பாரதியின் நுாற்றாண்டை போற்று!
டிச., 11, பாரதியார் பிறந்த தினம் (நுாற்றாண்டு விழா சிறப்பு கவிதை)
பாருக்குள் நல்ல நாடு பாரத நாடென்றார்
நீருக்கு வங்கத்தை காட்டினார் - சீர்மிகு
சாரமாய் தேசத்து ஒற்றுமையை முன்மொழிந்த
பாரதியின் நுாற்றாண்டைப் போற்று!
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன்
வந்து பாயும் காதினிலே என்றாரே - சிந்தையில்
தாரக மந்திரமாய் தாய் தமிழால் ஆர்ப்பரித்த
பாரதியின் நுாற்றாண்டைப் போற்று!
நேர்கொண்ட பார்வை நிமிர்ந்த நடையுமாய்
பாரில் புதுமைப்பெண் வார்த்தாரே - வீரமிகு
காரிகையர் கண்டெடுத்த மாசிலா நற்கவிஞர்
பாரதியின் நுாற்றாண்டைப் போற்று!
வல்லமை தாராயோ வேண்டியே கேட்டாரே
நல்லவை நாளும் நவின்றாரே - செல்வங்கள்
சேர்க்க விழையாமல் வித்தகத்தால் ஓங்கியவர்
பாரதியின் நுாற்றாண்டைப் போற்று!
நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்டவர்
அஞ்சா இடமுமில்லை என்றாரே - துஞ்சாத
வீரத்தை வேரிலேயே வித்திட்ட ஞானகவி
பாரதியின் நுாற்றாண்டைப் போற்று!
ஆரமுது உண்டோர் அடிமையாகி நிற்பாரோ
சோர்வில் மயக்கும் மது அருந்தி - தீர்க்கமாய்
வீரச் சுதந்திரம் வேண்டியே நின்றாரே
பாரதியின் நுாற்றாண்டைப் போற்று!
தர்மத்தின் வாழ்வினை சூதும் சிலவேளை
கர்மத்தால் கவ்வகூடும் கள்ளமில்லை - தர்மங்கள்
ஆர்த்தெழுந்து சூதை அழிக்கும் இறுதிலென்றார்
பாரதியின் நுாற்றாண்டைப் போற்று!
சென்றது மீளாது சென்றதையே எண்ணாதீர்
இன்று புதிதாய் பிறந்தோம் என்றுரைப்பீர் - நன்குணர்ந்து
சாரதியாய் முன் நின்று சாற்றிய சக்திமான்
பாரதியின் நுாற்றாண்டைப் போற்று!
டி.ஆர்.வெங்கடேசன், பெங்களூரு