அம்பிகா - அர்ச்சனா - ஆராதனா! (12)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2021
00:00

முன்கதை சுருக்கம்: நான் துரைராஜ் மகன் இல்லை. ஆன்மிக புத்தகங்களில் கோவில் பற்றி எழுதும் அதர்வா. என் கனவுகளில் உன் உருவில் ஒரு பெண் வருவதாக கூறி, விக்ரம் ஆல்பத்தை காட்ட, துாக்கமின்றி தவித்தாள், ஆராதனா-

'என் பெயர் அதர்வா; நிஜமாவே எங்கேயோ ஒரு பொண்ணு இருந்து, அவ தான் என் கனவுல வந்துருக்கா... அவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?' என, விக்ரம் பேசிய விஷயங்கள், மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது.

'அழகாக இருக்கிறான். மரியாதையாக பேசுகிறான். எங்கேயிருந்து இவன் திடீரென எனக்குள் வந்தான்?' என எண்ணியபடி, ப்ரிஜ்ஜிலிருந்து தண்ணீர் குடிக்க சமையலறை போனாள். அப்போது, தாத்தாவும் பாட்டியும் அவர்கள் அறையில் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.
''கொஞ்ச நாளா ஆராதனாகிட்ட ஏதோ ஒரு மாற்றம் கவனிச்சியா?'' கேட்டார், தாத்தா.
''ஆமா... துரைராஜ் பையனா கொக்கா?''
''கனவைப் பத்தி எல்லாம் கேட்டாளே, அதெல்லாம் சும்மா. துரைராஜ் பையன் இவ கிட்ட பேசி பேசி, மனசை மாத்திட்டான். இவ அவனையே நினைச்சுகிட்டு இருக்கா.
''முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணு ஒருத்தரோட கனவுல வர முடியுமான்னு கேட்டாளே... அது பொய். இவ கனவுல அந்த பையன் வர ஆரம்பிச்சுட்டான். அதனால் சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசுறா.''
''நல்லது நடந்தா சரி,'' என்றாள், பாட்டி.
சிரித்துக் கொண்டே தன் அறைக்கு போனாள், ஆராதனா.
ராஜேஷுக்கு கொடுப்பதற்காக நேந்திரங்காய் சிப்ஸ், வறுத்த முந்திரி எல்லாம் வாங்கினான், விக்ரம். பக்கத்துக் கடையில் பஜ்ஜி வாசனை மூக்கை துளைத்தது. ஒரு பிளேட்டுக்கு, 'ஆர்டர்' கொடுத்து காத்திருந்தபோது, போன் செய்தாள், ஆராதனா.
'கூப்பிடறாளே... வெரி குட்...' என்று மனதில் நினைத்து, ''ஹலோ!'' என்றான்.
''நான் ஆராதனா.''
சிரித்தபடி, ''சொல்லுங்க ட்ரீம் கேர்ள்,'' என்றான்.
அவளும் சிரித்தபடி, ''உங்ககிட்ட பேசணும்,'' என்றாள்.
''என்ன இது உல்டாவா இருக்கு... முன்ன நான் சொன்ன வசனம் இது. ஓ.கே., என்ன பேசணும்.''
''நேரா பேசணும்.''
''எப்போ?''
''இன்னிக்கு.''
'உடனே வருகிறேன் என்றால் மரியாதையாக இருக்காது...' என நினைத்தவன், ''நான் இப்ப கொட்டாரக்கராகிட்ட ஒரு கோவில்ல இருக்கேன். இன்னைக்கு முடியாது. நாளைக்கு?''
''ம் சரி.. ஆனா, நாளைக்கு நிச்சயமா?''
''மிஸ் ஆகாது.''
''தாங்க்யூ.''
