வந்தால் ஜவ்வாது மணக்கும் அதையும் காணோம். கொஞ்சம் பொறுங்கள்,'' என்று சொல்லி, பூஜை அறையில் இருக்கும் குங்குமம், சந்தனம், ஜவ்வாதை எடுத்து வந்து கோபாலிடம் கொடுத்தாள்.
அதை வாங்கி பூசியவர், 25 வயது வாலிபன் போல ஸ்டைலாக தன் முறுக்கு மீசையை முறுக்கிக் கொண்டார்.
''இப்ப எப்படி இருக்கு.''
''இப்பதான் முகத்தைப் பார்க்குறதுக்கு நல்லாயிருக்கு... என்ன, கொஞ்சம் வழுக்கை இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நல்லாயிருக்கும்,'' என்று கொஞ்சலோடு கூறினாள்.
''நல்லாத்தான் இருக்கும். உனக்கு ஒரு சக்களத்தி வந்துடுவாளே,'' என்று கேலிக்காக அவர் சொல்ல... ''வருவா வருவா... இந்த வயசில இப்படி ஒரு நினைப்பு இருக்கா,'' என்றாள், பொய் கோபத்துடன்.
அவள் கன்னத்தை தன் விரலால் செல்லமாக கிள்ளி, ''சும்மா சொன்னேன் மா,'' என்றார்.
''எனக்குத் தெரியாதா உங்களைப் பற்றி... சரி, ஒன்றுக்கு நான்கு முறை யோசித்து விட்டீர்களா?''
''இதிலென்ன யோசிக்க வேண்டியிருக்கு?''
''இப்ப உங்க நண்பர், பழைய நண்பர் இல்லையே. அவர், சுங்க இலாகா அதிகாரி மட்டுமல்ல, இப்ப ஒரு கோடீஸ்வரர். மதுரையிலே ஒரு கோடி ரூபாய்க்கு வீடு கட்டியிருக்கிறார். மகனுக்கு பெண் எடுத்த இடமோ, அவர்களும் பெரிய கோடீஸ்வரர்.
''ஆனா, நாம சொந்தமா காணி நிலம் கூட வாங்கவில்லை. ஏதோ உங்கப்பா இந்த வீட்டை வாங்கி வைச்சுட்டு போனது... வாடகை இல்லாம இருக்கோம்.''
''நீ சொல்றது சரிதான். ஆனா, இன்று அவன் இந்த நிலைமையில் இருப்பதற்கு நான் தானே காரணம். சிறு வயதிலிருந்து இதே ஊரில், இதே தெருவில் ஓடியாடிய நட்பு. அது மட்டுமல்ல, சின்ன வயதில், அவன் அப்பா கிணறு வெட்ட போன இடத்தில், மண் சரிந்து இறந்து போனார்.
''அப்புறம், அவனை படிக்க வைக்க முடியாமல், டீ கடை கிளாஸ் கழுவ அனுப்பிட்டாங்க, அவன் அம்மா. என் அம்மா - அப்பாவிடம் சொல்லி, அவன் படிப்பு செலவிற்கு, துணிமணி, ஏன் சாப்பாடு கூட எங்க வீட்டில் தான்.
''என் அம்மாவும் அவனை தன் பிள்ளை போல் வளர்த்தாங்க. அதுமட்டுமா, அவனுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்ததும் நாம் தானே. அதுதான் உனக்கும் தெரியுமே.''
''அதற்காக?''
''நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியுது. 'நான் உனக்கு இவ்வளவு செய்திருக்கிறேன். அதனால், உன் பெண்ணை என் மகனுக்கு கொடு என்று கேட்கப் போகிறேன்...' என்று நினைக்கிறியா? அப்படி ஒரு கீழ்த்தரமான புத்தி எனக்கும் கிடையாது; எங்கள் வம்சத்திற்கும் கிடையாது.
''அவன்தான் வீட்டிற்கு வரும்போதும், போகும்போதும், 'எப்படா என் மகளை உன் மருமகளாக அழைத்து போகப் போகிறாய்...' என்று கேட்பான். நான் தான், 'என் மகனுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கட்டும்...' என்று தட்டிக் கழித்துக் கொண்டே வந்தேன்.
