முன்கதை சுருக்கம்: ஆராதனா மனதிலும் காதலை வரவழைத்து சென்னை வந்தான், விக்ரம். ஏழெட்டு மாப்பிள்ளை புகைப்படங்களை ஜோதிடர் காட்ட, அம்பிகாவை கூப்பிடும்படி மனைவி சுமதியிடம் கூறினார், ராமலிங்கம் -
தலை பின்னாமல், 'லுாஸ் ஹேர்' ஆக விட்டிருந்த அம்பிகா, பூ போட்ட காட்டன் சட்டையும், பேன்ட்டும் போட்டிருந்தாள்.
அம்மா அழைக்க அறையிலிருந்து, ''என்னம்மா?'' என்றாள்.
''ஜோசியர் உனக்காக வரன் கொண்டு வந்திருக்கிறார். பையன் நல்லா இருக்கான். வந்து பார்,'' என்றாள், சுமதி.
வேகமாக படியிறங்கி வந்தவளிடம், படத்தை நீட்டினார், ராமலிங்கம்.
அதை வாங்கி, பார்க்காமலேயே டேபிள் மீது கவிழ்த்தாள். மூவரும் புரியாமல் அம்பிகாவை பார்த்தனர்.
''அப்பா, நான் மும்பையில் ஒருத்தரை சந்தித்தேன். பெயர் அர்ஜுன். பிசினஸ் பண்றார். மும்பையில் ரெண்டு பேரும் ஒண்ணா பழகி, ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுகிட்டோம். ரொம்ப நல்ல மாதிரி. பார்த்தா உங்களுக்கே புடிக்கும். அவரை விட்டுட்டு நான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. ப்ளீஸ்,'' என்றாள்.
ராமலிங்கமும், சுமதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
''ஜோசியரே, என் பொண்ணு ஆசைப்பட்டா, மாட்டேன்னு என்னால் சொல்ல முடியாது. தயவுசெய்து தப்பா நினைக்காதீங்க. உங்களை சிரமப்படுத்திட்டேன்,'' என்றார், ராமலிங்கம்.
''நான் வரேன்ய்யா,''' என்று கிளம்பினார், ஜோசியர்.
ராமலிங்கத்தின் காதில் சுமதி ஏதோ சொல்ல, முகம் மலர்ந்தார்.
''கரெக்ட். ஜோசியரே ஒரு நிமிஷம் வாங்க.''
''சொல்லுங்கய்யா...''
''என் மத்த ரெண்டு பொண்ணுங்கள்ல ஏதாவது ஒரு பொண்ணுக்கு அந்த பையனை பிடிக்குதான்னு கேட்டு பார்க்கலாம், கொஞ்சம் இருங்க,'' என்றார்.
உள்ளே திரும்பி, ''அர்ச்சனா, ஆராதனா,'' என அழைத்தார்; வந்தனர்.
''ஜோசியரே எப்ப நான் புதுசா ஒரு கட்டடம் கட்ட ஆரம்பிச்சாலும், என் மூணு பொண்ணுங்களும் எந்த ஊர்ல இருந்தாலும் தவறாமல் வந்துருவாங்க. கானத்துார் பூஜைக்காக வந்திருக்காங்க.''
''நல்லது ஐயா!''
''அர்ச்சனா, ஆராதனா... ஜோசியர் ஒரு பையன் போட்டோவை காட்டினார். எனக்கும், அம்மாவுக்கும் பிடிச்சிருக்கு. அம்பிகா யாரையோ, 'லவ்' பண்றாளாம்; முடியாதுன்னு சொல்லிட்டா. நீங்க ரெண்டு பேரும் பாருங்க. யார் ஓ.கே., சொன்னாலும் சம்மதம்,'' என்றார்.
போட்டோவை கையில் கூட அவர்கள் வாங்கவில்லை.
''அப்பா, நானும் ஒருத்தரை லவ் பண்றேன். டாக்குமென்ட்டரி பிலிம் எடுக்கிறவர். கோல்கட்டாவில் ஒரு சின்ன தகராறுக்கு அப்புறமா எங்களுக்குள்ள, 'லவ்' வந்தது. உங்க சம்மதத்தோடு திருமணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்,'' என்றாள், அர்ச்சனா.
ராமலிங்கத்துக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
''ஐயா நான் கிளம்புறேன்,'' என்றார், ஜோசியர்.
''இருங்க சாமி... இன்னொரு பொண்ணு இருக்கால்ல?''
''அது மட்டும் என்ன மாத்தியா சொல்ல போகுது?''
''ஜோசியர் சொல்றது கரெக்ட்ப்பா,'' என்றாள், ஆராதனா.
''அவர் பெயர் அதர்வா. ஆன்மிக பத்திரிகையில் கோவில்களை பற்றி எழுதுகிறவர். அவரை தான்...'' என்றாள்.
''ஐயா வாழப்போறது அவங்க. அவங்க மனசுக்கு பிடிச்சவங்களையே கட்டி வைங்க, நான் வரேன்,'' என்று கிளம்பினார், ஜோசியர்.
