அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2021
00:00

பார்யா ரூபவதி சத்ரு

அவள் பெயர் ஸ்ரீமதி. பெயரிலேயே லஷ்மி வாசம் செய்கிறாள். வசதிக்கேற்ப ஸ்ரீ என்றோ அல்லது மதி என்றோ அழைக்கலாம். அத்தனை அழகு. அவளைப் படைத்த பிரம்மனுக்கே பெருமையாக இருந்திருக்கும். தன் கைகளுக்குத் தானே முத்தம் கொடுத்திருப்பான். இப்படித் தான் சில சமயங்களில் அமையும். அப்படி அமைந்தவள் தான், ஸ்ரீமதி.
'அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்' என்று, பாடும்படியான அழகு.
'அழகு ஆபத்தானதா இருக்காது; ஆராதனை செய்யப்பட வேண்டியது...' இப்படித் தான் அரவிந்தனுக்குத் தோன்றியது.
அரவிந்தன், தாமரையின் உரிமையாளன். லஷ்மி வாசம் செய்வது தாமரையில் தானே? இவன் மனத்துள் வாசம் செய்பவள் தான், ஸ்ரீமதி. ஜோடிப் பொருத்தம் அற்புதம்.
தாலி கட்டும் நேரத்தில் தான், அவள் முகத்தை முழுமையாக பார்த்தான். இப்படிப்பட்ட பேரழகா, எனக்கே எனக்கேவா? இவனும் அழகன் தான். ஆனால், இவள் அழகு தெய்வீகமானது.
வியப்பு பேசவும் வைக்கும், ஊமையும் ஆக்கும் என்பர். இவன் இரண்டையுமே செய்தான்.
தன் மதிப்புத் தெரியாமல் எங்கோ கிராமத்தில் கிடந்த இவளை அள்ளி வந்து விட்டான். புதையல், பொக்கிஷம் பூமியில் தான் மறைந்திருக்கும். அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்குத் தான் அது கிடைக்கும்; இவனுக்குக் கிடைத்தது.
திருமணம் ஆன புதிதில், ஸ்ரீயுடன் வெளியில் போகும்போதும், நண்பர்களின் இல்லம், உணவகங்கள் செல்லும்போதும், அனைவரும் இவனைப் பிரமிப்புடன் பார்ப்பது பெருமையாக இருந்தது. வர வர, இவன் பெருமை குறைந்து, ஸ்ரீயின் மதிப்பு அதிகமாவதை உணர்ந்தான்.
அனைவருமே ஸ்ரீயிடமே பேச விரும்பினர். நண்பர்கள் கூட்டம் அடிக்கடி இவனை விருந்துக்கு அழைத்து, 'கண்டிப்பா மனைவியோடு வந்துடு...' என்றது.
கடைக்காரர்கள் பொருட்களை எடுத்து வைக்கும்போது, ஸ்ரீயை பார்த்தபடி பேச்சற்று நின்றனர்.
இவன் அம்மா இறக்கும்போது, ஒரு ஜோடி வைரக் கம்மல்களை இவனிடம் தந்து, 'இது, பழைய பேட்டன் தோடு. ஸ்ரீ ரொம்ப அழகு. இதைப் பிரிச்சுக் கட்டி அவளுக்குத் தரணும்ன்னு நினைச்சேன்... ஏனோ அதுக்கு நேரமே வரலை...
'இதை அப்புறமா அவளுக்கு தந்துடு. ஆனா, வைரத்துலே ஏதோ தோஷம் கறுப்புப் புள்ளி இருக்கோன்னு சந்தேகம்... எதுக்கும் ஆசாரிகிட்டே கேட்டுட்டு, அப்புறமா கட்டக் கொடு...'
அந்தத் தோடுகளைப் பார்த்தான். மஞ்சள் குவாலிடி தான்.
தோஷம் வைரத்தில் மட்டும் தானா?
முன்பு மாதிரி வெளியே ஸ்ரீயை கூட்டிச் செல்வதில்லை. திருமணம் போன்ற எந்த விசேஷத்திற்கும் அழைத்துச் செல்வதில்லை. அவன் தன்னை ஒதுக்குவதை, நாளடைவில் மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தாள், ஸ்ரீ.
'எனக்கு நேரமில்லை, வேலை இருக்கு... நீ வேணா போயிட்டு வா...'
இவளுக்கு சில புரிந்தது; சில புரியவில்லை. உடைந்த பிறகு கம்பு கூட ஊன்று கோலாகிறது. இவள் எதற்கும் பயனற்றவளா?
பொழுதைப் போக்க, சமையலறை வேலை நேரம் போக, மற்ற நேரங்களில் 'டிவி' பார்ப்பதும், மொபைல் போனில் செலவிடுவதுமாக இருந்தாள்.
எத்தனையோ பத்திரிகைச் செய்திகள்...
தான் காதலித்தவள் கிடைக்கவில்லை என்பதற்காக, காதலியின் முகத்தில் ஆசிட் வீச்சு நடத்திய காதலன்; காமவெறி பிடித்த மனைவி காதலனுடன் வாழ, தன் குழந்தைகளையே கொன்றது. எத்தனை எத்தனை செய்திகள் இவர்கள் மனிதர்கள் தானா?
அம்மா என்றால் அன்பு. அப்பா என்றால் ஞானம் இல்லையா? இலக்கணங்கள் பொய்த்துப் போகுமா?

