பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்!
'புனரபி ஜனனம் புனரபி மரணம்...' கேசட் பாடிக் கொண்டிருந்தது. ஹாலில் உறவினர் கூட்டம் காத்திருந்தது.
நடு நாயகமாக (நாயகியாக) படுத்திருந்தாள், சத்யா. தப்பு, கிடத்தப்பட்டிருக்கிறாள்.
ஊழ் விதி வலிது. ஆனால், அதை ஏற்கத்தான் முடியவில்லை. இந்த மத்திம வயதில், மரணத்திற்கு என்ன அவசரம்...
மனைவியின் சடலத்தின் மீது விழுந்து அரற்றினான், திருநாவுக்கரசு என்கிற அரசு.
'என்னை விட்டுப்பிரிய எப்படி மனசு வந்தது... கைக் கோர்த்து வாழ்க்கையை ஆரம்பிச்சபோது, இப்படி கைவிட்டுட்டுப் போவேன்னு நீ சொல்லவே இல்லையே... இதுக்குத் தான் போலியா அருந்ததி பார்த்தியா... அம்மி மிதிச்சியா, அந்த அம்மிக்கல்லை என் தலையிலே போட்டுட்டியே சத்யா...'
அவன் மகள் ராணி, 12 வயது சிறுமி, 'அம்மா...' என்று அழுதபடி இருக்க... சுற்றிலும் உள்ள உறவுக் கூட்டம் ஆறுதல் சொல்ல, ஒரு சோகக் காவியம் அரங்கேறியது.
ஆண்டாண்டுதோறும் அழுது புலம்பினாலும் மாண்டார் வருவாரோ?
''அப்பாவை சமாதானப்படுத்துங்க. இப்படி அழுது அழுதே மயங்கி விழுந்திடப் போறாரு,'' அழுகையின் நடுவே கூறினாள், ராணி.
''அரசு... இனி ஆக வேண்டியதைப் பாருப்பா... ஆம்புலன்ஸ் வந்தாச்சு.''
''ஐயோ...'' தலையில் அடித்து அழுதான், அரசு.
''இனி பார்க்க வேண்டியது ஏதும் இல்லை; என் மரணம் தான் பாக்கி. என்னையும் அந்த ஆம்புலன்ஸ் கூடவே அனுப்பிடுங்க. நான் அப்படியே போயிடறேன்.''
''உனக்காக இல்லாட்டியும், ராணிக்காகவாவது நீ வாழணும்பா.''
அரசுவின் அழுகை ஓயவில்லை. அழுதபடி இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தான்.
காலண்டரின் தாள்கள் வேகமாகக் கிழிக்கப்பட்டன.
அன்று...
தன் புராஜெக்ட் புத்தகத்தை வீட்டிலேயே மறந்து வைத்து வந்து விட்டாள், ராணி.
'வீட்டிற்குப் போய் எடுத்து வர தாமதமாகும். வகுப்பு முடிவதற்குள், 'சப்மிட்' செய்ய வேண்டும். அப்பாவிற்கு போன் பண்ணி, டிரைவரிடம் கொடுத்து அனுப்பச் சொல்லலாம்...' என எண்ணியபடி, 'ஆபீஸ் ரூம்' போய் அனுமதி வாங்கி, போன் செய்தாள்.
'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது, போன். 'எங்காவது அறையில் அழுது கொண்டு படுத்திருப்பார்; இத்தனை மாதங்கள் ஆகியும் இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து அப்பா மீளவில்லையே...' என நினைத்தபடி, வெளியே கிளம்பி, ஆட்டோ பிடித்தாள்.
மொபைலில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான், அரசு...
''அவசரப்படாதே ரம்யா... ரொம்ப அவசரப்பட்டா நாம போட்ட திட்டமெல்லாம் வீணாயிடும். ஆறு மாசம் தானே ஆயிருக்கு... இன்னும் கொஞ்ச நாள்... முதல்ல, ராணியை சமாதானப்படுத்தி ஹாஸ்டல்ல சேர்த்துடறேன்; சமையல்காரரை நிறுத்திடறேன்; உடம்பு சரியில்லாத மாதிரி நடிக்கறேன்.
