என். ஜெயபால், திருப்பூர்: நடிகர் சரத்குமாரின், சமத்துவ மக்கள் கட்சி என்ன ஆயிற்று?
கட்சி ஆபீசில் இன்னும் நிறைய, 'லெட்டர் பேட்' மிச்சமிருக்கிறதாம்!
* கே.கனக விஜயன், மதுரை: 'இனிஷியல்' எனப்படும் பெயரின் முதல் எழுத்து
தமிழில் இருக்க வேண்டுமென்ற உத்தரவு பற்றி...
ஹேமந்த் குமார், ஷாஜஹான், ஹர்ஷவர்தன்
- இப்பெயர் கொண்டவர்களின் வாரிசுகள் தங்கள் இனிஷியலை ஏ. சா, அ என்று தமிழில் எழுதினால், கேலிகூத்தாகி விடாதா!
முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி, 'ஸ்' என்ற சமஸ்கிருத எழுத்துக்கு பதிலாக, 'இச்' என்று தமிழில் இனிஷியலாக போட்டுக் கொள்வாரா!
கொட்டை வடிநீர் கடை, பனிக் குழம்பி கடை, அடுமனை என்று, வரிவிலக்குக்காக கடைகளின் பெயரை தமிழில் மாற்றி மண்டை காய்ந்தது, மறந்து போனதா?
தமிழை வளர்க்க விரும்பினால், முதலில் உதயநிதியும், தி.மு.க., அரசும் முன்மாதிரியாக இருந்து காட்டட்டும்; அப்புறம் நாம் பின்பற்றுவதைப் பற்றி யோசிப்போம்!
* லீலாராம், தக்கலை, குமரி: அன்றைய மழை காலத்துக்கும், இன்றைய மழை காலத்துக்கும் உள்ள ஒற்றுமை என்ன, வேற்றுமை என்ன?
அன்று ஒழுங்காக ஓடி, குட்டைகளிலும், குளங்களிலும் சேமிக்கப்பட்டதாம் மழை நீர்! இன்றைய தமிழகத்தின் நிலையை பத்திரிகைகளில் பார்க்கிறீர்களே!
ஆர். சுப்பு திருத்தங்கல், விருதுநகர்: 'வாட்ஸ் ஆப்'பில் காலை வணக்கம் சொல்ல சரியான நேரம் எது?
காலை, 6:00 மணி. ஆனால், 4:30 மணியிலிருந்தே, 'குட்மார்னிங்' வந்து விடுகிறது. காலை, 5:00 மணியிலிருந்தே, 'யோகா' செய்ய ஆரம்பித்து விடுவேனா... அதனால், 6:00 மணிக்கு தான், 'குட்மார்னிங்'குகளைப் பார்த்து பதிலளிப்பேன்!
முருகு. செல்வகுமார், சென்னை: உ.பி., சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் செல்வாரா?
உ.பி., மக்களுக்குத் தான் ஸ்டாலினை நன்கு தெரியுமே... அத்துடன், அவரால் தான் ஹிந்தியில் வெளுத்துக் கட்ட முடியுமே... அதனால், செல்வாராக இருக்கும்!
பா. சச்சிதானந்தம், புதுச்சேரி: தபால் எடுத்து வர, டீ வாங்கி வர, 'அட்லஸ்' சைக்கிளில் சென்று வருவதாக கூறுகிறீர்கள்... ஆனால், காரில் செல்லும்போது, மொபைல்போன் அழைப்பு வந்தால், 'புளூ டூத்' மூலம் பேசுவேன் என்கிறீர்களே... இதில் எது உண்மை?
பொறுப்பாசிரியரை, அவரது காரில் அழைத்துச் செல்லும்போது தான், 'புளூ டூத்!'
ஜி. குப்புசாமி, சங்கராபுரம்: ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வாசகர்கள் கேள்வி கேட்கின்றனரே... எப்படி சார்?
'நெட்டில்' வாரமலர் இதழைப் படித்து விடுவர்... 'இ - மெயில்' மூலம் கேள்விகளை அனுப்பி விடுவர்!