''இப்போ நம் மகனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்து விட்டது. மாதம் ஒரு லட்சம் சம்பளம். இன்னும் ஆறு மாதத்தில் அமெரிக்காவிற்கு போகப் போகிறான்.''
''அதெல்லாம் சரிதாங்க. இப்ப மூன்று மாதமா உங்க நண்பர் புது வீடு கட்டினதுக்கு அப்புறம் அவரிடமிருந்து போனும் இல்லை; ஊருக்கும் வரவில்லை.''
''அது வேறு ஒன்றுமில்லை, 'லாக்டவுண்' சமயத்தில் அவன் கிரகப்பிரவேசம் வைத்ததால், நாம போக முடியவில்லை. நாம் வரவில்லை என்று கோபத்தில் இருக்கிறான். நான் இப்ப நேரில் போய் பார்த்து, மனம் விட்டு பேசினால் எல்லாம் சரியாகி விடும்,'' என்று, நண்பனை விட்டுக் கொடுக்காமல் பேசினார்.
''சரி பார்த்து போங்க,'' என்று வழியனுப்பி வைத்தாள், மீனாட்சி.
மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இறங்கி, ஆட்டோவில் ஏறி அண்ணாநகரில் இருக்கும் நண்பன் வீட்டை விசாரித்து, ஒரு வழியாக வந்தடைந்தார்.
வீட்டைப் பார்த்தவுடன் பிரமித்துப் போனார், கோபால். ஜம்மென்று இரண்டு விலை உயர்ந்த கார். இதை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கோபாலிடம், ''ஐயா, யார் நீங்க... என்ன வேண்டும்?'' என்று கேட்டான், வீட்டு வாட்ச்மேன்.
''உங்க முதலாளி கணேசனை பார்க்க வேண்டும். அவரிடம் போய், 'விருதுநகரில் இருந்து உங்கள் நண்பர் கோபால் வந்திருக்கிறேன்'னு சொல்,'' என்று சொல்லி முடிப்பதற்குள், வீட்டிற்குள் இருந்து கணேசனின் மனைவி ரெங்கநாயகி, ''வாட்ச்மேன், அவரை உள்ளே விடுங்க,'' என்றாள்.
''ஐயா, நீங்கள் உள்ளே போங்க,'' என்று, கதவை திறந்து விட்டான்.
''உள்ளே வாங்க அண்ணே... எப்படி இருக்கறீங்க, அண்ணி எப்படியிருக்காங்க... சதீஸ் எப்படி இருக்கான்?'' என்று புன்னகையுடன் நலம் விசாரித்தாள்.
''எல்லாரும் நன்றாக இருக்கிறோம். நீ எப்படி இருக்க, பிள்ளைகள் எப்படி இருக்காங்க... உன் புருஷன் என் மேல் இன்னும் கோபமாத்தான் இருக்கானா... போன் போட்டாலும் எடுக்க மாட்டேங்குறான்; அவனும் போன் பண்ண மாட்டேங்கிறான்.
''அவன் கோபப்படுறதிலேயும் அர்த்தம் இருக்கு. நான் கிரகப்பிரவேசத்திற்கு வரவில்லையே. நான் என்னம்மா செய்யுறது, இந்த பாழாப் போன, 'கொரோனா'வால் தான் என்னால் வரமுடியலை... இல்லைன்னா எள்ளுன்னா எண்ணெயா இருக்க மாட்டேனாம்மா,'' என்று சொல்லிக் கொண்டே, சோபாவில் அமர்ந்தார்.
''சரி விடுங்கண்ணே... இதுக்கு
போய் வருத்தப்பட்டுகிட்டு, இப்போ
தான் வந்துட்டிங்கள்ல... வீடு எப்படி இருக்கு.''
''ரொம்ப நல்லாயிருக்கு. கலைநயத்துடன் கட்டியிருக்கான்,'' என, அவர் சொல்லி முடிப்பதற்கும், மாடியில் இருந்து கணேசன் வருவதற்கும் சரியாய் இருந்தது.
