வேரைத் தாங்கும் மண்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2021
00:00

''அனு, இன்ஸ்பெக்டர் போன் பண்ணினார். நாளைக்கு இங்கு வருகிறாராம்,'' என்றார், லட்சுமியம்மாள்.
'பத்திரிகைகாரர்கள்தானே நாளை வருவதாக கூறினர். இன்ஸ்பெக்டர் ஏன் நாளைக்கு வரவேண்டும்...' என்று குழம்பினாள், அனு.
இரவு படுத்த பின்பும், இன்ஸ்பெக்டர் ஏன் இங்கு வருகிறார் என்ற கேள்வியே மனதில் ஓடியது. துாக்கம் வராத அனு, தான் கடந்து வந்த வாழ்க்கை பாதையை நினைத்து, புரண்டு கொண்டிருந்தாள்.

ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள், அனு. அனுவை பிரசவித்த உடனே அவள் அம்மா இறந்து விட்டார். சில ஆண்டுகளிலேயே, அப்பாவும் காலமானார். அக்கா பூங்கோதை தான் தாயாக இருந்து அனுவை வளர்த்தாள்.
கிராமத்து பெண்கள் எல்லாருக்கும் அனுதான் செல்லப் பெண். சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவாள், அனு.
பள்ளியில் படிக்கும்போது, 'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒப்புக் கொள்...' என்று, ஆசிரியை அடிக்கடி கூறியதால், தையல் கற்றுக்கொண்டாள்.
சென்னையில் ஒருவர் வீட்டில் கார் டிரைவராக பணிபுரிந்த, உறவுக்கார சிவாவை திருமணம் செய்து வைத்தனர்.
கிராமத்து பெண் அனுவுக்கு, சென்னை மிரட்சியை தந்தது. மக்கள் இயந்திரத்தனமாக இயங்குவது பிரமிப்பை தந்தது.
'அக்கம்பக்கத்தில் எது நடந்தாலும் கண்டுகொள்ளக் கூடாது. கிராமத்தில் இருந்தது போல், இங்கு எல்லாரிடமும் இயல்பாக பேசக் கூடாது. தாமரை இலை தண்ணீர் போல பழக வேண்டும்...' என்று அனுவுக்கு அறிவுரை கூறினான், சிவா.
காலையில் வெளியில் சென்றால், இரவு தான் வீடு திரும்புவான், சிவா. அனுவிற்கு பொழுதை கழிப்பது சிரமமாக இருந்தது.
சில வாரங்கள் கழித்து, சிவாவின் அனுமதியோடு, தெருவில் வசிப்போருக்கு, குறைந்த கட்டணத்தில் துணி தைத்து தர ஆரம்பித்தாள், அனு.
தன் வீட்டிற்கு வருமான வரி அதிகாரிகள், 'ரெய்டு' வரவிருப்பதை அறிந்த சிவாவின் முதலாளி, ஆவணம் மற்றும் பணத்துடன், திருச்சியில் இருக்கும் மகள் வீட்டுக்கு புறப்பட்டார்.
நெடுஞ்சாலையில் கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, வயதான கிழவி ஒருவர், திடீரென சாலையை கடக்க, சட்டென, 'பிரேக்'கை அழுத்தினான், சிவா. கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதியது. அந்த இடத்திலேயே இறந்து போனான், சிவா.
கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினர், அனுவுக்கு ஆறுதல் கூறினர்.
'அனு கருவுற்றிருப்பதாக நேற்று தான் என்னிடம் கூறினாள்...' என்றார், பக்கத்து வீட்டு பாட்டி.
கிராமத்திலிருந்து வந்த உறவினர்கள், சிவாவை சென்னையிலேயே அடக்கம் செய்தனர். அனு வர மறுத்ததால் கிளம்பிச் சென்றனர், உறவினர்கள்.
அனுவிற்கு ஆறுதல் கூறி, தங்கள் வீட்டில் தங்கி, வீட்டு வேலை செய்ய அழைத்தார், முதலாளியின் மனைவி. அவர்கள் அழைப்பை ஏற்க மறுத்தாள், அனு.
வயிற்றில் வளரும் குழந்தை தான் நமக்கு ஒரே பிடிமானம் என்று எண்ணிய அனு, சீக்கிரமே இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயற்சித்தாள். தனிமையில் இருந்ததால், எதிர்காலத்தை எண்ணி வருந்தி, சரியாக சாப்பிடாததால், அனுவின் வயிற்றில் வளர்ந்த கரு கலைந்து விட்டது.
'தனி மரமாக இருந்த நான், இப்போது பட்ட மரமாகி விட்டேனே...' என்று கதறி அழுதாள், அனு.
