ச. கார்த்திகைச் செல்வன் எழுதிய, 'புத்தாண்டுகள் பலவிதம்' நுாலிலிருந்து:
ரோமானியர்களின் புத்தாண்டு, ஆரம்பத்தில் மார்ச் மாதமாகவே நீண்ட காலமாக இருந்து வந்தது. புது ஆண்டை கொண்டாடும் வகையில் ரதப் போட்டிகளை நடத்தியிருக்கின்றனர், ரோமானியர்கள்.
முதன்முதலில் காலண்டரை வடிவமைத்தவர்களும் ரோமானியர்களே. அவர்கள் வடிவமைத்த காலண்டரின் படி, மார்ச் மாதம் துவங்கி டிசம்பர் வரை ஆண்டுக்கு, 10 மாதங்கள் மட்டுமே இருந்தன.
கி.மு., 8ம் நுாற்றாண்டில் தான், ஜனவரி, பிப்ரவரி மாதங்களும், லீப் ஆண்டுகளும் சேர்க்கப்பட்டன.
அதன்பின், ஜூலியஸ் சீசர் காலத்தில் கொண்டு வரப்பட்ட, ஜூலியன் காலண்டர் தான், பல நுாற்றாண்டுகளாக வழக்கத்தில் இருந்தது. அப்போதும் சில நாடுகளில், கிறிஸ்துமஸ், ஈஸ்டர் தினங்களிலிருந்து புத்தாண்டு துவங்கும் வழக்கமும் இருக்கிறது.
தற்போது, உலகம் முழுவதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படும் ஆங்கில காலண்டரின் உண்மையான பெயர், கிரிகோரியன் காலண்டர். 16ம் நுாற்றாண்டில் கத்தோலிக்கர்களின் போப்பாக இருந்த, 13ம் போப் கிரிகோரி என்பவரின் தலைமையில், 1582ல் வடிவமைக்கப்பட்டதே இந்த காலண்டர்.
அவ்வளவு காலமும் கிறிஸ்துவின் பிறப்புடன் ஆரம்பமான ஆண்டு, போப் கிரிகோரியால் மாற்றியமைக்கப்பட்டது.
அதன்படி இயேசு பிறந்த, டிசம்பர் 25ம் தேதியை, கிறிஸ்துமஸ் தினம் என்றும், இயேசு பிறந்த எட்டாவது நாள் தான், அவர் தன் பெற்றோரால் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, ஞானஸ்தானம் பெற்றார் என்பதால், அந்நாளையே ஆண்டின் முதல் நாளாக இருக்க வேண்டும் என்றும் கூறி, ஜனவரி 1ம் தேதியை, புத்தாண்டு தினமாக அறிவித்தார்.
போப்பாண்டவர் ஆரம்பித்து வைத்த காலண்டர் என்பதால், ஐரோப்பா கண்டத்தில் இருந்த அரசர்கள் எந்தவிதமான குழப்பமும் செய்யாமல் அதை ஏற்றுக்கொண்டனர்.
ஐரோப்பியர்கள் அனைவரும் கத்தோலிக்கர்களாக இருந்ததால், போப் வடிவமைத்த காலண்டரையே உபயோகித்தனர். 18ம் நுாற்றாண்டில், பிரிட்டனின் காலனி ஆதிக்கம் ஆசிய நாடுகளில் பரவியபோது, இந்த கிரிகேரியன் காலண்டரும் திணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டது.
இன்று, அதுவே உலகப் பொது காலண்டராக ஆக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், கிரிகோரியன் காலண்டரை உலகம் முழுவதும் பரப்பிய பெருமை பிரிட்டிஷாரையே சேரும்.
வரலாற்றில் ஜனவரி 1
ஜன., 1, 1700ல்: ஜூலியன் நாட்காட்டியை ரஷ்யா, பயன்படுத்த ஆரம்பித்தது
1752: கிரிகோரியன் நாட்காட்டியை பிரிட்டன் ஏற்றுக்கொண்டது
1801: பிரிட்டன் மற்றும் அயர்லாந்து பேரரசு இணைந்து யுனைட்டட் கிங்டம் ஆனது
1877: விக்டோரியாவை, இந்தியாவின் மகாராணியாக டில்லியில் அறிவித்தனர்
1886: விக்டோரியா மகாராணிக்கு, அவரது பிறந்த நாள் பரிசாக பர்மா வழங்கப்பட்டது
1960: பிரான்ஸ் மற்றும் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது, காமரூன்
1962: நியூசிலாந்திலிருந்து விடுதலை பெற்றது, மேற்கு சமோவா
1993: செக்கோஸ்லவாக்கியா நாடு, செக் குடியரசு, சிலோவாக் குடியரசு என, இரு நாடுகளாக பிளவடைந்தது
1999: யூரோ நாணயம் அறிமுகம்.
நடுத்தெரு நாராயணன்