''ஊர்ல இருந்து வந்ததிலிருந்து இதைப்பத்தி வாயே திறக்கலையே, மூணு பேரும். ஏதோ வேலை பார்க்குறேன்னு போயிட்டு, 'லவ்' பண்ணிட்டு வந்து இருக்கீங்களா,'' என்றாள், சுமதி.
''அம்மா இதெல்லாம் எதேச்சையா நடந்தது. பிளான் பண்ணி நடக்கல,'' என்று அம்பிகா சொன்னதும், அர்ச்சனாவும், ஆராதனாவும் ஆமோதித்தனர்.
''இதெல்லாம் இப்ப சகஜம். சரி விடு சுமதி,'' என்று ராமலிங்கம் சொன்னதும், பெண்கள் மூவரும் அப்பாவை செல்லமாக கட்டிக்கொண்டனர்.
''இத பாருங்க மாப்பிள்ளைகளை நானும், அம்மாவும் பார்க்கணும். எங்க வந்து பார்க்கணும்னு கேட்டு சொல்லுங்க?''
''எங்கேயும் போக வேண்டாம் பா... நம் வீட்டுக்கே வரச் சொல்லலாம். என்ன அர்ச்சனா, ஆராதனா?''
'கரெக்ட். அம்பிகா சொன்ன மாதிரியே இங்கே வரச்சொல்லலாம்...' என, அவர்கள் ஒத்துக் கொண்டனர்.
''சரி, மூன்று மாப்பிள்ளைகளையும் ஒரே நாளிலே வரச்சொல்லுங்க... நம் வீட்டிலேயே பார்த்து பேசிடலாம்.''
வரப்போவது ஒரே ஆள்தான் என தெரியாமல், சந்தோஷமாக, அவரவர் அறைக்கு சென்றனர்.
'மாத்தி மாத்தி மூணு பேரும் மணிக்கணக்கில் போன்ல பேசறாங்களே தவிர, நாம் எதிர்பார்த்த மாதிரி இன்னும் எதுவும், 'மூவ்' ஆகலையே. கஷ்டப்பட்டது வீணா போயிடுமோ?' என நினைத்தபடி, 'மெடிக்கல் ஷாப்பில்' மாத்திரை டப்பாக்களை சரி செய்து கொண்டிருந்தான், விக்ரம்.
இரண்டு மணி நேரம் கழித்து அம்பிகாவிடமிருந்து போன்.
''அம்பிகா... எங்கே மும்பைலே இருந்தா?''
''இல்லை, சென்னையில எங்க வீட்டுலேருந்து. ஒரு சந்தோஷமான செய்தி.''
''என்ன?''
''நம் காதலைப்பத்தி அப்பா - அம்மாகிட்ட சொன்னேன். சரின்னு சொல்லிட்டாங்க. உன்னை நேர்ல பார்க்கணுமாம். எப்ப வர?''
''ஏய், எதாவது, 'இன்டர்வியூ' வைப்பாரா?''
''சே சே... என் 'செலக் ஷன்'
எப்படின்னு பார்க்க.''
''உங்க அப்பா எப்படி... எனக்கு என்ன சொத்து இருக்கு... என் வங்கி கணக்குல எவ்வளவு இருக்குன்னு பார்ப்பாரா... தாயே, இப்பவே சொல்லிடறேன். உன் அளவுக்கு நான் வசதியானவன் இல்லை.''
''ரொம்ப நடிக்காத, உன்னை அவர் பார்த்தா போதும். எதுவும் கேட்க மாட்டார்.''
''சரி!''
''அப்புறம் இன்னொரு விஷயம். என் தங்கைங்க ரெண்டு பேரும் கூட யாரையோ, 'லவ்' பண்றாங்க. அப்பா ஒரே நாள்ல மூணு மாப்பிள்ளையையும் பார்க்கணும்னு சொல்லியிருக்கார். அதனால், நீ என்னிக்கு இங்க வரேன்னு சொல்லு?''
'நான் வேற விதமா நினைச்சேன். இப்படி, 'ட்விஸ்ட்'டா கடவுளே. நானே எதிர்ப்பார்க்கலையே, சூப்பர்... மூணு மாப்பிள்ளையும் ஒரே நாள்ல வரணுமா... சபாஷ்...' என்று மனதுக்குள் சந்தோஷித்தான், விக்ரம்.
''ஏய்... என்ன பதிலே காணோம்?'' என்றாள்.
''இல்லை, நல்ல நாள் என்னிக்குன்னு பார்த்துக்கிட்டிருந்தேன். இன்னிக்கு தேதி 25. 28ம் தேதி முகூர்த்த நாள். அன்னிக்கு ஓ.கே.,வா?''
''ஓ.கே.,''
''எனக்கு ஓ.கே., மத்த ரெண்டு மாப்பிள்ளைக்கு ஓ.கே.,வான்னு கேட்க வேண்டாமா?''
''அதெல்லாம் என் தங்கச்சிங்க கேட்டுப்பாங்க.''
