ஓயாத மணியோசை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2021
00:00

காவிரி ஓடி வரும் இருமருங்கிலும் பசுமையின் ஊடே ஆங்காங்கே இருக்கும் சிற்றுார்களில், அரசலுாரும் ஒன்று. அக்ரஹாரமான அதன் ஒரு முனையில், சிவன் கோவிலும், மறுமுனையில், பெருமாள் கோவிலும் அமைந்திருந்தது. ஏழெட்டு தெருக்கள் அவ்வளவுதான், அந்த ஊர்.
கோவிலை நெருங்கினார், சிவநேச குருக்கள். எப்போதோ ஓடிய தேர், விறகுக் கட்டையாக தெரு முனையில் நின்றது.
'நல்லவேளை, யாரும் விறகுக்காக அதை உருவிச் செல்லவில்லை. அந்த வகையில் தர்மம் நிலைகொண்டிருந்தது....' என பெருமூச்சுடன், உடைந்து போயிருந்த கோவில் கதவுகளை மெதுவாக நகர்த்தித் திறந்தார்.
அது சோழர் காலத்து கோவிலாக இருக்க வேண்டும். சுவர்கள் பெயர்ந்து சிதிலமடைந்திருந்தாலும் கம்பீரமாய் இருந்தது. நந்தியை வணங்கி, 'அகஸ்தீசாய நம' என்றபடி உள்ளே நுழைந்து, தன் நித்திய கடமையை ஆரம்பித்தார், சிவநேசன்.
கோவிலுக்கு வரும்படியும் இல்லை. லிங்கத்தைச் சுற்றி அழுக்கடைந்திருந்த வேட்டி போர்த்தப்பட்டு இருந்தது. திருச்சியில் இருந்து பணம் கொடுத்தனுப்பி இருந்தான், மகன். 'டவுனுக்கு போகும்போது, சுவாமி வேட்டி வாங்க வேண்டும்...' என, மனதிற்குள் நினைத்தவாறு பூஜைகளை துவங்கினார்.
'ஐயனே, அகஸ்தீசா... உனது சொத்து கொஞ்சமா, நஞ்சமா... கண்ணுக்கெட்டிய துாரம் வரை வயல்கள், உன்னது தானே... டவுனில் எத்தனை கட்டடங்கள் உனதாக இருக்கின்றன...
'கோவிலைக் கட்டிய மன்னர்கள் உன்னை ஸ்தாபித்து விட்டு, தப்பு தப்பு, சுயம்புலிங்கமாக கிடைத்த உனக்கு, இந்த அழகான கோவிலை கட்டி தந்து, பெரும் சொத்துக்களையும் அல்லவா மானியமாகக் கொடுத்துச் சென்றனர். புத்திசாலிகள், புண்ணியவான்கள்...
'இது, கலிகாலம் ஆயிற்றே, என்னவெல்லாமோ நடக்கிறது. ம்... பார்க்கலாம் கோவில் சொத்துக்கள் பற்றி அரசாங்கத்திற்கு பிராது அனுப்பியாகி விட்டது. முடிவு எப்படி இருக்குமோ, அவனுக்கே வெளிச்சம்...' மனதில் பாரம் சுமந்தவராக பூஜைகளை தொடர்ந்தார்.
ஒரு மணி நேரத்தில் பூஜைகளை நிறைவு செய்து, நடை சாத்தி, அருகில் இருந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

வீட்டு வாசலில் சிறு கூட்டம் அமர்ந்திருந்தது. அவரைப் பார்த்ததும் சிநேகிதமாகப் புன்னகைத்தனர். திண்ணையில் அமர்ந்தார்.
முதலாவதாக வந்த பெண்ணிடம், ''என்ன தங்கம்மா, மகளுக்கு கல்யாணம் இன்னும் கை கூடலையா?'' என்றபடி அந்த பெண்ணின் கையில் இருந்த ஜாதகப் புத்தகத்தைக் கையில் வாங்கினார்.
