அம்பிகா - அர்ச்சனா - ஆராதனா! (14) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அம்பிகா - அர்ச்சனா - ஆராதனா! (14)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 டிச
2021
00:00

முன்கதை சுருக்கம்:
ராமலிங்கத்தின் மகள்களான அம்பிகா, அர்ச்சனா, ஆராதனா மூவரும் தாங்கள் காதலிப்பதாக கூற, மூன்று மாப்பிள்ளைகளையும் ஒரே நாளில் பார்க்க வரும்படி கூறினார். வீட்டுக்கு வந்த விக்ரமை அழைத்து அம்பிகா பேச, 'டென்ஷன்' ஆனாள், அர்ச்சனா-


ஹாலில் உட்கார்ந்திருந்தான், விக்ரம். பின் பக்கமாக வந்த ஆராதனா, அவன் கண்ணை பொத்தினாள்.
''ஹலோ யாரு யாரு?'' என்றான்.
முன்னால் வந்து நின்றாள், ஆராதனா.

''நான் சொல்லி தானே வந்த... யாருன்னு கேக்கறே?'' மாடியிலிருந்து இதை கவனித்த அம்பிகாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
'ஆராதனாவுக்கு எப்படி அர்ஜுனை தெரியும்?'
''குட்மார்னிங் வாங்க,'' என்ற ராமலிங்கத்தின் குரல் கேட்டு எழுந்தான், விக்ரம்; கூடவே சுமதியும் வந்தாள்.
''குட்மார்னிங் சார்!''
''அப்பா, இவர்தான் அதர்வா,'' என்றாள், ஆராதனா.
அவனை ஏற இறங்க பார்த்து, ''உனக்கு ஏத்த ஜோடிதான்மா. உட்காரு பா,'' என்றார்.
''மூணு பேர் வரப்போறதா ஆராதனா சொன்னா. மத்த ரெண்டு பேர் வரலையா?'' என, எதுவும் தெரியாத மாதிரி கேட்டான், விக்ரம்.
''அதானே... அம்பிகா,'' என்று மாடிப் பக்கம் பார்த்து கூப்பிட்டார்.
வேறு உடை மாற்றி, தலைமுடியை, 'போனி டெய்ல்' போட்டு, வேகமாக வந்தாள், அம்பிகா.
ராமலிங்கம் ஆரம்பிப்பதற்குள், ''அப்பா, இதான் அர்ஜுன். மும்பைல சந்தித்தேன்,'' என்று அம்பிகா சொன்னதும், ஆராதனாவுக்கு அதிர்ச்சி. அப்பா, அம்மாவுக்கும் எதுவும் புரியவில்லை.
''இல்லை அம்பிகா, ஆராதனா சொன்னா இவர் பேர்...'' என்று, ராமலிங்கம் எதோ கேட்கும் முன் உள்ளேயிருந்து வந்த அர்ச்சனா, ''ஹாய்... சரியான நேரத்துக்கு வந்துட்ட,'' என்று சொன்னாள்.
''அப்பா, விஜய்,'' என்று அப்பாவிடம் அவனை நோக்கி விரலை காட்டினாள்.
அப்பா, அம்மா, அம்பிகா, ஆராதனா அனைவருக்கும் அதிர்ச்சி.
''என்னம்மா இது... வந்திருக்கிறது ஒருத்தர்... ஆளாளுக்கு இவர் தான் அர்ஜுன், அதர்வா அது இதுங்கறீங்க. ஒரே குழப்பமா இருக்கே... ஒரே மாதிரி ஆளையே மூணு பேரும் காதலிச்சீங்களா... இல்லை, நீங்க மூணு பேரும் அக்கா, தங்கச்சி மாதிரி அவங்க மூணு பேரும் அண்ணன் தம்பியா?'' என்றவர், விக்ரமிடம், ''தம்பி, தப்பா நினைக்காதீங்க. ஏன் இப்படி சொல்றாங்கன்னு விசாரிக்கறேன்.''
