அன்புள்ள அம்மா —
என் வயது: 32; இல்லத்தரசி. திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. பி.எஸ்சி., தாவரவியல் படித்திருக்கிறேன். திருமணத்திற்கு பின் நான் எந்த வேலைக்கும் செல்லவில்லை.
நெடுஞ்சாலை துறையில் டெக்னிகல் அசிஸ்டென்டாக பணிபுரிகிறார், கணவர். எங்களுக்கு ஒரே மகள். வயது 9. நான்காம் வகுப்பு படிக்கிறாள்.
எப்போதும் என் புடவையை பிடித்துக்கொண்டே திரிவார், கணவர். காலையில் படுத்திருக்கும் அவரை, அரை மணிநேரம் கெஞ்சி கொஞ்சி தான் எழுப்ப முடியும். பல் விளக்காமல் படுக்கையில் அமர்ந்தபடியே, 'பெட் காபி' குடிப்பார்.
அதன் பின், அவரை தள்ளிக் கொண்டு போய் குளியலறையில் நிறுத்தி, 'டூத்பிரஷ்' எடுத்து தர வேண்டும். காலைக்கடன்களை முடிப்பதற்குள் என் உயிரை வாங்கி விடுவார். குளிக்க சோப்பும், டவலும், தேவைப்பட்டால் குளிக்கும்போது அவரின் முதுகை தேய்த்து விடவேண்டும். ஊட்டி விடாத குறையாய் காலை டிபன் தர வேண்டும்.
வேலைக்கு புறப்படுபவருக்கு வண்டி சாவி, சாப்பாடு கூடை தந்து வண்டியை, 'ஸ்டார்ட்' பண்ணி விடவேண்டும். மாலை வீடு திரும்பும்போது, வாசலில் நின்று வரவேற்று, கைகால் அலம்ப தண்ணீர் தர வேண்டும். டிபனும், காபியும் தந்து கையில், 'ரிமோட்'டை திணித்து விடவேண்டும்.
'டிவி' பார்ப்பவருக்கு இரவு, 8:00 மணிக்கு டிபன் தர வேண்டும். துாங்கும் வரை போனை நோண்டுவார். படுக்கையை துாசி தட்டி விரித்து போட வேண்டும். தாம்பத்யத்துக்கு நான் தான் அவருக்கு சிக்னல் தர வேண்டும்.
எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு, 'பில்'லை துாக்கி போட்டிருப்பார், நாம் அதை எடுத்து பாதுகாக்க வேண்டும். திடீர் என்று அந்த, 'பில்' தேவை என்பார், எடுத்து தர வேண்டும்.
உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு கணவரை கூட்டிப் போனால், நான் தொலைந்தேன். நொடிக்கொரு தடவை என் பெயரை சொல்லி கூப்பிடுவார். 'என்னங்க...' என்றபடி, அலாவுதீனும் அற்புத விளக்கில் வரும் பூதம் போல ஓடி வந்து கை கட்டி நிற்க வேண்டும். சிறிது கவனிப்பு குறைந்தாலும் என்னைதான் ஒரு பாட்டம் திட்டி தீர்ப்பார்.
எங்களுக்கு திருமணமான இரண்டாவது ஆண்டில், மாமியார் இறந்து விட்டார். மாமியாருக்கு நான்கு மகன்கள். இவர் கடைக்குட்டி.
அலுவலகப் பணிகளை யார் உதவியும் தேவைப்படாது சுதந்திரமாக கவனிப்பார். வெளியில் சிங்கம். வீட்டில் கங்காரு குட்டி.
சமயங்களில் முகச்சவரம் செய்து விடுவேன். 'கொரோனா' காலங்களில் அவருக்கு முடி கூட வெட்டி விட்டிருக்கிறேன். நான் களைந்து போட்ட அழுக்கு புடவைகளை படுக்கையில் போட்டு அதன் மேல் துாங்குவார்.
இவ்வளவு சேவைகள் செய்தாலும், 'சனியன், தெண்டம், புண்ணாக்கு, மூதேவி, எருமை, செவிடு, கழுதை...' என, திட்டுவார். நன்றி ஒரு துளியும் இல்லை.
எங்கள் மகள், தன் கையே தனக்கு உதவி என சுயமாய் செயல்படுவாள். அப்பாவின் கோமாளிதனத்தை எள்ளி நகையாடுவாள்.