''நான் எத்தனை தடவை சொல்லிருக்கேன், பரிகாரம்ன்னு அங்கே இங்கே சுற்ற வேண்டாம். நம்ம கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி வந்து விளக்குப் போடுன்னா, கேட்கறேளா... நம்மூர் சிவன் லேசுப்பட்டவரா, அகஸ்தியரே வழிபட்டவர். இப்படி பெருமை தெரியாத ஊரில் வந்து மாட்டிண்டுட்டார்,'' என்றார், வேதனையுடன்.
வாசல்படி அருகில் அமர்ந்திருந்த அவரின் மனைவி மீனாட்சி, முகத்தைச் சுளித்தாள்.
'இந்த மனுஷனுக்கு ஏதாவது தெரியுதா... இப்படி காலட்சேபம் செய்யறாரே... நாலு காசு சம்பாதிக்கணும்ன்னு தோணலையே...' என்ற நினைப்பு, அவள் மனதில் ஓடியது.
கூட்டம் கொஞ்சமாக குறையத் துவங்கியது. வாசலில், 'புல்லட்' மோட்டர் சைக்கிள் படபடவென வந்து அமைதியாகியது.
''சாமி இருக்காரா,'' என்றபடி விடுவிடுவென படியேறி, எதிர் திண்ணையில் அமர்ந்தார், அம்பலக்காரர்.
அங்கிருந்தவர்களிடம், ''சித்த அப்படி உட்காருங்கோ. அம்பலக்காரர் வந்துருக்கார். பேசி அனுப்பிடுறேன்,'' என்றபடி நிமிர்ந்து உட்கார்ந்தார், சிவநேசன்.
ஆஜானுபாகுவான தேகம். கை விரல்கள் நிறைய மோதிரங்கள். கழுத்தில் தேர்வடச் சங்கிலி. கிராமத்து பெருந்தனக்காரர் தினுசில் இருந்தார், அம்பலக்காரர்.
''சாமி... ஒண்ணுமில்ல, என் அனுபவ பாத்தியதையில் இருந்த வயலை கைமாத்தி விடலாம்ன்னு பார்த்தேன். திருச்சியில் இருந்து யாரோ அரசாங்கத்திற்கு விஷயத்தைச் சொல்லிட்டாங்க போல, சின்ன சிக்கலாகிப் போச்சு... அது சம்பந்தமா கோவில் நிலமா என்ன ஏதுன்னு விசாரிக்க ஒரு கமிட்டி வரும்போல; நீங்க எனக்கு சாதகமா அவங்ககிட்டே பேசணும்,'' என்றார், அம்பலக்காரர்.
குருக்கள் மனதில் கோபமும், வருத்தமும் உண்டானது. 'இப்படி பாவத்தைச் சேர்க்க நினைக்கின்றனரே...' என்ற உணர்வு, அவர் முகத்தில் வெளிப்பட்டது.
''சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்கோ. அதெல்லாம் கோவிலுக்கு பாத்தியப்பட்டதில்லையா... உங்க தாத்தா நிர்வாகம் பண்றச்சே அதற்கான தண்டல் எல்லாம் ஒழுங்கா கொடுத்ததா, என் தோப்பனார் சொல்வார். அதனால், கோவிலும், தேரும், திருவிழாவுமா, 'ஜேஜே'ன்னு இருந்தது; ஊரும் சுபிட்சமா இருந்தது.
''உங்கப்பா காலத்திலே அந்த மாதிரி கட்டளை தர்றது குறைய ஆரம்பித்தது. கோவில் வருமானம் போய் திருவிழா எல்லாம் நின்னு போச்சு. ஒரு செப்புக்காசு கூட வரும்படி இல்ல. நீங்க என்னடான்னா அந்தச் சொத்தையே விக்கணும்ன்னு நெனைக்கறேளே.''