பஜ்ஜி வந்தது. சாப்பிட்டபடியே, 'என்ன பேச போறே நாளைக்கு? மூணே வார்த்தை ஐ லவ் யு. எதிர்பார்த்தது தானே?' என, யோசித்தான்.
பரபரப்பாக இருந்த டெக்னோ பார்க்கில், ஓரிடத்தில் விக்ரமுக்காக காத்திருந்தாள், ஆராதனா.
'எவ்வளவு நேரம் காத்திருப்பது... 'பங்க்சுவாலிட்டி' வேண்டாம்?' என, சலித்து கொண்டாள்.
ஏற்கனவே வந்துவிட்ட விக்ரம், அவளை காக்க வைத்து, ஒரு மறைவிலிருந்து இப்போதுதான் வருகிற மாதிரி வந்தான்.
''நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு,'' கோபமாக சொன்னாள்.
''ஸாரி மேடம்... ஒரு கட்டுரையை, 'டைப்' பண்ணி ஆபீசுக்கு அனுப்பிட்டு வர லேட்டாயிடுச்சு. பேசணும்ன்னு சொன்னீங்க?'' கேட்டான், விக்ரம்.
''திடீர்னு ரொம்ப போரடிக்குது,'' என்றாள்.
''ஏன்?''
''தெரியலை பிரெண்ட்ஸ்கிட்ட சொன்னேன்.''
''என்ன சொன்னாங்க?''
''யாரையாவது, 'லவ்' பண்ணு. வாழ்க்கை சுவாரசியமா இருக்கும். போரடிக்காதுன்னாங்க.''
''நல்ல ஐடியா... யாராவது கிடைச்சாங்களா?''
''ம்.''
''யாரு?''
விக்ரமை நோக்கி விரல் நீட்டினாள்.
''எது நானா... விளையாடறீங்களா?''
''என்ன தப்பு? ஏற்கனவே உங்க கனவுல நான் வந்துட்டேன். இப்ப என் கனவுல நீங்க வர ஆரம்பிச்சுட்டீங்க.''
''ஆனா அதுக்காக எல்லாம்...''
''சும்மா 'பில்ட் அப்' பண்ணி பேசி, மாசக்கணக்கா ஓட்டுறதுல எனக்கு இஷ்டம் இல்லை. ஐ லவ் யூ. என்ன சொல்றீங்க?''
''என்னங்க இது, பேசணும்ன்னு கூப்பிட்டுட்டு, இப்படி குண்ட துாக்கி போடறீங்க?''
''என் கூட வேலை செய்யற ஜான்ஸின்னு ஒரு பொண்ணு. எட்டு வருஷமா, 'லவ்' பண்றா. இன்னும் கல்யாணத்தை தள்ளி போட்டுக்கிட்டே வரா. தேவையா இது? புடிச்சிருக்கா, புடிச்சிருக்கு மேட்டர் ஓவர். அதான் என் பாலிசி.''
''எதனால என்ன புடிச்சிருக்கு?''
அவள் ஏற இறங்க பார்த்து, ''பர்சனாலிட்டி, பொறுமை, அறை வாங்கின பிறகும் கோவில்லே எனக்காக வந்து காத்திருந்தது. எல்லாத்துக்கும் மேல கனவுல பார்த்த என்னை, படமாக வரைந்து வெச்சிருக்கீங்களே... அது.''
''கனவுல உங்கள பார்க்கல. ஒரு பொண்ண பார்த்தேன்.''
''எப்படி வேணா இருக்கட்டும். இப்ப நான் உங்கள, 'லவ்' பண்றேன். நீங்க என்னை, 'லவ்' பண்றதா இருந்தா, மேடம், வாங்க, போங்கன்னு சொல்லாம, ஆராதனான்னு கூப்பிடணும்.''
கொஞ்சம் தயங்கினான்.
'ரொம்ப தயங்கினால் கை நழுவிப் போய்விடும்...' என நினைத்தவன், ''சரி ஆராதனா,'' என்றான்.
''தாங்க்ஸ் அதர்வா.''
''இவ்வளவு சீக்கிரம் யாருக்காவது, 'லவ்' வந்திருக்கா?''
''கண்டதும் காதல்ங்கிறாங்களே... என்னவாம் அது?''
''வா, ஏதாவது ஸ்வீட் சாப்பிடலாம்.''

