அறிவாளிகளிடம், 'நாம்' என்ற எண்ணம், உண்டு. இதில் தவறில்லை; பார்க்கப் போனால் நியாயமும் கூட. ஆனால், பிரச்னை எங்கு வருகிறது என்றால், 'நாம் மட்டுமே அறிவாளிகள்; மற்றவர்கள் முட்டாள்கள்...' என்று நினைத்து, அவர்களின் செயல்களைப் பரிகாசம் செய்யும்போது தான். இதன் விளைவை விளக்கும் மகாபாரத கதை.
ராஜசூயம் எனும் மகா யாகம் ஒன்று செய்தார், தர்மபுத்திரர்.
பீஷ்மர், துரோணர், துரியோதனன் மற்றும் வியாசர் முதலான மகரிஷிகள் பலரும் வந்திருந்தனர்.
கண்ணன் உத்தரவுப்படி, அசுரச் சிற்பியான மயன் கட்டிய மாளிகை அனைவரையும் கவர்ந்தது. அந்த மாளிகையின் வேலைப்பாடுகள் அனைவரையும் மயக்கின.
குறிப்பாக, துரியோதனனை மிகவும் கவர்ந்தது. அவன் சகுனியுடன் சேர்ந்து, அந்த மாளிகை முழுவதும் சுற்றிப் பார்த்தான்.
'ஆ... ஆ... இதற்கு முன், நான் அஸ்தினாபுரத்தில் பார்க்காத தெய்வீக விஷயங்கள் இங்கே குவிந்திருக்கின்றன. மயக்கம் வருகிறதே...' என்று வியந்தான், துரியோதனன்.
துரியோதனனும், சகுனியும் வேடிக்கை பார்த்தவாறு போய்க் கொண்டிருக்கையில், ஸ்படிகம் போல தரை இருந்தது. அதைப் பார்த்த துரியோதனன் மதிமயங்கி, 'ஆ... இது ஏதோ குளம் போல் இருக்கிறது...' என்றபடி, தன் வேட்டியைத் துாக்கிக் கொண்டான்.
பிறகு, அது தவறென்று தெரிந்ததும், துயரடைந்து, யாருடனும் பேசாது பழையபடியே வேட்டியை சுற்றத் துவங்கினான். அதன் பின்னும் குழப்பங்கள் தொடர்ந்தன.
சுற்றி வந்தபோது, மேடு பள்ளம் மற்றும் எது உயரம், எது தாழ்வான பகுதி என்பது தெரியாமல் நடந்து, தடுக்கி விழுந்தான். தண்ணீர் இருந்த இடத்தைத் தரை என்று நினைத்து, தண்ணீரில் விழுந்தான்; அடுத்து, தரையை, தண்ணீர் என நினைத்துத் தாண்டினான், துரியோதனன்.
துரியோதனனின் அந்தச் செயல்களைக் கண்டு பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரவுபதி ஆகியோர் சிரித்தனர். பீமனின் பணியாளர்களும் சிரித்து பரிகசித்தனர்.
துரியோதனனால் அந்தப் பரிகாசத்தைத் தாங்க முடியவில்லை. ஏற்கனவே பாண்டவர்கள், குறிப்பாக, பீமன் மீது பெரும் வெறுப்பில் இருந்த துரியோதனன், தன்னைப் பார்த்துச் சிரித்து அவமானப் படுத்தியவர்களைப் பழி வாங்க நினைத்தான்.
விளைவு... மாயச்சூதாட்டம் நடந்து, பாண்டவர்கள் காடு செல்ல நேரிட்டது.
மறந்தும் கூட அடுத்தவர்களைப் பரிகாசம் செய்யக் கூடாது. மீறிச் செய்தால் உண்டாகும் விளைவுகளையும் சொல்லி, நம்மை எச்சரிக்கும் கதையிது.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
கோவிலில் பொதுவாக, பூ அல்லது விளக்கிற்கான எண்ணெய் முதலியவை, காணிக்கையாக படைப்பது வழக்கம். பூஜைக்கு தேவையான பொருட்களை இறைவனுக்கு காணிக்கையாக படைப்பதால், படைப்பவர் தானும் பூஜையின் ஒரு அங்கமாக மாறுகிறார். இதுவே காணிக்கை செலுத்துவதன் தத்துவமாகும்.