''சாமி, நீங்க எந்தக் காலத்திலே இருக்குறீங்க... நாடு மாறிட்டே இருக்கு. அவனவன் பறக்குறான். உலகத்தைப் பாருங்க, சீனாக்காரன், அமெரிக்காகாரன் ஊரைப்பூரா கோவிலுக்கு தானம் பண்றானா... அவங்க எல்லாம் நல்லா இல்லையா என்ன?''
''அண்ணா... சீனா கம்யுனிச நாடு. மக்கள், அங்கே சந்தோஷமா இருக்காளா இல்லையான்னு லோகத்துக்கே தெரியாது. அமெரிக்கா, 'காபிடலிஸ்ட் கன்ட்ரி!' அதன் சரித்திரமே, 300 வருஷம் தான். அது பரம்பரை இல்லை; வழக்கமும் இல்லை.
''ஐரோப்பாவை பார், அரபு நாடுகளைப் பார்னா... அதெல்லாம் பார்த்து நமக்கு என்ன ஆகப்போகுது... நம்ம பெரியவா என்ன சொன்னாளோ, அது தான் நமக்கு சரியாகும்,'' என்றார், குருக்கள்.
''அது சரிங்க சாமி. மேட்டருக்கு வாரேன், நடந்தது நடந்து போச்சு. ஏதோ ராஜாக்கள் மானியம் கொடுத்தாங்க. பட்டயம் இருக்கு, ஓலை இருக்குன்னு தலைமுறை தலைமுறையா மாறிக்கிட்டே வந்தாச்சு. இனி ஆகவேண்டியதைத் தானே பார்க்கணும்,'' என்றார், அம்பலக்காரர்.
''மனுஷா தலைமுறைதானே மாறிண்டு வர்றது. அன்றைக்கு ஸ்தாபித்த சிவன் அப்படியேதானே இருக்கார். அவர் மாறலையே... அவர் ஸ்திரமா இருக்கறச்சே, அவர் சொத்து மட்டும் மாறுமா என்ன!''
''இருக்கட்டும் குருக்களே... உலகமே அவன் சொத்து. அதுல மனிதன், நாம் கொஞ்சம் அனுபவித்துக் கொண்டால் என்ன?'' என்றார், அம்பலக்காரர்.
''அது சரி, சுடுகாடு கூட சிவனின் சொத்து தான். அதற்காக நாம் இப்பவே போய் அங்கே படுத்துக்க முடியுமா?''
''சாமி... பேசுறதைப் பார்த்தா, நீங்க தான் பெட்டிஷன் போட்டுருப்பீங்க போல. பரவாயில்லை. என்னை எதிர்த்து நீங்க என்ன பண்ண முடியும்? ஆகவேண்டியதைப் பார்க்கிறேன்,'' என்றார், தீர்மானமாக.
''அம்பலக்காரரே, விபரீதம் பண்ண நினைக்காதீங்க. 'சிவன் சொத்து குலநாசம்'ன்னு சொல்லுவா. அவனைப் பட்டினி போட்டு, அவன் சொத்தில் வயிறு வளர்ப்பதே பெரும் பாவம். இருந்தாலும் போகட்டும். ஆனால், கோவில் சொத்துக்களை வித்து காசு பண்ண நினைக்காதீங்கோ. நல்லதுக்கில்லை,'' என்றார் பதைபதைப்புடன், சிவநேசன்.
''அதையும் பார்க்கிறேன்,'' என்றபடி குரோதமாகக் கிளம்பினார், அம்பலக்காரர்.
செய்வதறியாது அமைதியானார், குருக்கள்.

மதிய உணவுவேளை. மீண்டும் வாசலுக்கு வந்தவர், கோபுரத்தைப் பார்த்து வணங்கினார்.