''அம்பிகா... உன் தங்கச்சிங்க தேர்வு செய்தவனை நீ பாத்தியா?''
''இதுவரைக்கும் இல்லை. அன்னிக்கு தான் பார்க்கணும். என் வீட்டு விலாசம் அனுப்பறேன். இப்ப நீ எந்த ஊர்ல இருக்க?''
''எங்க இருந்தா என்ன, 28ம் தேதி உங்க வீட்டுல இருப்பேன்.''
அதற்கு மேல் விக்ரமுக்கு கடையில் வேலை இல்லை. பக்கத்தில் இருந்த ஜூஸ் கடையில் நிறைய ஐஸ் போட்டு இரண்டு ஆரஞ்சு ஜூஸ் குடித்தான்.
அன்று மாலைக்குள் அர்ச்சனாவும், ஆராதனாவும் போன் செய்து, அதே விஷயத்தை கூறினர். முதல் தடவை கேட்பது போல் சந்தோஷத்தை காட்டினான்.
''அக்காவ, 'லவ்' பண்ற அர்ஜுன், 28ம் தேதி வரேனிருக்கார். அன்னிக்கே நீயும் வரணும்,'' என்றாள், அர்ச்சனா.
''அன்னிக்கா?''
''என்ன?'' டென்ஷனாக கேட்டாள்.
கொஞ்சம் பிகு செய்து, ''மைசூர்ல ஷூட்டிங் ஆரம்பிக்கலாம்ன்னு.''
''விஜய், எந்த வேலையா இருந்தாலும், 'கேன்சல்' பண்ணு. இது தான் முக்கியம்.''
''ம்ம். சரி!''
''வரும், 28ம் தேதி, விலாசம் அனுப்பறேன்.''
ஆராதனாவும் அதிகாரமாகவே உத்தரவு போட்டாள்.
''அதர்வா, 28ம் தேதி நம்ம வாழ்க்கைல முக்கியமான நாள். அம்பிகா, அர்ச்சனாவோட ஆளுங்க வரேன்னு சொல்லிட்டாங்க. நீயும் வந்துடு. கோவளத்துல அடி வாங்கினத ஞாபகம் வெச்சுக்க.''
''கல்யாணத்துக்கு முன்ன இப்படி மிரட்டுறியே, வரணுமான்னு யோசிக்கிறேன்,'' என்று சிரித்தான்.
''ஏய்!''
''சரி சரி... வரேன்.''
வரும், 28ம் தேதி, விக்ரம் வீசப்போவது வேறு குண்டு என, அவர்களுக்கு தெரியாது.
தேதி 28 -
டைடல் பார்க், மருந்தீஸ்வரர் கோவில், கொட்டிவாக்கம் தாண்டி விக்ரம் கார் போய்க் கொண்டிருந்தது. சீரான வேகத்தில் ஓட்டினாலும், அவன் மனம் வேறெங்கோ இருந்தது.
'எதுக்கு பா ஆஸ்பத்திரிக்கு போறோம்?'
'அத்தைக்கு உடம்பு சரியில்லை...'
'அத்தை எப்போ பா வீட்டுக்கு வருவாங்க?'
'நாளைக்கு...'
'என் கூட பழைய மாதிரி பேசுவாங்கல்ல?'
'ம்ம்...'
வீட்டிற்கு வந்தாள். ஆனால், பேசவில்லை.
ஈஞ்சம்பாக்கம் கோவிலை தாண்டும்போது கோபுரத்தை தரிசனம் செய்து கொண்டே தொடர்ந்தான். 'கூகுள்' காட்டிய வழியில் கார் போனது. வீட்டு மாடியிலிருந்து வாசலை பார்த்து கொண்டிருந்தாள், அம்பிகா. ஒரு கார் வந்து நிற்பதை பார்த்ததும் பரபரப்பானாள்.
'அர்ஜுன் வந்துட்டான்...'
அவள் மாடியிலிருந்து இறங்கி வருவதற்கும், வாட்ச்மேன் கதவை திறந்து அவனை உள்ளே அனுப்புவதற்கும் சரியாக இருந்தது.
''நான் தான் பர்ஸ்ட்டா, இல்லை அவங்க எல்லாம் வந்துட்டாங்களா?'' மனதுக்குள் கிண்டலாக சிரித்தபடி, சாதாரணமாக கேட்டான்.
''எப்பவும் நீதான் பர்ஸ்ட்.''
இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை, 'மேக் - அப்' போட்டபடி தன் அறையின் ஜன்னல் வழியே பார்த்த அர்ச்சனாவுக்கு, 'டென்ஷன்!'
'அம்பிகாவுக்கு எப்படி விஜயை தெரியும், தெரிஞ்ச மாதிரி பேசறா?' என நினைத்தாள்.
விக்ரமை ஹாலில் உட்கார வைத்து, ''அப்பா, அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன்,'' என்று உள்ளே போனாள், அம்பிகா.
வீட்டை பார்த்தபடி, ஹாலில் தனியாக உட்கார்ந்திருந்தான், விக்ரம்.
- தொடரும்.
கோபு பாபு