குழந்தைகள் என்றால், சேஷனுக்கு பிரியம் அதிகம். குவைத்தில் உள்ள இந்திய பள்ளி நிகழ்ச்சிகளின் அழைப்பை ஏற்று விருப்பமுடன் கலந்து கொண்டார். அந்த பள்ளி விழாவில் தான்- ஏற்பாட்டாளர்கள் சொதப்ப, நேரமின்மை கருதி, வேகமாய் சேஷன் எழ, எங்களுக்கெல்லாம் பயம்.
ஆனால், நேராய் மேடைக்கு போய், 'மைக்'கை பிடித்தார், சேஷன்.
'மாணவர்களே... நீங்கள் எல்லாரும் நன்றாக நடனம் ஆடுகிறீர்கள். வாழ்த்துக்கள்! முழுதாய் எல்லாவற்றையும் பார்க்க விருப்பம் இருந்தாலும், நான் ஒப்புக்கொண்ட வேறு நிகழ்வுக்கு போக வேண்டும். என்னை அனுமதித்தீர்கள் என்றால் பேசிவிட்டு செல்கிறேன்...' என்றார்.
'பேசுங்க...' என்ற ஆரவாரத்துக்கிடையில் உரையை நிகழ்த்தி, விடைப்பெற்றார்.
குவைத்தின் எண்ணெய்க் கிணறுகள், செயற்கை ஊற்று பாசனத்தில், பாலைவனத்தில் நடக்கும் பசுமை புரட்சி, உள்ளூர் ஷேக்குகள் என்று பலரையும் அவர் சந்தித்தார்.
இந்தியன், 'எம்பஸி'க்கு, பணிப்பெண்கள் தஞ்சம் கேட்டு தொடர்ந்து வந்தனர். இதையடுத்து, இவர்களுக்காக தனியாய் வாடகைக்கு பங்களா எடுத்து, 'ஷெல்டர்' இயக்க ஆரம்பித்தது, 'எம்பஸி!'
இவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாமல், ஆந்திரா மாநிலம், கடப்பா பகுதியிலிருந்து வந்தவர்கள். அடுத்து, தென் தமிழ் மாவட்டத்தார் மற்றும் கேரளப் பெண்கள். சட்ட விரோதமாய்- விசா முடிந்து தங்கியிருப்பவர்கள், சம்பாத்தியத்துக்கு வாய்ப்பு இல்லாததால் முறைகேடான வழிகளில் இறங்கி விடுகின்றனர். இவர்களால், குவைத் அரசுக்கும் பெரிய தலைவலி!
இவர்களை கண்டறிந்து, அபராதம் இல்லாமல் ஊருக்கு அனுப்ப, அவ்வப்போது, 'பொது மன்னிப்பு' முகாம் அறிவிக்கிறது, குவைத் அரசு. பொது மன்னிப்பு வேண்டுவோர்,- அவர்களாக இந்திய துாதரகத்திற்கு வந்து, மனு தர வேண்டும்.
எந்த பேரிடர் அல்லது பாதிப்பு என்றாலும், முன்னின்று செயல்படுகிற, 'இந்தியன் பிரன்ட்லைனர்ஸ்' அமைப்பும் ஒரு அங்கம்.
அத்துடன்,-- 'டார் அல் ஸபா வெல்பர்' அமைப்பின் கீழ், தமிழ் அமைப்புகளான,- குவைத் தமிழ் ஓட்டுநர் மையம்; தமிழ் மக்கள் சேவை மையம்; வெளிநாடு வாழ் மக்கள் சேவை மையம்; இந்தியன் சோஷியல் சர்வீசஸ்; மா.ஜா.க., இஸ்லாமிய பிரசார பேரவை; தாய் மண் கலை இலக்கிய பேரவை; மிஸ்க், தமிழோசை போன்றவை இத்தொண்டில் இறங்கி, சிறப்பாக செயல்பட்டன.
இது ஒரு புறமிருக்க-, 'கொரோனா' காரணமாய், வேலை,- சம்பளமின்றி -வாடகை கொடுக்க முடியாமல் -சாப்பாட்டுக்கே பல்லாயிரக்கணக்கானோர் கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
அடுத்த கட்டமாக, குவைத்தில் பல்வேறு பகுதிகளில் கஷ்டப்படுபவர்களை கண்டறிந்து, ஆயிரக்கணக்கானோருக்கு ரேஷன் பொருட்களை தனியாகவும், இந்திய துாதரகத்துடன் இணைந்தும் விநியோகித்தது, 'பிரன்ட்லைனர்ஸ்!'
குவைத்திலிருந்து அவசர தேவை கருதி, இந்தியா செல்ல விரும்புபவர்களுக்கும், 'கொரோனா'வால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், 'பிரன்ட்லைனர்ஸ்' நிதி உதவி செய்திருக்கிறது.