தெருவில் போய்க் கொண்டிருந்தபோது, 'அனு...' என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.
அங்கிருந்த பங்களா வாசலில் நின்றிருந்த அம்மா தான் அழைத்தார்.
'என்னை, உங்களுக்கு எப்படி தெரியும்?' என்று கேட்டாள், அனு.
'பக்கத்து வீட்டு மாமி உன்னை பற்றி கூறியுள்ளார். அய்யாவை டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். ஆட்டோ பிடித்து வர முடியுமா?' என்று கேட்டார், லட்சுமியம்மாள்.
அவர்களுடன் அனுவும் டாக்டரிடம் சென்று வந்தாள்.
பணம் கொடுக்க வந்தவரிடம், 'உங்களுக்கு ஒரு பெண் இருந்தால் என்ன செய்வாளோ, அதைத்தான் நானும் செய்தேன்...' என கூறி, பணம் வாங்க மறுத்தாள்.
'நீ, எங்களுக்கு பெண் என்று கூறி விட்டாய். அதனால், எனக்கு ஒரு உதவி செய்வாயா...' என்று கேட்டார் லட்சுமியம்மாள்.
'தயங்காமல் கேளுங்கள்...' என்றவளிடம், 'எங்க வேலைக்காரம்மா ஏனோ வரவில்லை. இந்நேரம் பார்த்து அய்யாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவரையும் கவனித்து, வீட்டு வேலைகளை செய்ய முடியவில்லை. எனக்கு ஒத்தாசையாக இருப்பாயா?' என்றார்.
'இதற்கா தயங்கினீர்கள்?' என்றபடியே, உள்ளே சென்ற அனு, சமையலை செய்து முடித்தாள். வீட்டையும், தோட்டத்தையும் சுத்தம் செய்து, தன் வீட்டுக்கு திரும்பினாள்.
லட்சுமியம்மா மாலையில் வீட்டிற்கு வந்தாள், அனு.
'இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்?' என கேட்டு, அவர்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றாள்.

ஒருநாள் கோவிலில் இரு வயதான பெண்மணிகள், அனுவிடம் நலம் விசாரித்தனர்.
அவர்களின் சோகமான முகத்தை பார்த்தவள், 'உங்கள் பிரச்னை இன்னும் தீரலையா?' என்று விசாரித்தாள்.
அய்யாவையும், லட்சுமியம்மாவையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்திய அனு, 'இவர்களுக்கு துணையாக வீட்டில் யாரும் இல்லை. சில நாட்களாக இவர்கள் வீட்டில் தான் வேலை செய்கிறேன்...' என்றாள்.
கோவிலில் சந்தித்த இருவரின் சோகக் கதைகளை லட்சுமியம்மாவிடம் கூறினாள், அனு.
'ஒரு அம்மாவின் கணவர், இவரை தனியே விட்டு, பிரிந்து போய் விட்டார். குழந்தைகளும் இல்லை. மற்றொரு விதவை தாய்க்கு, மகனும், மகளும் வெளிநாட்டில் இருக்கின்றனர். பணம் இருந்தும் நிம்மதியற்ற வாழ்க்கை. அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட சொல்லி என்னிடம் அழுதனர்.
'அம்மா... மாடியில் காலியாக இருக்கும் அறையில் அவர்களை தங்க வைத்தால், உங்களுக்கும் துணையாக இருக்கும். அவர்களுக்கும் சற்று நிம்மதி கிடைக்கும்...' என்று தயங்கியபடியே கூறினாள், அனு.
'வெளிநாட்டில் இருக்கும் என் மகன் குமாரை கேட்டுதான் சொல்ல முடியும்...' என்றார், லட்சுமியம்மாள்.
'பரவாயில்லை, அவனிடம் நான் சொல்லிக் கொள்கிறேன். அவர்கள் இங்கு வந்து தங்கிக் கொள்ளட்டும்...' என்று அய்யா கூறியதும், மகிழ்ந்தாள், அனு.
மறுநாளே அவர்களை அழைத்து வந்து மாடியில் தங்க வைத்தாள்.

இப்படியே தினம் ஒருவர் இருவராக வந்து, லட்சுமியம்மா வீட்டை கலகலப்பாக்கினர். அங்கேயே தங்கியிருந்து, அத்தனை பேரையும் ஒரு செவிலித்தாய் போல் கவனித்துக் கொண்டாள், அனு.
விடுமுறையில் சென்னைக்கு வந்த, குமார், எப்போதும் கவலையோடு காட்சியளிக்கும் பெற்றோர் முகத்தில் தெரிந்த மலர்ச்சியை பார்த்து வியப்படைந்தான்.