அன்று...
உறவினர் வீட்டுத் திருமணம். மனைவியை அழைத்துப் போகாவிட்டால் ஆயிரம் கேள்விகள் எழும்.
''அடுத்த வாரம் ஒரு கல்யாணத்துக்குப் போகணும். தயாரா இரு,'' என்றான்.
இவளுக்கு ஏக மகிழ்ச்சி. அரவிந்தன் மனம் மாறி விட்டான்.
''ஏங்க?''
''உம்!''
''அம்மாவோட தோடு ஒண்ணு இருக்குன்னு சொன்னீங்களே... அதை கல்யாணத்துக்கு போட்டுட்டு போகட்டுமா?''
''இரு, இன்னும் ஒரு வாரம் இருக்குல்ல... இதைப் பிரிச்சுக் கட்ட முடியுமான்னு பார்க்கறேன். இல்லேன்னா பாலீஷாவது போட முடியுமான்னு பார்க்கறேன்.''

ஆசாரி பட்டறை.
இவன் கொடுத்த தோட்டை ஒரு கறுப்பு எடைக்கல்லில் தேய்த்து, அந்தக் கோட்டை ஆசிட் விட்டு ஆராய்ந்தார், ஆசாரி.
கோடு புகைந்து போயிட்டா மட்டத் தங்கம்; அப்படியே இருந்தா நல்ல தங்கமாம்.
''நல்ல தங்கம் தான். ஆனா, பிரிச்சு கட்ட, 10 நாளாவது ஆகும். கல்லை எடுக்கணும்; அப்புறம் மோல்ட் தயார் பண்ணணும்; ஏழு கல் தோடு. மொத்தம், 14 கல்,'' கணக்கு சொன்னார், ஆசாரி.
அதற்குள் யாரோ கூப்பிடவே, உள்ளே போனார்.
அந்த ஆசிட் பாட்டிலைப் பத்திரப் படுத்தினான், அரவிந்தன். கறுப்பு வைரங்களுடன் அதுவும் இவன் பையில்.
பிறகு வருவதாகச் சொல்லி விடைப்பெற்றான்.

