சபீதா ஜோசப் எழுதிய, '100 தலைவர்கள் 100 தகவல்கள்' நுாலிலிருந்து:
அருமையான சொற்பொழிவாளர், நெடுஞ்செழியன். அண்ணாதுரைக்கு அடுத்தபடியாக திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தலைமை ஏற்க வேண்டியவர்; அதற்கான தகுதியும் நிரம்ப பெற்றவர்.
ஆனால், அவரது வாழ்நாள் முழுவதும் இரண்டாம் கட்ட தலைவராக - இரண்டாம் முதல்வராகவே இருக்க வேண்டியதாகி விட்டது.
சேலம் சட்டசபை தொகுதியில், 1957ல் வேட்பாளராக போட்டியிட்ட நெடுஞ்செழியன், தோல்வி அடைந்து விட்டார்.
அப்போது, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு வெளியிடும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, 'இத்தனை ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன்...' என்று, தன் தோல்வியை கூட அழகாக வெளிப்படுத்தினார்.
அன்று முதல் தோல்வியுற்ற வேட்பாளர்கள் எல்லாருமே, 'வெற்றி வாய்ப்பை இழந்தேன்...' என்று சொல்லத் துவங்கினர்.
ஏ.எல்.எஸ்.வீரய்யா எழுதிய, 'நாடகமும் சினிமாவும்' நுாலிலிருந்து:
தென்னாட்டில் சுற்றுப் பயணம் செய்தபோது, கோவைக்கு வந்தார், காந்திஜி. தொண்டர்களும், நகர பிரமுகர்களும், நவாப் ராஜமாணிக்கத்தின் நாடக பெருமையை எடுத்துக் கூறினர். நாடகம் பார்க்க விரும்பி, அன்றிரவு, 'நந்தனார்' நாடகம் பார்த்தார், காந்திஜி.
காந்திஜியின் கொள்கைகளில் உயிர்மூச்சாக இருந்த தீண்டாமை பற்றி நாடகத்தில் பார்த்து, கண்களில் நீர் தாரை தாரையாக ஓடியது. ஹரிஜன் பாத்திரத்திற்கு தெய்வம் காட்சி தந்து, நந்தனாரை ஆட்கொண்ட காட்சி அவரை உலுக்கி விட்டது.
அதன்பின், நவாப் கம்பெனியிலுள்ள அத்தனை பேருக்கும் ஒவ்வொரு கை ராட்டை வாங்கிக் கொடுத்து, நுால் நுாற்கும் பழக்கத்தை ஏற்படுத்த அறிவுறுத்தினார், காந்திஜி.
ஒரு கடமையாக கருதி, கலைஞர்களை செயல்பட வைத்து, அந்த நுாலை விற்று, அவரவர்களுக்கு தேவையான கதர் ஆடைகளை வாங்கிக் கொடுத்தார், நவாப் ராஜமாணிக்கம்.
டாக்டர். மெ.ஞானசேகர் எழுதிய, 'சான்றோர் சிந்தனைகள்' நுாலிலிருந்து:
கடந்த, மே 29, 1953ம் ஆண்டு, இமயமலையில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர், எட்மண்ட் ஹில்லரியும், டென்சிங்கும்.
டென்சிங் தம் பயண அனுபவத்தில், 'முதலில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஹில்லரி கால் பதித்தார். அதன்பின் நான் ஏறினேன். பின் இருவரும் மகிழ்ச்சியில் தழுவிக் கொண்டோம். மலை உச்சியில் இங்கிலாந்து, இந்தியா மற்றும் நேபாள கொடிகளை நட்டோம். அது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். எங்களது கடுமையான முயற்சிக்கு கிடைத்த வெகுமதி...' என்று எழுதியுள்ளார்.
அச்சமயம், டென்சிங் மலை உச்சியில் நின்று கொண்டிருந்த அற்புத காட்சியை புகைப்படம் எடுத்தார், ஹில்லரி. பின், அப்படம் உலகெங்கும் வலம் வந்தது.
அப்போது பலரும், ஹில்லரியிடம், 'உங்கள் படத்தை காணோமே...' என்று கேட்க, 'எனக்கு தெரிந்து டென்சிங் ஒரு புகைப்படமும் எடுத்ததில்லை. அவரிடம் புகைப்படம் எடுக்கும் கலையை சொல்லித்தர எவரெஸ்ட் சிகரம் தகுந்ததல்ல...' என்றார், ஹில்லரி.
நடுத்தெரு நாராயணன்