'என் அம்மா - அப்பா மகிழ்ச்சியாக இருப்பதற்கு நீ தான் காரணம் என தெரிந்து கொண்டேன். நன்றிக்கடனாக உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறேன். தயங்காமல் கேள்...' என்று அனுவிடம் சொன்னான், குமார்.
'வீட்டை விரிவுபடுத்தி கொடுத்தால், இன்னும் சில ஆதரவற்ற பெண்களுக்கு உதவலாம்...' என்ற அனுவின் வேண்டுகோளை ஏற்ற குமார், வெளிநாடு திரும்பும் முன், நிறைவேற்றினான். மேலும், 'தேவதை இல்லம்' என்ற பலகையை வீட்டு முகப்பில் பதித்தான்.

''அனு, மணி, 6:00 ஆகப் போகிறது. இன்று என்னவாயிற்று உனக்கு,'' என்று தட்டி எழுப்பினார், லட்சுமியம்மா.
சத்தம் கேட்டு, அனு வெளியே வந்தபோது, வயதான அம்மாவோடு உள்ளே நுழைந்தார், இன்ஸ்பெக்டர்.
''மேடம், என்னை, 'டிரான்ஸ்பர்' செய்து விட்டனர். மனைவியும் வெளிநாட்டில் இருக்கிறார். என் அம்மாவை உங்கள் இல்லத்தில் தங்க வைக்க அழைத்து வந்திருக்கிறேன்,'' என்றார்.
அப்போது, பெண்கள் மாத இதழ் ஒன்றிற்காக, அனுவை பேட்டி காண வந்த பெண் நிருபர், ''தேவதை இல்லம் உருவாக என்ன காரணம்,'' என, கேட்டார்.
''பிறந்தபோதே, தாயை இழந்தேன். கிராமத்தில் உள்ள எல்லா அம்மாக்களின் அரவணைப்பும், பாட்டிமார்களின் கண்டிப்பும், அறிவுரைகளும் தான், என்னை வாழ்க்கையில் பக்குவப்பட வைத்தது.
''தங்களுடைய சுக துக்கங்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்வர், கிராமத்து பெண்கள். அதனால், அவர்களின் மனச்சுமை குறையும். ஆனால், சென்னை போன்ற நகரத்தில் அதற்கான வாய்ப்பும் இல்லை; நேரமும் இல்லை.
''கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர். பெற்ற பிள்ளைகளை கவனிக்கவே நேரமில்லாததால், பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. அவர்களோடு பேசி, பழகாமல் தனிமைப்படுத்தி விடுகின்றனர்.
''வயதான காலத்தில், கணவன் - மனைவி இருவரில் ஒருவர் இல்லையென்றால், மற்றொருவர் இன்றைய சூழலில் மகிழ்ச்சியாக வாழ்வது கடினம். இருபாலருக்குமே இது பொருந்தும். அப்போதுதான் பிள்ளைகளின் துணை அவர்களுக்கு தேவைப்படுகிறது. அந்த அன்பும், பாசமும் கிடைக்காததால், உடலாலும், மனதாலும் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
''எனவே தான், குடும்பத்திற்காக தன்னை மெழுகுவர்த்தி போல் அழித்துக் கொண்ட ஆதரவற்ற பெண்களுக்காக, ஒரு இல்லம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் தோன்றியது. லட்சுமியம்மாவும், அய்யாவும் என் கருத்தை ஏற்று, தங்கள் வீட்டையே, 'தேவதை இல்லமாக' மாற்ற அனுமதி தந்தனர். அவர்களின் ஒரே பிள்ளை குமாரும், உறுதுணையாக இருக்கிறார்,'' என்றாள், அனு.
''இன்றைய சூழலில், வயதான பெற்றோரை பிள்ளைகள் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?'' என, அனுவிடம் கேட்டார், நிருபர்.
''நான், அதிகம் படிக்காதவள். இருந்தாலும் என் மனதில் தோன்றுவதையும், இங்குள்ளவர்களோடு பழகியதிலிருந்து அறிந்து கொண்டதையும், அவர்கள் என்ன விரும்புகின்றனர், எதிர்பார்க்கின்றனர் என்பதையும் எனக்கு தெரிந்த, வரை கூறுகிறேன்...
''ஒரு கால கட்டத்தில், முதியோர்களும் குழந்தைகள் போல் தான் இருப்பர். பல் இல்லா குழந்தையின் மழலையை ரசிப்பது போலவேதான், பொக்கை வாய் முதியோரின் பேச்சையும், அவர்கள் கூற வருவதையும் காது கொடுத்து கேட்க வேண்டும். 'பல் போனால் சொல் போச்சு' என கூறி, அவர்கள் பேச்சை அலட்சியப்படுத்தக் கூடாது; ஏளனம் செய்யக் கூடாது.