''வாடா கணேசா, எப்படி இருக்க... உடம்பு கொஞ்சம் குறைந்த மாதிரி இருக்கு... நல்லா சாப்பிடுறியா, இல்லை உடம்புல சுகர் ஏதாச்சும் வந்திருக்கா?'' பாசத்துடன் கேட்டார், கோபால்.
''அதெல்லாம் ஒண்ணுமில்லை.''
முகத்தில் சந்தோஷமின்றி, அவர் எதிரில் சோபாவில் அமர்ந்தார், கணேசன்.
''என்னடா... உன் முகத்தில் சந்தோஷமே இல்லை... ஏதோ உப்புசப்புக்கு கேட்குறது மாதிரி இருக்குது. இன்னும் என் மேல் இருக்கும் கோபம் தீரலையா... என்னைப் பற்றி உனக்குத் தெரியாதா... உனக்காக நான் என் உயிரைக் கூட குடுப்பேன்.
''உன் வீட்டு விசேஷத்திற்கு வர முடியாததற்கு காரணம் இந்த, 'கொரோனா'தான்டா. உன்னிடம் சொல்லி மன்னிப்பு கேட்பதற்கு போன் போட்டால், நீ எடுக்கவே இல்லை,'' என்றார் கவலையுடன்.
''என்ன அண்ணே இப்படி பேசுறீங்க...'' என்றாள், ரெங்கநாயகி.
''அப்புறம் என்னம்மா, இத்தனை நாள் கழித்து வந்துருக்கேன். மூஞ்சை உம்முன்னு வைத்திருக்கிறான்.''
''ஏங்க நீங்க சிரிச்சுதான் பேசுங்களேன்,'' என்றாள், ரெங்கநாயகி.
''சரி.. இப்ப எதற்காக வந்திருக்க?'' என்று கணேசன் கேட்க, அதிர்ச்சியானார், கோபால்.
சமாளித்தபடி, ''சரி விஷயத்திற்கு வருகிறேன். சதீஷுக்கு இப்ப வேலை கிடைச்சுடுச்சு. அமெரிக்கன் கம்பெனியில், மாதம் ஒரு லட்சம் சம்பளம். இன்னும் ஆறு மாதத்தில் அமெரிக்கா போய் விடுவான். அங்கு போனவுடன் அவனுக்கு மாதம்,
3 லட்சம் சம்பளம். அதனால, அவனுக்கு கல்யாணம் முடிக்கலாம்ன்ற முடிவுக்கு வந்துட்டேன்.''
''அப்படியா... பொண்ணு யாரு, எந்த ஊரு,'' என்று சந்தோஷமாக கேட்டாள், ரெங்கநாயகி.
''என்னது பொண்ணு யாரா... உன் பொண்ணுதாம்மா.''
ரெங்கநாயகி அதிர்ச்சியுடன் கோபாலையும், தன் கணவனையும் பார்த்தாள்.
''என்ன ரெண்டு பேரும் அப்படி பார்க்குறீங்க. இவன் தான், 'என் மகளை உன் மருமகளாக்கிக் கொள்' என்று, அடிக்கடி சொல்லுவானே... அதனால் அழைத்துச் செல்ல வந்தேன். என்னடா, எப்படா கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம்,'' என்றார்.
சில நிமிட மவுனத்திற்கு பின், கர்வத்துடன் சிரித்தபடியே, பணச் செருக்குடன், ''என்ன... என் பொண்ணா... என் அந்தஸ்து என்ன, உன் அந்தஸ்து என்ன... நீ சாதாரண பியூன். நான் ஆபிசர். என் முன்னால உன்னை மாதிரி,
10 பியூன் கையைக் கட்டி வேலை பார்க்குறான். நீ என்னிடம் வந்து பொண்ணு கேட்குற,'' என்று கணேசன் சொல்ல, அதிர்ந்தார், கோபால்.
''ஓ... அப்ப பணம் தான் பெரிசுன்னு சொல்ற, நட்பு இல்ல?''
''என்னடா பெரிய நட்பு... ஒரு மனிதன் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் நட்பு வரும் போகும்.''