அவருக்கு கொத்தடிமை வேலை பார்த்து வெறுத்து விட்டது. எங்காவது ஓடிப்போய் கூலி வேலை பார்க்கலாமா என மனம் யோசிக்கிறது. இந்த மனுஷனை திருத்த எதாவது வழி சொல்லுங்கள் அம்மா.
— இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
உன் கணவரை போல தான், பெரும்பாலான திருமணமான ஆண்கள் நடந்து கொள்கின்றனர். இத்தகைய ஆண்களுக்கு மனைவியர், இரண்டாம் அம்மா போல. மனைவியின் புடவையை பிடித்து சுற்றி வரும் ஆண்களை ஆங்கிலத்தில், 'ஹென் பெக்டு' என்பர்.
இது மாதிரியான ஆண்களை அன்பாய் திருத்த முடியாது. இவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ய வேண்டும். திருமணமான முதல் நாளே, நான் உன் அடிமையல்ல, சமமான பங்குதாரர் என்பதை, உடல் மொழியாலும், வாய் வார்த்தையாலும் உணர்த்த வேண்டும்.
* தாம்பத்யத்திற்கு நீ முதலில் சிக்னல் காட்டாதே. ஒரு மாதமானாலும் விட்டுப்பிடி. காய்ந்த மாடு தானாக வைக்கோல் தின்ன வரும். தாம்பத்யத்துக்கான முதல் சிக்னல் கணவனிடமிருந்து பறந்து வரும்
* கணவனிடம், 'புருஷா... நான் உன் இரண்டாம் அம்மா அல்ல; மனைவி மட்டுமே. உன் வேலைகளை நீ பார். என் வேலைகளை நான் பார்க்கிறேன். சொந்தக்காலில் நில் ராஜா...' எனக்கூறு
* காலையில், 'பெட் காபி' கொடுக்காதே. தானே எழுந்து குளித்து, புத்தாடை உடுத்தி காலை உணவு உண்டு அலுவலகத்துக்கு போகட்டும். ஒரு வாரம் விட்டு பிடி. முதல் இரண்டு மூன்று நாட்கள் கணவன், அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்கு போகாமல் சிரமப்படுவான். இரண்டு, 'மெமோ' வாங்கியுடவுடன் ஒழுங்கீனத்திலிருந்து மகா ஒழுங்குக்கு திரும்பி விடுவான்
* உறவினர் வீட்டு நல்லது கெட்டதுகளுக்கு கணவனை கூட்டி போகாதே. மீறி கூட்டி போனாய் என்றால், அவன் வேலையை அவனே பார்த்து கொள்ள வேண்டும். வி.வி.ஐ.பி., கவனிப்பு கிடையாது. விசேஷ வீட்டில் அவன் ஒரு தனி விருந்தாளி, நீ ஒரு தனி விருந்தாளி என, எல்லைகள் பிரித்து கொள்ள வேண்டும் என, நிபந்தனை போடு
* ஒன்பது வயது மகளை பார்த்து கணவனை திருந்த சொல்
* வசவு வார்த்தைகளை கூறி கணவன் உன்னை திட்டினால், 'இதோடு நிறுத்திக் கொள். இல்லையெனில், வாயில் சூடு போடுவேன்...' என எச்சரி
* 'அலுவலகத்தில் எப்படி சுதந்திர புருஷனாக இருக்கிறாயோ அதே போல வீட்டிலும் இரு...' என, அறிவுறுத்து
* 'நாளை மகளுக்கு உன்னை போல ஒட்டுண்ணி கணவன் அமைந்தால் சம்மதிப்பாயா யோசி. உன் சுயம் தொலைக்காமல் அவள் முன் கண்ணியமாக வாழ்...' என, துாபம் போடு
*'தாய் கோழியின் பின் சுற்றி சுற்றி வரும் கோழிக்குஞ்சு போல் நீ நடப்பதில் வெளிப்படும் அபரிமிதமான காதலை உணர்கிறேன். அந்த காதல் சமூகத்தில் உன் ஆளுமையை சரித்துவிடும். சேவல் மிடுக்கை கைவிட்டு விடாதே. குடும்பம் என்கிற அமைப்பின் இறையாண்மை காப்போம் கண்ணாளா...' என, கணவனை நடுவழிபடுத்து. வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.