கமல்ஹாசன், அடுத்த அவதாரம்!
தமிழ் சினிமாவில், பன்முக திறமை கொண்ட நடிகராக வலம் வரும், கமல்ஹாசன், சில படங்களுக்கு கதை, வசனம் எழுதுவதுடன், இயக்கியும் இருக்கிறார். தற்போது, 'பிசி'யாக நடித்து வந்தபோதும், கதை, வசனம் எழுதுவதிலும் கவனத்தை திருப்பி, அந்தப் படங்களை தானே தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார். 1992ல், சிவாஜியுடன் இணைந்து நடித்த, தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி வைத்திருக்கிறார். 'அந்தப் படத்தில், நான் நடித்த வேடத்தில், விக்ரமையும், வில்லன் வேடத்தில், விஜய் சேதுபதியையும் நடிக்க வைக்க பேசி வருகிறேன்...' என்கிறார், கமல்.
— சினிமா பொன்னையா
ஆண்ட்ரியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த, ராசிகண்ணா!
ராசியில்லாத நடிகையாக வலம் வந்த, ராசிகண்ணாவுக்கு, 'ஹாரர்' படம் கொடுத்த, 'ஹிட்' காரணமாக, மீண்டும் அதே இயக்குனரின் இன்னொரு 'ஹாரர்' படத்திலும், 'கமிட்'டாகியுள்ளார். அதனால், இதுவரை தனக்கான, 'ரூட்' எது என தெரியாமல் தடுமாறி வந்த, ராசிகண்ணா, இப்போது, 'ஹாரர்' கதைகளில் தான், தன் வெற்றிப்பாதை உள்ளது என்பதை புரிந்து, அதுபோன்ற படங்களை இயக்கும் இயக்குனர்களை, 'டார்க்கெட்' பண்ணி வருகிறார். இதனால், 'ஹாரர்' படங்களை நம்பி வண்டியோட்டிக் கொண்டிருக்கும், ஆண்ட்ரியா உள்ளிட்ட சில நடிகையர், தங்களுக்கொரு போட்டி நடிகை உருவாகி விட்டதாக மிரண்டு நிற்கின்றனர். ஆள் இல்லாத இடத்தில் அசுவமேத யாகம் பண்ணினது போல!
எலீசா
விஜய் ரசிகரான, துல்கர் சல்மான்!
தமிழைப் போலவே, கேரளாவிலும், விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும், அங்குள்ள பல, 'ஹீரோ'களே, விஜய்க்கு ரசிகர்கள் தான். அவர்களில் ஒருவர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான். அவர் கூறுகையில், 'விஜயைப் பொறுத்தவரை, எத்தனை பெரிய, 'ஷாட்'டாக இருந்தாலும், அசத்தலாக நடனமாடி விடுகிறார். மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் அவர் ஆடிய நடனத்தை, இன்னொருவரால் சத்தியமாக ஆட முடியாது. அந்த அளவுக்கு கடினமான நடனத்தையும் சாதாரணமாக ஆடி விடக்கூடிய, 'சூப்பர் ஹீரோ'வாக, விஜய் இருக்கிறார்...' என்கிறார்.
— சி.பொ.,
'பில்ட் - அப்' கொடுக்கிறார், வடிவேலு!
பல ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்த, வடிவேலு, தற்போது, நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் மறு பிரவேசம் செய்கிறார். அதோடு, காமெடி கவ்பாய், தலைநகரம் -2 என, மேலும் சில படங்களில் நடிக்கும் வடிவேலுவை, சில, 'ஹீரோ'கள் தங்கள் படங்களில் காமெடியனாக நடிப்பதற்கு அழைப்பு விடுத்தனர். 'நான், 'ஹீரோ'வாக நடித்து, மார்க்கெட்டை நிலைநிறுத்தி கொள்வதிலேயே தற்போது முழு கவனமும் செலுத்தி வருகிறேன். அதனால், இப்போதைக்கு யார் படத்திலும் காமெடியனாக நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை...' என்று சொல்லி, தேடி வந்த வாய்ப்புகளை, தவற விட்டார். இதனால், யோகிபாபுவின், 'கால்ஷீட்' கிடைக்காமல், வடிவேலுவை, 'புக்' பண்ணலாம் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 'பல ஆண்டுகள் கழித்து நடிக்க வந்திருக்கும் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று பார்த்தால், 'ஓவர் பில்ட் - அப்' கொடுக்கிறாரே...' என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கின்றனர்.
— சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வாக இருக்கும் நாட்களில், வேற்று மொழிப் படங்களை ஒரு நாளைக்கு, ஒரு படமாவது பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார், நயன்தாரா.
* கிராண்மா என்ற பெயரில் உருவாகும், 'ஹாரர்' படத்தில், கதையின் நாயகியாக வரும், சோனியா அகர்வால், அப்படத்தின் சண்டை காட்சிகளில், 'டூப்' பயன்படுத்தாமல் துணிச்சலாக நடித்து, அதிரடி காட்டியுள்ளார்.
அவ்ளோதான்!