ஆராதனாவை வழிக்குக் கொண்டு வர ரொம்ப மெனக்கெட வேண்டுமோ என கவலைப்பட்ட விக்ரமுக்கு, அது இவ்வளவு சீக்கிரம் கனிந்தது ஆச்சரியமாக இருந்தது.
இந்த காதல் நன்றாக பழுக்க, ஒரு மாதம் காத்திருந்தான். நேரம், காலம் பார்க்காமல் ஊர் சுற்றினர்.
''என்ன அதர்வா, இனிமே, நீ இல்லாமல், காலம் தள்ள முடியாது போல இருக்கே?'' என்றாள்.
''ஏன்?''
''என்ன ஏன்? உண்மையான காதல்னா அப்படித்தான் ஒருத்தரை விட்டு ஒருத்தர் இருக்க முடியாது.''
''சரி, ஆராதனா... உனக்கு இங்கே வேலை... நான் இங்கேயே இருக்க முடியுமா?''
ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் அவனையே பார்த்தாள். அவள் கண்ணில் லேசாக கண்ணீர் அரும்பியது.
இவ்வளவு நேரம் தைரியமாக பேசியவள், ''விட்டுட்டு போயிடுவியா?'' என குழந்தை மாதிரி கேட்டாள்.
''சீ சீ... என் வேலைக்காக போயிட்டு, போயிட்டு வருவேன். அப்புறம் ஒரு நல்ல நாள் பார்த்து கல்யாணம் சரியா?''
கண்களை துடைத்துக் கொண்டாள்.
''ஆராதனா.... அடுத்து, கர்நாடகாவுல இருக்கிற சில கோவில்களைப் பற்றி எழுத வேண்டியிருக்கு. வியாழக்கிழமை கிளம்புவேன். போன்லயே பேசிட்டே இருப்போம். கவலையே படாதே. உன் பக்கத்திலேயே இருக்கிறதா நினைச்சுக்க,'' அவள் கைகளை கோர்த்து நடந்தான்.
வியாழக்கிழமை-
ரயிலில் போய்க் கொண்டிருந்த விக்ரம், ஆராதனாவுக்கு போன் செய்து, ''நாம், 'செல்பி' கூட எடுத்துக்கலையே... என்னம்மா, ஞாபகப்படுத்த கூடாதா?'' என்றான், மனதுக்குள் கிண்டலாக நினைத்தபடி.
''நானும் மறந்துட்டேன். நெக்ஸ்ட் டைம்...'' என்றாள்.
ஊருக்கு திரும்பிய விக்ரமின் கையை குலுக்கி, ''ஸோ, ஒரு பெரிய, 'அட்வெஞ்சர்' பண்ணிட்டு வந்திருக்க,'' என்றான், ராஜேஷ்.
''சாதாரண, 'அட்வெஞ்சர்' இல்லடா... இல்லாத ஒரு விஷயத்தை அடிப்படையா வெச்சு, ஒரு பொண்ணுக்கு ஒருத்தன் மேல, 'லவ்' வரவழைக்கிறது எவ்வளவு கஷ்டமான விஷயம்... சாதிச்சதை நினைச்சுப் பார்த்தா எனக்கே ஆச்சரியமா இருக்கு.
''ஒவ்வொரு விநாடியும் கோர்வையா பொய் சொல்லிகிட்டே இருந்தேன். நான் சொன்ன பொய் தெய்வத்துக்கே அடுக்காது. மனசுக்குள்ள ஒரு வெறி இருந்ததுனால சரளமா பொய் வந்தது.''
''எப்படியோ நம்பிட்டாங்கல்ல?''
''அலையோ அலைன்னு அலைஞ்சு நம்ப வெச்சேன். அதுவும் என் மேல கோவம் வர மாதிரி, இரக்கம் வர மாதிரி விதவிதமான நடிச்சு, காதல் வரவழைச்சேன். 'நீ இல்லாம வாழ முடியாது, நீ தான் என் உயிர்'ன்னு அவங்க வாயாலேயே சொல்ல வச்சிட்டேன். அந்த நிலைமைக்கு மூணு பேருமே வந்துட்டாங்க.''
''அதுதான் வேணும். அது போதும். விக்ரம், இதுக்கு மேல நீ எதுவும் செய்ய வேண்டாம்.''
''அவ்வளவுதான் ராஜேஷ், என் வேலை முடிஞ்சது. பந்தை உருட்டி விட்டேன். எப்படியும் திரும்ப என்கிட்ட வரும். அப்போது, அடுத்த அத்தியாயம் ஆரம்பிக்கும்.''