சாப்பிட அமர்ந்தவரிடம், ''பையன், பணம் தந்ததோடு சேதி சொல்லி விட்டிருக்கான். மருமாளுக்கு உடம்புக்கு ஆகலையாம். அம்மா நீ வந்தா சிகிச்சைக்கு ஒத்தாசையா இருக்கும். உடம்பு சரியானதும் அமெரிக்கா போகணுமாம்,'' என்றாள், மீனாட்சி.
''பார்த்தியாடி... உன் மருமகளுக்கு உடம்புக்கு முடியலை. ஆனால், நீ நன்னா இருக்கே. எல்லாம் நம் அகஸ்தீசன் அருள்... அவனுக்கு நைவேத்யதுக்கு நீ தளிகை பண்றதாலே சவுக்கியமா வச்சிருக்கான்,'' என்றார்.
''இதில் ஒண்ணும் கொறச்சலில்லை. உங்க அப்பா மாதிரி நீங்களும் இந்தக் கோவிலைக் கட்டிண்டு அழறேள். நானும் இந்த கிராமத்தில் கிடந்து வேகுறேன். எங்கண்ணா திருச்சியில் இருந்தானில்லையோ, நம்ம புள்ளையையாவது படிக்க வச்சு ஆளாக்கிட்டார். உங்களால் என்னத்தைக் கண்டேன்,'' அங்கலாயித்தாள்.
அவளது பேச்சின் நியாயம் புரிந்தது. தன் வயது நண்பர்கள் எல்லாம் அந்த கிராமத்தை விட்டு வேலை, தொழில் என்று போய் விட்டனர்.
நினைவு தெரியாத நாளில் அப்பாவுடன் கோவிலுக்குள் சென்று, பூஜை செய்ய துவங்கினார். வயது, 80ஐ தொடுகிறது. நோய்நொடி என்று படுத்ததில்லை. சுத்தமான காற்றும், பரபரப்பில்லாத அன்றாட வாழ்வும், கோவில் பூஜைகள் என்ற மன நிறைவும் அவ்வாறே அவரை வைத்திருந்தன.
விதிப்பயனால் மனைவியான மீனாட்சிக்கும் ஒன்றும் குறைவில்லை. அவ்வப்போது முணுமுணுப்பாள், குறை சொல்வாள். ஆனால், அவரின் நித்திய பூஜைக்கு உறுதுணையாக உதவி புரியும் உத்தம மனைவியாகத்தான் இருந்தாள்.

ஒருநாள் காலை, பரபரப்புடன் ஓடி வந்தான், அம்பலக்காரரின் தோட்டத்து மேஸ்திரி.
''என்ன முத்தையா, ஓட்டமும் நடையுமா வர்றே... என்ன அவசரம்?'' என்றார்.
''குருக்களே, பெரிய விஷயம் நடந்து போச்சு. நம் முதலாளி மகன் டவுன்ல கூட்டாளிகக் கூட சேர்ந்து பொம்பளை கேசுல ஏதோ, 'போக்சோ' சட்டமாமே அதிலே மாட்டிக்கிட்டார். முந்தாநேத்து இரவு போலீஸ் வந்துருச்சு. பயந்து போய் பின்வாசல் வழியா தப்பிச்சு ஓடிருக்காரு.
''ஆறடி பள்ளத்திலே விழுந்து இடுப்பெலும்பு தெறிச்சுப் போச்சு. இடுப்புக்கு கீழே சொரணையே இல்லை. அதைக்கேட்ட முதலாளியம்மாவுக்கு நெஞ்சு வலி வந்து, ரெண்டு பேரையும் ஆஸ்பத்திரிலே சேர்த்திருக்கு... எங்கய்யா எப்படி தான் இதிலிருந்து மீண்டு வரப் போறாரோ... நான் ஆஸ்பத்திரிக்கு போறேன், உங்ககிட்டே ஒரு வார்த்தை சொல்லிடலாமுன்னு வந்தேன்,'' என்றபடி ஓடினான்.