வீட்டை அடைந்தபோது, வீடு பூட்டி இருந்தது. எதிர் வீட்டு அம்மாள் சாவி எடுத்து வந்து கொடுத்தாள்.
ஸ்ரீ, தன் மருமகளுடன் கோவிலுக்குப் போயிருப்பதாகச் சொன்னாள்.
காத்திருந்தான்.
யாரோ கதவு திறக்கும் சத்தம். காரிலிருந்து இவன் கல்லுாரி நண்பன், குருமூர்த்தி இறங்கினான்.
''வாடா வா... இப்பத்தான் வழி தெரிஞ்சுதா... என் கல்யாணத்துக்குக் கூட வரலை...''
நண்பர்கள் கட்டிக் கொண்டனர். காரிலிருந்து இறங்கிய அந்த வட நாட்டுப் பெண்ணை, அறிமுகம் செய்து வைத்தான், குரு. சூரிதார் அணிந்து, முக்காடு போட்டிருந்தாள்.
''என் ஒய்ப் மல்லிகா... லவ் மேரேஜ்!''
அவள் கை கூப்ப, முக்காடு சரிய... என்ன கொடுமை, அவள் முகமெல்லாம் சுருங்கி ஆசிட் வீச்சா?
''என்ன பயந்துட்டியா, இவளை நான் காதலிச்சபோது எத்தனை அழகு தெரியுமா... மலர்களில் அவள் மல்லிகைங்கிற மாதிரி அத்தனை அழகு. எவனோ பொறாமை பிடிச்சவன், தன்னை இவள் காதலிக்க மறுத்ததால, இவ முகத்துலே ஆசிட் ஊத்தி...
''அயோக்கிய நாய், காமவெறி பிடிச்ச களவாணி... இப்போ கம்பி எண்ணிட்டு இருக்கான். இவ மறுத்தும் கேட்காம, நான் தான் இவளைக் கட்டிட்டேன். நான் காதலிச்சது இவ மனசை; அது, பரிசுத்தமா இருக்கு. நான் உடம்புக்கு ஆசைப்படலை.
''உனக்குத் தெரியுமா... லஷ்மி அகர்வால்ன்னு ஒரு வட நாட்டுப் பெண், குட்டுங்கிற அயோக்கியன் செஞ்ச ஆசிட் வீச்சால பாதிக்கப்பட்டு, கோர்ட்டுக்கு போய் வாதாடி, ஆசிட் விக்கிறதையே தடை பண்ணினாங்க... பாதிக்கப் பட்டவங்ககிட்டே கையெழுத்து வாங்கி, 27 ஆயிரத்துக்கும் மேலே சேகரிச்சு, அரசுக்கு அனுப்பி வைச்சாங்க...
''அது சமுதாய விழிப்புணர்ச்சி... மல்லிகாவுக்கு நாலைஞ்சு பிளாஸ்டிக் சர்ஜரி ஆயாச்சு... ரெண்டு வருஷமாச்சு, இப்போ தேவலை. சரி, உன் 'ஒய்ப்' எங்கே? கல்யாண போட்டோவில் ரொம்ப அழகா இருந்தாங்க,'' என்றான்.

நண்பன் விடைபெற்றுச் சென்று ரொம்ப நேரம் ஆன பின்னும் கூட இவன் பிரமித்து அமர்ந்திருந்தான். நண்பனின் ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடி. அயோக்கிய நாய், களவாணி, குரு கற்பித்த பாடம்.
அப்போது, இவன் மொபைல் கூப்பிட்டது. ஏதோ மருத்துவமனையிலிருந்து அழைப்பு. இவன் பதறி அடித்து ஓடினான். ஸ்பெஷல் வார்டில், இடது காதில் பெரிய கட்டுடன் அரை மயக்கத்தில், ஸ்ரீமதி.
''என்ன ஆயிற்று?''
''மொபைல் போன் வெடித்து, இடது பக்கக் காது சேதமடைந்ததில், செயல் திறன் இழந்து விட்டது. இனி, அந்த காதில் எந்த ஆபரணமும் அணிய முடியாது,'' விவரித்தார், டாக்டர்.
கண் விழித்த ஸ்ரீ, இவன் கைகளைப் பிடித்து அழுதாள்.
அழகு ஆபத்தானது இல்லை; இவன் அசிங்க மனம் தான் ஆபத்தானது. கறுப்புப் புள்ளி வைரத்தில் இல்லை; இவன் மனதில் தான்.
இவன் வடித்த கண்ணீரில், மனதின் கறுப்பு கரைந்திருக்குமா?
இனி, அந்த ஒற்றைத் தோட்டை ஜோடி பிரிக்க முடியாது.
ஆண்டவனின் உண்டியலை அடையப் போகும் அவைகள், சத்தியமாய் இவனுக்கு பாவ மன்னிப்பு வழங்கும்.
ஸ்ரீமதியின் அழுகுரல் கேட்டது.

ரஸிகப்ரியா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MUTHUKRISHNAN S - Sankarankovil,இந்தியா
15-டிச-202122:13:55 IST Report Abuse
MUTHUKRISHNAN S எனது பள்ளிப்பருவத்தில் "மழை, மலை, மரம் தன் வரலாறு கூறுதல்" என்ற முறையில் கட்டுரை எழுதுவோம். அது மாதிரியே உள்ளது. முடிந்த வரை கதையை மெருகேற்றி எழுத முயற்சி செய்யலாமே. பொறுப்பாசிரியர் வாசகர்கள் கருத்துக்களை கவனிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
12-டிச-202111:20:51 IST Report Abuse
chennai sivakumar அழகாக கதையை முடித்து இருக்கிறார். பாராட்டுக்கள்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
11-டிச-202123:18:59 IST Report Abuse
Girija ச்சய் என்ன கதையிது? இந்த கேனை திருந்தி வாழ்வான் என்று சாதாரணமாக கூட முடித்திருக்கலாம். பெண் அழகாய் இருந்தால் மோசமானவளாக இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் சாக வேண்டும்? இதுதானே உங்கள் வக்கிர புத்தி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X