சென்னை, ஈ.சி.ஆர்., ரோட்டில் டோல்கேட் தாண்டியதும், இடது பக்கம் போகும் அவென்யூவில் இருந்தது, ராமலிங்கத்தின் பங்களா.
ராமலிங்கத்துக்கு வயது, 64. நல்ல உயரம், அளவான உடல் வாகு, எப்போதும் வெள்ளை உடை, காதோரங்களிலும், தலையின் முன்பக்கத்திலும் பட்டையாக நரைமுடி. சிறிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் ஆரம்பித்தவர், படிப்படியாக வளர்ந்து இன்று நகரின் கவனிக்கத்தக்க ஒரு முக்கிய புள்ளியாக ஆனவர்.
பெட்ரோல் பங்குகள், கார் டீலர் ஷிப், காஸ் ஏஜென்சி, ஏற்றுமதி வியாபாரம், உள்ளூரிலும், வெளியூரிலும் 'ஷாப்பிங் சென்டர்'கள் என, அவருக்கு நிறைய பிசினஸ்கள். குறிப்பாக, சில முக்கிய புள்ளிகளுக்கு பினாமியாகவும் இருந்தார்.
அன்று அவர் வீட்டு ஹாலில், நான்கு பேர் அவரைப் பார்ப்பதற்காக உட்கார்ந்து இருந்தனர். அதில் மூன்று பேர் அதிகாரிகள் போல் இருந்தனர். சற்று தள்ளி உட்கார்ந்திருந்த ஒருவர் வேட்டி, சட்டை, தோளில் துண்டு, விபூதிப்பட்டையுடன் இருந்தார்.
வீடு முழுக்க ஊதுபத்தி, சாம்பிராணி புகை. பூஜை முடிந்து சிறிது நேரத்தில் வந்தார், ராமலிங்கம். மரியாதைக்காக எழுந்து நின்றவர்களை உட்காரச் சொன்னார்.
''சுமதி.''
''இதோ வரேங்க.''
ராமலிங்கத்தின் மனைவி சுமதி, எல்லாருக்கும் காபி கொடுத்து விட்டு போனாள். அதிகாரிகள் மாதிரி இரண்டு மூன்று பேர் ஒரு ப்ளூ பிரின்ட்டை அவரிடம் காட்டினர்.
'கானத்துார்லே நாம் கட்ட போற அப்பார்ட்மென்டோட டிசைன். மொத்தம் ஆறு வீடு. கார் பார்க்கிங் தனியா இருக்கு. ஒவ்வொரு வீடும், ஐந்து படுக்கையறை...' என்று அவர்கள் கூறினர்.
''ஒண்ணும் வில்லங்கம் இல்லை கிளியரா இருக்குன்னா ஆரம்பிச்சுருங்க,'' என்றார், ராமலிங்கம்.
''வரும், 14ம் தேதி நாள் நல்லா இருக்கு, அன்னைக்கு பூஜை போட்டுடலாம்,'' என்றார், வெள்ளை வேட்டி ஆசாமி.
''அப்புறம் என்ன, எங்க குடும்ப ஜோசியரே சொல்லிட்டார்... எல்லா ஏற்பாடுகளையும் பண்ணுங்க,'' என்று அவர்களை அனுப்பி வைத்தார்.
''என்ன சாமி, காலையிலேயே வந்திருக்கீங்க... ஏதாவது விசேஷமா?''
''உங்க பெண்ணுக்கு நல்ல வரன் இருந்தா கேட்டீங்க, கொண்டு வந்திருக்கேன்.''
''வெரி குட்!'' என்று உள்ளே திரும்பி, ''சுமதி, பொண்ணுக்கு கல்யாண விஷயம் வா,'' என்றார்.
பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். ஏழெட்டு பையன்களின் போட்டோக்களை காட்டினார், ஜோசியர்.
''நம்ம பொண்ணு ஜாதகத்தோடு பொருத்தம் பார்த்துட்டேன்; பிரமாதமா இருக்கு. இந்த பையன் அமெரிக்கால இருக்கான். இங்க படிப்ப முடிச்சிட்டு மேல்படிப்புக்காக...'' என்று ஜோசியர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ராமலிங்கம் ஒரு படத்தைக் காட்டி, ''இந்த பையன் நல்லா இருக்கான்ல சுமதி?''
''ஆமாங்க!''
''பொண்ண கூப்பிடு, பிடிச்சிருக்கான்னு கேட்போம்.''
மாடி பக்கம் பார்த்து, ''அம்பிகா... இங்க வாம்மா,'' என்றாள், சுமதி.

- தொடரும்
கோபு பாபு

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X