''சார்... இதுல குழப்பமும் இல்லை; விசாரிக்கவும் ஒண்ணும் இல்லை. மூணு பேரும் கரெக்ட்டா தான் பேசறாங்க.''
விக்ரம் என்ன சொல்ல வருகிறான் என்பது புரியாமல், அம்பிகா, அர்ச்சனா, ஆராதனா மற்றும் அப்பா - அம்மா அனைவரும் அவனையே பார்த்தபடி இருந்தனர்.
''மும்பையில், அம்பிகாவை காதலிச்ச அர்ஜுன், நான் தான். கோல்கட்டாவுல, அர்ச்சனாவை காதலிச்ச விஜய், நான் தான். திருவனந்தபுரத்துல, ஆராதனாவை காதலிச்ச அதர்வாவும், நான் தான். அர்ஜுன், விஜய், அதர்வா அந்தந்த ஊர்ல இவங்ககிட்ட நான் சொன்ன பொய் பெயர்கள். என் உண்மையான பெயர், விக்ரம்.''
அப்பாவும், அம்மாவும் பேச்சு வராமல் ஸ்தம்பித்தனர். உடல் நடுங்க வாயில் கை வைத்து கொண்டாள், அம்பிகா. அர்ச்சனாவும், ஆராதனாவும் இடி விழுந்தது போல் நின்றனர்.
''இவங்க மூணு பேரும் அக்கா, தங்கச்சின்னு தெரிஞ்சு தான் காதலிச்சேன். இவங்க மூணு பேரோட பழகினது பொய். காதலுக்காக நான் சொன்ன ஒவ்வொரு வரியும், வார்த்தையும் பொய். சுருக்கமா சொல்லணும்ன்னா நிஜம்ன்னு நான் சொன்ன அத்தனையும் பொய்; நான் பொய் சொன்னது மட்டுமே நிஜம்.''
கோபமும், அழுகையுமாக, ''ஏன் ஏமாத்தின... சொல்லு,'' என்று அவன் மீது பாயத் தயாரானாள், அம்பிகா.
தடுத்தாள், அம்மா.
மகளின் இந்த நிலையை தாங்க முடியாத ராமலிங்கம், கோபமாக விக்ரமின் சட்டையை பிடித்து இழுத்து, உட்கார்ந்திருந்தவனை துாக்கி நிறுத்தினார்.
''அயோக்கிய ராஸ்கல், எவ்வளவு தைரியம் உனக்கு... அப்பாவியா இருந்த என் மூணு பொண்ணுங்களை ஏமாத்திட்டு, 'ஆமா ஏமாத்தினேன்'னு தைரியமா வந்து சொல்ற... உன்னை...'' கையை ஓங்கியபோது, தடுத்தான், விக்ரம்.
சட்டையை சரி செய்து, பாக்கெட்டிலிருந்து, 'விசிடிங் கார்டை' எடுத்து கண்ணாடி டேபிள் மீது போட்டான்.
''இந்த கார்டுல என் விலாசம் இருக்கு. போன் நம்பர் இருக்கு. ஆனா, என் பேர் இல்லை; வேற ஒரு பேர் இருக்கு. என்ன பேர் தெரியுமா? பொள்ளாச்சி முத்துராமன்!''
அந்த பெயரை கேட்டதும், 4,000 வோல்ட்ஸ் மின்சாரம், தன் மீது பாய்ந்தது போல் அதிர்ந்தார், ராமலிங்கம்.
''பொள்ளாச்சி முத்துராமனை ஞாபகம் இருக்கா... நீங்க கேட்ட கேள்விக்கு பதில் அதுல இருக்கு... எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க; பேசுவோம். பை!'' என்று கூறிவிட்டு, அம்பிகா, அர்ச்சனா, ஆராதனா மூவரையும் திரும்பி கூட பார்க்காமல், பேன்ட் பாக்கெட்டில் கை விட்டு விசிலடித்தபடி வெளியேறினான்.
அவன் போவதையே பார்த்து கொண்டிருந்த ராமலிங்கம், 'பொத்' என்று சோபாவில் சரிந்தார்.