அமெரிக்காவிலிருந்து, தன் பேரன் சிவா, குடும்பத்துடன் அவன் அம்மாவைப் பார்க்க வந்திருக்கும் சேதியறிந்தார். இரண்டு கொள்ளு பேரன்கள். பிறந்ததில் இருந்து இதுவரை பார்க்கவே இல்லை.
சிவநேசனின் மனமகிழ்ச்சி, அன்றைய பூஜையில் கூட எதிரொலித்தது. தன் நன்றியை தெய்வத்திடம் நொடிக்குநொடி தெரிவிப்பது போல் இருந்தது, அவரது செயல்கள். பூஜையை முடித்து, வீட்டுக்கு வருகையில், வாசலில் பெரிய கார் நின்றிருந்தது.
சிவா குடும்பமே வந்திருப்பது புரிந்து துள்ளலுடன் வீட்டுக்குள் நுழைந்தார். கலகலவென இருந்தது வீடு. தாத்தாவை நமஸ்காரம் செய்த சிவாவிடம், ''எங்கே என் குட்டிக் கொள்ளுப் பேரன்கள்,'' என்றார்.
கொல்லைப்புறத்தில் விளையாடிய சிறுவர்கள், 'குடுகுடு'வென ஓடி வந்தனர். முதலில் வந்தவனுக்கு ஏழு வயதிருக்கும். வெளிநாட்டு வாசனை முகத்தில் தெரிந்தது. பின்னால் வந்த சிறுவனைப் பார்த்து வியந்து, நின்றார்.
நெற்றி நிறைய விபூதி, கற்றை கற்றையாக அவிழ்த்துவிட்ட குடுமி போல் அழகிய கேசங்கள் நல்ல சிவந்த நிறம். ஞானக்குழந்தை போல் இருந்தான்.
''சிவா, இவன்?'' என இழுத்தார்.
''ரிஷி, தாத்தாவை சேவிச்சுக்கோ,'' என, சிவா கூறியதும், சாஷ்டாங்கமாக காலில் விழுந்து வணங்கியது, அக்குழந்தை.
ஒருகணம் திகைத்த சிவநேசனை தலையை உயர்த்திப் பார்த்து, மந்தகாசமாகச் சிரித்தான். கொள்ளுப் பேரனை வாரியணைத்து துாக்கினார்.
''ரிஷி, நம்ம அகஸ்தீஸ்வரரைப் பற்றி ஒரு பாடல் சொல்லு,'' என்றான், சிவா.
'ஞாலம் மல்குந் தமிழ் ஞானசம்பந்தன் மாமயில் ஆருஞ்சோலை புடை சூழ் அகத்தியன்பள்ளியுள் சூழ நல்லபடையான் அடிதொழுது ஏத்திய மாலை வல்லாரவர் தங்கள் மேல்வினை மாயுமே...' பாடி முடித்தான், ரிஷி.
மெய்சிலிர்த்துப் போனார். சிறு குழந்தை பாடுவது சாத்தியமா? சாட்சாத் ஞானசம்பந்தன் போல என்ன அதிசயம் இது.
''தாத்தா... இவன் பிறந்ததில் இருந்து கவனித்து வருகிறேன். எதோ ஒன்று அவனுக்குள் இருக்கிறது. தேவாரப் பாடல்களை மூன்று வயதில் சொல்லிக் கொடுத்தேன். சமஸ்கிருத ஸ்லோகங்கள் கற்றுக்கொண்ட விதம், பேசுவது, நடவடிக்கை எல்லாமே பாந்தமாக இருக்கிறது. அவன் ஞானப்பால் உண்ட சம்பந்தன் இல்லை, நம்மை போலவும் இல்லை. அதனால், ஒரு முடிவு பண்ணியிருக்கேன்,'' என்றான், சிவா.
என்ன என்பது போல், அவனைப் பார்த்தார்.
