அமெரிக்கா!
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் உச்சபட்ச உற்சாகத்தை அமெரிக்காவில் பார்க்கலாம். அனைத்து மாகாணங்களிலும் ஆங்கில புத்தாண்டை, விடுமுறை நாளாக அனுசரிப்பர். புத்தாண்டு பிறப்பின்போது, கடந்த ஆண்டின் தவறுகளை துாக்கி எறிந்து, வரும் ஆண்டில் நல்லதொரு வாழ்க்கைக்கான தீர்மானத்தை எடுப்பர்.
நியூயார்க் நகரின் டைம் ஸ்கொயர் கட்டடத்தின் மீது, பெரிய பந்தை வைத்து அதை, மின்விளக்குகளால் அலங்கரித்திருப்பர். புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு நிமிடம் முன்னதாக அந்த பந்தை கீழே விடுவர். பந்து கீழிறங்கும் நேரம், புத்தாண்டுக்கான, 'கவுன்ட் டவுண்' நேரமாக இருக்கும்.
பந்து தரையை தொட்டதும், கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கட்டிப்பிடித்தும், முத்தம் கொடுத்தும், புத்தாண்டு வாழ்த்துகளை உற்சாகமாக வெளிப்படுத்துவர்.
அமெரிக்க புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, பல இடங்களில் அனைவரும் ஒரே மாதிரியான உடை அணிந்து வருவர். சில இடங்களில், ஏதாவது ஒரு தீம் அடிப்படையில் கொண்டாடுவர்.
இங்கிலாந்து!
சல்சா நடனம், தீம் பார்ட்டிகள் என்று, இங்கிலாந்தின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்ற நாட்டினரை பொறாமை கொள்ளச் செய்யும்.
புத்தாண்டில் வீட்டிற்கு வரும் முதல் ஆண், அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார் என்ற பழைய பாரம்பரியம், இன்று வரை நம்பப்படுகிறது.
செடிகள், குப்பைகள் உள்ளிட்டவற்றை எரிக்கும் வழக்கத்தை வைத்திருந்தனர். இது, கடந்த காலத்தின் வருத்தமான நிகழ்வுகளை எரித்து விடுமாம்.
புத்தாண்டை ஒட்டி பரேடு நடத்துகின்றனர். இசைக் கலைஞர்கள், நடன கலைஞர்கள், டிரம்ஸ் இசைப்பவர்கள் என, பலரும் கலந்து கொள்வதால், இந்த புத்தாண்டு ஊர்வலம் அனைவரையும் கவர்கிறது.
ரஷ்யா!
கடந்த, 1699ம் ஆண்டுக்கு பிறகு, ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர், ரஷ்ய மக்கள். அன்று, குடும்பத்தோடு விடுமுறையை கொண்டாடுகின்றனர். கிறிஸ்துமஸ் மரம் வைப்பது போன்று, ரஷ்யாவில் புத்தாண்டு மரம் ஒன்றை தயாரிக்கின்றனர். இந்த மரத்தின் உச்சியில், 'ஸ்டார்' ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கும். பல்வேறு இனிப்பு வகைகளால் இந்த மரம் அலங்கரிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு பரிசுகளை கொடுக்கும் பனி தேவதை வேடம் போட்ட பெண் மற்றும் குழந்தைகளை புத்தாண்டு மரத்தின் கீழ் அமர வைக்கின்றனர். குழந்தைகள், பாடல்கள் பாடி, பனி தேவதையையும், அதன் தந்தையையும் மகிழ்விப்பதாக பாரம்பரியம் இருக்கிறது. லைட் மியூசிக், ஷாம்பெயினுடன் கொண்டாடப்படும்.
ஜன., 13ம் தேதி வரை, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஜன., 13ம் தேதியை, தங்களின் பழைய பாரம்பரிய புத்தாண்டாக கொண்டாடுகின்றனர், ரஷ்ய மக்கள்.