''குழந்தைகள் பசி எடுத்தால் அழும். இல்லையென்றாலும் அதற்கு நேரம் தவறாமல் நாம் உணவை ஊட்டி விடுவோம். அதேபோல், முதியோரையும் புரிந்துகொண்டு, தகுந்த உணவை நேரம் தவறாமல் கொடுக்க வேண்டும். அவர்கள் தேவையை நிறைவேற்ற வேண்டும்.
''குழந்தைகளின் செயலை பாராட்டி ஊக்கமளிப்பது போல, பெற்றவர்கள் நம்மை வளர்த்த விதத்தையும், அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த இனிய சம்பவங்களையும், சாதனைகளையும் அவர்களுக்கு அடிக்கடி நினைவுப்படுத்தி உற்சாகப்படுத்த வேண்டும்.
''வெளிநாட்டு வேலைக்கு செல்லும் பிள்ளைகள் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடாமல், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் திரும்ப வந்து, பெற்றோரின் கடைசி காலத்தில் அவர்களுடன் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும்,'' என்றாள்.
அனு பேசி முடித்ததும், அங்கு எழுந்த ஆரவாரமும், கரவொலியும், தேவதை இல்ல அம்மாக்களின் முகத்தில் தோன்றிய மலர்ச்சியும் கண்டு, நிருபரும் அவரோடு வந்தவர்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.
''உங்கள், 'தேவதை இல்லம்' மென்மேலும் வளர்ச்சியடையவும், உங்கள் சேவை தொடரவும் எங்கள் பத்திரிகை சார்பில் வாழ்த்துக்கள் மேடம்,'' என்றார், பெண் நிருபர்.
''இல்லை மேடம், இதுபோன்ற இல்லங்களின் தேவை குறைய வேண்டும். வயதான காலத்தில் பெற்றோர், பிள்ளைகளின் அரவணைப்பில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே, என் விருப்பம்; இளைய தலைமுறையினருக்கு என் வேண்டுகோள்,'' என்று பேட்டியை நிறைவு செய்தாள், அனு.
கிராமத்திலிருந்து அனுவை பார்க்க வந்திருந்த அக்கா பூங்கோதை, தங்கையின் பேச்சை கேட்டு, ''கனி கொடுக்கும் காலம் முடிந்த பின்னும் மரம் பட்டுப் போகாமல், கீழே விழாமல் அதன் வேரை மண் தாங்கி நிற்பது போல், என் தங்கை. இல்லை, நான் வளர்த்த மகள், வயதான வேர்களை தாங்கி நிற்கிறாள்,'' என்று கூறி, மகிழ்ந்தாள்.

மீனாட்சி அண்ணாமலை
வயது: 57, படிப்பு: பி.எஸ்சி., சொந்த ஊர்: திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிறு கிராமம். கடந்த, 36 ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறார்.
பள்ளி, கல்லுாரியில் படிக்கும்போதே எழுத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு, துணுக்குகள் எழுத துவங்கி, கடந்த ஏழு ஆண்டுகளாக, சிறுகதை மற்றும் குறுநாவல்கள் எழுதி வருகிறார். பல இதழ்கள் நடத்திய போட்டிகளில் பங்கெடுத்து, பல பரிசுகள் பெற்றுள்ளார்.
தினமலர் - வாரமலர் இதழ் நடத்திய 2015ம் ஆண்டு, டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில், ஆறுதல் பரிசு பெற்றுள்ளார். 'முதல் மூன்று பரிசுகளில் ஒன்றை வாங்க வேண்டும்; என் சிறுகதை மூலம் சமூகத்துக்கு ஏதாவது பயனுள்ள தகவலை தரவேண்டும் என்பது தான் லட்சியம்...' என்கிறார்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
31-டிச-202112:10:41 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI அனு தன் வாழ்க்கையை எப்படி மாற்றிக் கொண்டாள் என்பது நல்ல கதைக்களம்.கேள்விக்குறியான தன் வாழ்வு ஆச்சரியக் குறியாக மாறிய விதம் பாராட்டிற்குரியது. முதியோர் இல்லத்தின் பெருக்கல்கள் என்று வகுத்தல்கள் ஆவது?
Rate this:
Cancel
DINAGARAN S - new delhi,இந்தியா
27-டிச-202109:38:15 IST Report Abuse
DINAGARAN S நல்ல கதை. பெற்றோர், பிள்ளைகளின் அரவணைப்பில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே, என்னுடைய விருப்பம் கூட இளைய தலைமுறையினருக்கு என் வேண்டுகோள்,''
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X