''என் நடிப்புத் தான் உனக்குத் தெரியுமே... சத்யா இறந்தபோது, ஊரையே நம்ப வைச்சவன். உதவிக்கு, நீ ஊரிலே இருந்து வர மாதிரி வா... நான் அழாம இருக்கறதைப் பார்த்து ராணியே நம்மளை சேர்த்து வைச்சுடுவா. சின்னப் பொண்ணு, எம் மேல கொள்ளை ஆசை...
''இப்போ அவசரப்பட்டா நாம சத்யாவைக் கொலை பண்ணினது தெரிஞ்சுடும்... எம் மேல உயிரையே வைச்சிருந்தா, சத்யா... ஆனா, உன்னோட நான் இருக்கற போட்டோ... சரி அதை விடு,'' என்றான்.
அழைப்பு மணி அழைக்க, தன் பர்சனல் போனை அவசரமாக அலமாரிக்குள் வைத்து, கதவு திறந்த அரசு, ''என்னம்மா இந்த நேரத்திலே?'' திகைத்தான்.
''நோட் புக்கை மறந்துட்டேன் டாடி... எத்தனை நேரமா, 'பெல்' அடிக்கிறேன்... அம்மாவை நினைச்சு அழுதிட்டு இருந்தீங்களா?''
''அ... ஆமாம்!'' திணறினான்.
நோட் புக்கை எடுத்த ராணி, ''அப்பா, சும்மா அழாதீங்க... உங்களுக்கும் உடம்புக்கு வந்துட்டா எனக்கு யார் இருக்காங்க?'' என்றபடியே தான் வந்த ஆட்டோவில் ஏறினாள்.
நிம்மதிப் பெருமூச்சு விட்டான், அரசு.
தந்தையைத் தேடி, அவர் அறைக்கு வந்தாள், ராணி.
''என்னம்மா?''
''என்னால இந்த வீட்டிலே இருக்க முடியலைப்பா.''
''என்னம்மா சொல்றே?''
''எங்கே பார்த்தாலும் அம்மா ஞாபகம்... அதோ அந்த சோபாவிலே நீங்களும், அம்மாவும் உட்கார்ந்து கதை பேசினது... டைனிங் ரூமிலே அம்மாவைக் கிண்டல் பண்ணினது,'' என்றாள்.
இவனும் பார்த்தான். அந்த டைனிங் டேபிளில் தான் விஷம் கலந்த உணவை, சத்தியாவுக்கு அன்புடன் ஊட்டினான். அப்படியும் சாகாதவளை கடைசியில், அந்த சோபாவில் வைத்துத் தான் இவனும், ரம்யாவும் தலையணை வைத்து அமுக்கினர்.
''என்னப்பா?''
''உம் சொல்லு.''
''அம்மா ஞாபகம் அதிகமா வர்றதுபா.''
''விடும்மா... எனக்கும் இங்க இருக்கப் பிடிக்கல தான். ஆனா, பிசினஸ்.''
''வேண்டாம்பா நீங்க இங்கேயே இருங்க. அம்மா படத்துக்கு முன், தினமும் குத்துவிளக்கு ஏத்தணும். ஒரு வருஷம் வரை அந்த ஆவி, தான் இருந்த இடத்தை பார்க்க வருமாம். அம்மாவை ஏமாத்தக் கூடாதுப்பா.''
''சரிம்மா... உன் ஹாஸ்டல் அட்மிஷனுக்கு ஏற்பாடு பண்றேன்,'' என, மனதுள் எழுந்த மகிழ்ச்சியை வெளிக் காட்டாமல் பேசினான்.
ராணியை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு வரும் வழியில் கொஞ்சம் ஸ்வீட் வாங்கி, வீடு திரும்பும் போது தான், பர்சனல் மொபைல் போன் ஞாபகம் வந்தது.
ரம்யாவுடன் அன்று பேசியதுடன் சரி... ராணியை ஹாஸ்டலில் சேர்க்க வேண்டிய ஏற்பாடுகளில் மூழ்கி விட்டான். தவிர, ராணி வீட்டிலேயே இருந்ததால் இவனால் பேச முடியவில்லை.