''அப்போ, நீ, என் மேல வைச்ச நட்பு இவ்வளவு தானா. என் பெண்டாட்டி சொன்னா, 'இப்ப உங்க நண்பர் பெரிய கோடீஸ்வரர். அவர் குணம் மாறியிருக்கும். பெண் கேட்க வேண்டாம்'னு.
''நான் தான், 'கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிக்கலாம்; என் நண்பன் என்றைக்கும் மாறவும் மாட்டான். சொன்ன வாக்கை காப்பாற்றாம இருக்க மாட்டான்'னு சொல்லிட்டு வந்தேன்டா. ஆனா, நீ அவ சொன்ன மாதிரியே மாறிட்ட. நீ நல்லாயிரு. நான் வர்ரேன்மா,'' என்று சொல்லி, கண்ணீரைத் துடைத்தபடி வெளியேறினார்.
கணவன் பேசியதையும், கோபால் துடித்ததையும் பார்த்து துவண்டு போய் நின்ற ரெங்கநாயகி, ''என்னங்க இப்படி பேசி, அவர் மனதை நோகடிச்சிட்டிங்க,'' என்றாள்.
கணேசன் குலுங்கி குலுங்கி அழுவதைப் பார்த்து, ''ஏங்க, என்னாச்சு?'' என்று, பதற்றத்துடன் அவர் தோளை பிடித்து கேட்டாள், ரெங்கநாயகி.
''நான் வேண்டுமென்று பேசவில்லை. கோவிலில் உள்ள சாமி கூட பத்து பைசா சூடம் ஏற்றி கேட்டாத்தான் கொடுக்கிறது. ஆனா இவனோ, நான் கேட்காமலே என் தேவையை, தகப்பன் இல்லாத என்னை ஒரு தகப்பனாய் இருந்து செய்ய வேண்டிய அத்தனையும் எனக்கு செய்தான்.
''இதுவரைக்கும் அவனுக்கு கைமாறாக நான் எதுவுமே செய்ததில்லை. அவனும் இதுவரை என்னிடம் எதுவும் கேட்டதில்லை. ஆனா, இன்னைக்கு என் வீட்டு வாசலுக்கு வந்து கேட்டதனால் என்னால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
''இப்பகூட அவனா வந்து கேட்கவில்லை. நான் தான் அவனிடம் பலமுறை, 'என் மகளை உன் மகனுக்கு கட்டி வைத்து மருமகளாக ஆக்கிக் கொள்' என்று சொல்லி, அவன் மனதில் ஆசையை வளர்த்து விட்டேன்.
''இப்போ அவனும் வந்து பெண் கேட்டு விட்டான். அதனால் தான் என்னை வெறுக்கும் அளவுக்கு பேசி விட்டேன்,'' என்ற கணேசன், சாமி படத்தைப் பார்த்து, ''இறைவா அவன் கேட்கும் முன், என் உயிரை எடுத்திருக்கக் கூடாதா...'' என்றார்.
''அவர் மேல இவ்வளவு பாசமும், மரியாதையும் வைச்சுருக்க நீங்க, உண்மையை சொல்லியிருக்க வேண்டியது தானே,'' என்றாள், ரெங்கநாயகி.
''எதைச் சொல்லச் சொல்ற. என் மகள் இன்னொரு பையனுடன் ஓடிப்போய் விட்டாள் என்றால், தாங்க மாட்டான். 'என் நண்பனுக்கு இப்படி ஒரு கொடுமையா'ன்னு நினைத்து, செத்தே போவான். என்றாவது ஒரு நாள் அவனுக்கு இந்த உண்மை தெரியும். அப்போ என்னை மன்னித்து, தேடி வருவான்,'' என்றார், கணேசன்.
கே.எம்.முருகன்
விருதுநகரில், பல் மருத்துவமனையை நடத்தி வருகிறார். இதுவரை, 10க்கும் மேற்பட்ட குறும் படத்தில் நடித்துள்ளார். 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டிக்கு இவர் அனுப்பிய முதல் சிறுகதையே, ஆறுதல் பரிசு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிடுகிறார்.