டிச.,27 மார்கழி அஷ்டமி
ஏழைகள் என்று இவ்வுலகில் யாருமே இல்லை. சிலர் தங்களுக்கு கண் இல்லை, கால் இல்லை, கை இல்லை என்று பிச்சை எடுத்து பிழைக்கின்றனர். பிச்சை எடுப்பதன் மூலம், தங்கள் காலம் முழுவதையும் ஓட்டி விடலாம் என்று கருதுகின்றனர். இது, சோம்பலின் அடையாளம். ஏனெனில், மனிதனைத் தவிர வேறு எந்த விலங்கும் பிச்சை எடுப்பதில்லை.
கல்லினுள் தேரையும், கருப்பை உயிரும் கூட ஏதோ ஒரு வகையில் உணவைப் பெறுகிறது. அதாவது, எல்லா உயிர்களுக்கும் படியளக்கிறான், கடவுள். இதை, பக்தர்கள் ஒரு விழாவாகவே எடுக்கின்றனர். மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, இந்த விழா நடக்கும். இது, சிவபெருமானுக்கு பிரியமான நாள். இன்று சிவன் மிகுந்த மனமகிழ்ச்சியுடன் இருக்கிறார். பாவம் செய்தவனுக்கு கூட, பாரபட்சமின்றி படியளக்கிறார். இது சம்பந்தமான புராணக்கதையைக் கேளுங்கள்...
உயிர்களுக்கு படியளப்பவர், சிவன். மனிதர்களுக்கு மட்டுமல்ல, எந்த உயிர் எங்கு ஒளிந்து வாழ்ந்தாலும் அங்கு சென்று, அதன் பசி போக்கி விடுவார். பார்வதிக்கு அவரை சோதித்துப் பார்க்க ஆசை.
ஒரு எறும்பைப் பிடித்து, குவளையில் போட்டு இறுக்கமாக மூடி விட்டாள். உயிர்களுக்கு படியளந்து விட்டு, இல்லம் வந்தார், சிவன். நமட்டு சிரிப்புடன், 'எல்லாருக்கும் படியளந்து விட்டீர்களோ...' என்று கேலியாகக் கேட்டாள், பார்வதி.
'ஆம்... அதிலென்ன சந்தேகம்...' என்றார், சிவன்.
குவளையை திறந்து காட்டி, 'இந்த எறும்பை மறந்து விட்டீர்களே...' என சொல்ல வாயெடுக்கும் போது, அதன் வாயில் ஒரு அரிசி துகள் இருப்பதைப் பார்த்தாள்.
'நாதா... இதெப்படி சாத்தியம்...' என்று கேட்ட போது, 'அதனுள் ஏற்கனவே அரிசி துகளை போட்டு விட்டேன். நீ கவனிக்காமல் மூடி விட்டாய்...' என்றார்.
இந்த நிகழ்வு, மார்கழி அஷ்டமியன்று நடந்தது. அஷ்டலட்சுமிகள் அருளும் எல்லா செல்வமும் கிடைக்கவே, இந்த திருவிழாவுக்கு புனித மாதமான மார்கழி அஷ்டமியைத் தேர்ந்தெடுத்தனர்.
இந்நாளில் மதுரையில், மீனாட்சியம்மனுடன், சொக்கநாதர் வெளிவீதிகளில் பவனி வருவார். அப்போது சப்பரத்தில் இருந்து நெல், அரிசி மணிகள் கீழே சிந்தப்படும். அதை அனைத்து உயிர்களும் எடுத்துக் கொள்ளும்.
சிவனுக்கு, 'சங்கரன்' என்ற பெயர் உண்டு. சங்கரன் என்றால், நலத்தை செய்பவன் என, பொருள். மார்கழி அஷ்டமியை சங்கராஷ்டமி என்பர். அன்று 'சங்கரா... சங்கரா...' என்று, சிவ நாமத்தை உச்சரித்தால், மற்றவருக்கு நல்லதைச் செய்யும் நற்குணம் தானாகவே வந்து விடும்.
சங்கராஷ்டமியை, தானத் திருநாள் என்றும் சொல்வர். இன்று செய்யும் தானம், பல மடங்கு புண்ணியத்தை தரும். வரப்போகும் புத்தாண்டில் நமக்கு எல்லா வளமும் கிடைக்க, மார்கழி அஷ்டமியன்று, சிவனை வேண்டுவோம்.
தி. செல்லப்பா