வீட்டிற்கு வந்து, அலமாரியை திறந்தான். மொபைல் போன் இருந்தது. குளித்து உடை மாற்றி, மகிழ்ச்சித் தகவலை ரம்யாவிற்கு சொல்ல போனை எடுத்தான். வித்தியாசமாக இருந்தது.
'இது ராணியின் போன் அல்லவா? அவள் கை ரேகைகளில் திறக்கும் போன் ஆச்சே...' என நினைக்கையில், அழைப்பு மணி ஒலிக்க, கதவு திறந்தான். இன்ஸ்பெக்டர் நின்றிருந்தார்.
''எ... என்ன சார்?'' திணறினான்.
''ஒண்ணுமில்லை, இந்த வழியா போனேன். உங்களைப் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன். எப்படி இருக்கீங்க?''
''நல்லா இருக்கேன்.''
''அன்னிக்கு மனைவி இறந்ததுலே, 'அப்செட்'டா இருந்தீங்க...''
''என்ன பண்றது... விதியை ஏத்துட்டு தானே ஆகணும்.''
''உண்மை தான்... விதிய தானே வந்தா ஏத்துக்கலாம்; நாமே உருவாக்கினா?''
''எ... என்ன சொல்றீங்க?''
''இது, உங்க போனா பாருங்க.''
இன்ஸ்பெக்டர் கையில், இவன் மொபைல் போன்.
''உங்க மகள் ராணி தான் கொடுத்தாங்க... வெரி இன்ட்ரஸ்டிங்... காதல் காவியமே படைச்சிருக்கீங்க... எத்தனை அந்தரங்க புகைப்படங்கள். வாங்க, வேன்ல உங்க காதலியும் காத்துட்டு இருக்காங்க... ஜோடியா ப்ளான் பண்ணினீங்க, ஜோடியா ஜெயில்லே இருங்க... ஆனா, தனி தனி செல்லுலே.''
இனி, அரசுவின் சாம்ராஜ்யம் சரிந்து, ராணியின் முடிசூட்டு விழா நாள், மிக அருகில் என்பது இவனுக்குப் புரிந்தது.
அதே சமயம், தன் அம்மாவின் புகைப்படம் முன், அழுதபடி நின்றாள், ராணி.
''என்னை மன்னிச்சுடு அம்மா. அப்பா மேலே உனக்கு எத்தனை ஆசைன்னு எனக்குத் தெரியும். ஆனா, உன் அன்புக்கு அவர் தகுதியற்றவர்,'' என்றவள், அன்றைய தினத்தை நினைவுபடுத்திக் கொண்டாள்.
புராஜெக்ட் நோட்டை எடுக்க வந்த அன்று, வீட்டில் யாருமில்லை என்று, அரசு தைரியமாகப் பேசியதை கேட்டு திகைத்தாள், ராணி.
'இனி, எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனம் தேவை...' என நினைத்து, மறுபடியும் வாசலுக்கு வந்து அப்போது தான் வந்தவள் போல் அழைப்பு மணி அடித்தாள்.
மனைவியைக் கொல்ல கணவன் நாடகம் ஆடினால், குற்றவாளியைக் கண்டுபிடிக்க இவள் நாடகம் ஆடக் கூடாதா என்ன, ஒரே ரத்தம் தானே?
இவள் முயற்சி நல்லதைக் காப்பாற்ற... அப்பாவின் பர்சனல் போனை சமயம் பார்த்து எடுத்து, ஹாஸ்டல் போவதாக நடித்து, எத்தனை எத்தனை சாணக்கியத்தனங்கள்.
அழுதவளை, யாரோ மானசீகமாக கண்ணீரைத் துடைப்பதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.
'உன் கண்ணில் நீர் வழிந்தால்...' கணவன் மட்டும் பாடும் பாடல் அல்ல இது.
ஒரு தாய், தன் மகளுக்கும் பாடலாம்.
விமலா ரமணி