''இவனை வேதபாடசாலைக்கு அனுப்பலாம்ன்னு இருக்கேன்.''
''சிவா... நீ இருப்பது வெளிநாட்டில்.இவன் வேதம் படித்து என்னை போல் கஷ்டப்படணுமா, யோசி.''
''தாத்தா... நான் நல்லா சம்பாதிக்கிறேன். இன்னொரு பிள்ளையை அமெரிக்கா வளர்ப்பாக வளர்க்கப் போகிறேன். என் சம்பாத்தியம், சொத்து ரிஷிக்கு கொடுத்திட்டா போச்சு.
''நாட்டை பாதுகாக்க ராணுவத்திற்கு பிள்ளைகளை அனுப்புவது ஒருவகையில் தியாகம் என்றால், நமது பண்பாடு, கலாசாரத்தையும் பாதுகாக்க தகுதியானவர்களை அனுப்பத்தானே வேண்டும். வழிவழியாக வர வேண்டாமா?''
சிவநேசனுக்கு பேச்சே வரவில்லை.
''அதனால தாத்தா... உங்களுக்கு பிறகு, உங்க கொள்ளுப்பேரன் தான், நம் ஊர் சிவனுக்கு மணியடிக்கப் போறான். கோவிலை விட்டுக் கொடுத்துடாதீங்கோ. உங்க சிவனுக்கு எத்தனை நுாற்றாண்டுகள் ஆனாலும் தொடர்ந்து ஓயாத மணியோசை ஒலிக்கும்,'' என்றான் புன்சிரிப்புடன்.
சிவநேசனுக்கு கண்ணீர் கசிந்தது.
சுவற்றில் மாலை அணிவிக்கப்பட்ட படத்தில் புன்னகைத்தார், காஞ்சி மகாப்பெரியவர்.

கே. சிவசண்முக நாதன்
படிப்பு: எம்.எஸ்சி., (நீர் புவியமைப்பியல் விஞ்ஞானி) மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
ஆர்வம்: முகநுால் குழுமத்தில், கவிதைகள் மற்றும் சிறுகதை எழுதுவது.
ஆறுதல் பரிசு பெற்றிருப்பது, எழுத்துப்பணியில், முழு மூச்சாக ஈடுபட ஊக்கமளிப்பதாக கூறுகிறார்.
கதைக் கரு உருவான விதம்: என் பணியின் காரணமாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்யும்போதெல்லாம், சிற்றுார்களாக இருந்தாலும் கோவிலுக்கு செல்வது வழக்கம். கூட்டமே வராவிட்டாலும், வருமானம் இல்லாவிட்டாலும் நித்திய பூஜைகள் செய்யும் பல அர்ச்சகர்களை கண்டிருக்கிறேன். அவர்களின் தெய்வப் பற்று மனதை நெகிழ வைக்கும். அதிலிருந்து பிறந்தது, இக்கதை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani Iyer - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-டிச-202115:41:31 IST Report Abuse
Mani Iyer அருமை.. தொய்வில்லாத கதை.. நேரில் நடப்பது போன்ற பிரமை நன்றி திரு. சிவசண்முகநாதன் ஐயா
Rate this:
Cancel
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
26-டிச-202114:14:55 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன் அருமை திரு. சிவசண்முகநாதன் அய்யா... உண்மையில் அருமையான கதை... இது தற்போதைய காலத்திற்கான தேவையான கதை... சிறப்பு... கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை... விறுவிறுப்பு, பொருள் பொதிந்த கருத்து, கதைக்கரு அற்புதம்... வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள் அய்யா...
Rate this:
Cancel
Karthik - chennai,இந்தியா
20-டிச-202115:02:42 IST Report Abuse
Karthik உண்மை முற்றிலும் இப்படி எல்லோரும் எதாவது ஒரு விதத்தில் செய்தால் நமது கலாச்சாரம் நிலைத்து நிற்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X