இதன் சேவையை குவைத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், இந்தியாவில், 'பிரதமர் நிவாரண நிதி, ஆட்டோகிராப் புகழ் கோமகனின் இசை குழு, பாலம், எக்ஸ்நோரா, உலக பெண்கள் சென்னை டிரஸ்ட், அன்னை டிரஸ்ட், நின்னலம் டிரஸ்ட், கங்காரு டிரஸ்ட்' என, பல சேவை அமைப்புகள் மூலம் தமிழகத்திலும் -உணவு, மளிகை, பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிற்று.
கார்கில் போர் சமயத்தில், அப்போதைய பிரதமர் வாஜ்பாய், 'உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இந்தியர்கள் நிதி உதவி அளியுங்கள்...' என்று விண்ணப்பித்திருந்தார்.
எந்த ஒரு நல்ல காரியமானாலும் செய்வதற்கு மனசு இருந்தாலும், யாராவது துாண்டினாலோ அல்லது ஒருங்கிணைத்தாலோ தான் செய்ய முன் வருவர்.
அந்த அடிப்படையில், குவைத்தில் நண்பர்கள் வட்டத்தில் நாங்கள் நிதி அளிக்க, 'எம்பஸியில் சொல்லி பெரிய அளவில் திரட்டலாமே. அம்பாசிடரிடம் பேசுங்கள்...' என்று யோசனை கூறினர்.
இதையடுத்து, அப்போதைய (1998) அம்பாசிடர், பிரபுதயாலாயை சந்தித்து, 'பிரதமரின் கோரிக்கையை பரப்புங்கள்...' என்றோம்.
அவர் கொஞ்சமும் பிடி கொடுக்காமல், 'அப்படியெல்லாம் யாரும் நிதி தருவர் என்ற நம்பிக்கை எனக்கில்லை...' என்று மறுத்தார்.
'சார், முக்கியமான நபர்களை அழையுங்கள்; அறிவியுங்கள். நாங்கள் - 'பிரன்ட்லைனர்ஸ்' முதலில் ஆரம்பிக்கிறோம். அப்புறம் பாருங்கள்... எனக்கு தெரிந்து பல தொழிலதிபர்கள் உதவ தயாராக உள்ளனர்...' என்று வலியுறுத்தவே, அவரும் அரைகுறை மனதுடன், 'மீட்டிங்'குக்கு ஏற்பாடு செய்தார்.
அன்று, செம வசூல்! இதை அம்பாசிடர் எதிர்பார்க்கவில்லை.
'பிரன்ட்லைனர்ஸ்' மூன்றாம் பாகம் வெளியீடு மற்றும் கார்கில் நிதி என திட்டமிட்டோம். சரத்குமாரின் அறிமுகம், மணிமேகலைப் பிரசுரம் ரவி தமிழ்வாணன் மூலம்தான் எனக்கு கிடைத்தது.
'நான் வருகிறேன். ஆனால், கமர்ஷியல் நிகழ்ச்சிகளுக்குப் போவதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன்...' என்றார், சரத்.
கார்கில் நிதி திரட்டு என்று சொன்னதும், எந்த, 'டிமாண்டும்' இல்லாமல் வந்தார்.
சரத்குமார், குவைத் வந்தபோது நிறையவே ஐ.எஸ்.டி., போன் அழைப்புகளை செய்தார். ஆனால், அதற்கான கட்டணத்தை அவரே ஏற்றுக் கொண்டது ஆச்சர்யம். மேலும், வாங்கிய பொருட்களுக்கான பணத்தையும் அவரே செலுத்தினார்.
சரத், எவ்வளவு கறார் பேர்வழியோ, அதற்கேற்ப 'ஜாலி டைப்'பும். யாராவது, 'கடித்தால்' திருப்பி, 'கடி'க்க அஞ்சுவதில்லை.
ரசிகர்களின் கடைகளுக்கு விஜயம் செய்ய அழைத்தபோது, வந்தார். ரசிகர்களாக விரும்பி தந்த செயின், மோதிரம் போன்றவற்றையும் தவிர்த்தார்.
'சரி சார், உங்களுக்கு எதுவும் வேண்டாம். கார்கில் நிதிக்காக, கடைகாரர்களிடம் கேட்கலாமே...' என்றேன்.
'கார்கிலுக்குன்னா ஓ.கே., அது உங்க சாமர்த்தியம்...' என்று பச்சைக்கொடி காட்டினார்.
அரபு நாடுகளில் ஜூன் முதல் செப்டம்பர் வரை கடுமையான வெயில் காலம். அந்த மாதங்களில் கூட்டம் வராது என்பதால், யாரும் எந்த நிகழ்ச்சியும் வைப்பதில்லை.
ஆனால், கார்கில் பிரச்னை அப்போது இருந்ததால், ஜூலையில் சரத்தின் நிகழ்ச்சியை வைக்க வேண்டியிருந்தது. கோடையையும் மீறி சாதனை ஏற்படுத்தும் அளவில் கூட்டம்!
கோபக்காரர், -இறுக்கமானவர் என்று பேசப்பட்ட, இயக்குனர் பாலசந்தர் குவைத்தில் எப்படி, 'ஜாலி'யாய் சுற்றினார் தெரியுமா?
— தொடரும்
என். சி. மோகன்தாஸ்