மூன்று பெண்களும் அழுதபடி, அவரவர் அறைக்கு ஓடினர்.
மெதுவாக டேபிள் மீதிருந்த கார்டை எடுத்து பார்த்தாள், அம்மா. அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர், 'விசிடிங் கார்டு' மீது விழுந்தது.

விக்ரம் வந்து போன பின், இரண்டு, மூன்று நாட்கள் அமைதியாக இருந்தது, ராமலிங்கம் வீடு. யாரும் யாருடனும் பேசவில்லை. டைனிங் டேபிள் பக்கம் கூட எட்டிப்பார்க்காமல் அவரவர் அறையில் இருந்தனர்.
'கொஞ்ச நாள் என்னை யாரும் வந்து பார்க்க வேண்டாம்...' என உதவியாளரிடம் உத்தரவிட்டிருந்தார், ராமலிங்கம்.
'இந்த மாறுதல் ஏன்?' என புரியாமல் வாட்ச்மேன், டிரைவர்கள், வீட்டு வேலை செய்வோர் குழம்பிக் கொண்டிருந்தனர்.
'எங்கிருந்தோ வந்தான் ஒருத்தன். வீட்டோட நிம்மதியை குலைத்து, ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேச முடியாத நிலையை உண்டாக்கி போயிட்டானே... திட்டம் போட்டு என் மூணு பொண்ணுங்களை ஏன் காதலிச்சு ஏமாத்தினான்...' என்று நினைக்க நினைக்க ராமலிங்கத்திற்கு கோபம் வந்தது.
ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தார். விக்ரம் வந்தது, பேசியது, 'விசிட்டிங் கார்டை' துாக்கி போட்டது எல்லாம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது.
கோபத்தில், பெரிய கண்ணாடி அலமாரியை இழுத்து கீழே தள்ள முயற்சித்த போது, ''அம்பிகா அம்பிகா...'' என்று மாடி அறையிலிருந்து சுமதி கதறியது கேட்டது.
விழுந்தடித்து மாடிக்கு போனார். தரையில் படுத்திருந்த அம்பிகாவின் வலது மணிக்கட்டிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
அழுதபடி துணியால் கையில் கட்டு போட்டபடி இருந்தாள், சுமதி. ரத்தம் நிற்கவில்லை. கண்கலங்கி, குரல் தழுதழுக்க பதறி போய் அருகில் வந்தார், ராமலிங்கம்.
''அம்பிகா... ஏம்மா இப்படி பண்ணிக்கிட்டே, வா ஆஸ்பத்திரிக்கு போகலாம்,'' என்று அவளை துாக்கிக்கொண்டு படிகளில் வேகமாக இறங்கினார்.
''அர்ஜுனை மறக்க முடியலப்பா,'' என முனகி, மயங்கினாள்.
அன்று மாலை ராமலிங்கத்துக்கு மேலும் ஒரு பேரிடி. அளவுக்கு அதிகமாக துாக்க மாத்திரை சாப்பிட்ட அர்ச்சனாவால் உண்டான பிரளயம்; அம்பிகாவை சேர்த்த அதே ஆஸ்பத்திரியில் அவளும் அனுமதிக்கப்பட்டாள்.
விக்ரமை தேடி கண்டுபிடித்து கொன்றாலும் தப்பில்லை என்று வெறியோடு இருந்தார், ராமலிங்கம்.
ஆராதனாவும் மனதளவில் ஆழமாக காயப்பட்டிருந்தாலும், இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை கண்டறிய தீர்மானமாக இருந்தாள். வீட்டில் தனிமையில் அமர்ந்திருந்த அப்பாவின் அருகில் வந்தாள்.
''அப்பா!''
பதில் இல்லை.
''அப்பா!'' சத்தமாக கூப்பிட்டாள். எதுவும் பேசாமல் மெதுவாக கண் திறந்து பார்த்தார், ராமலிங்கம்.
''என்ன நடந்தது பா?'' என்றாள், ஆராதனா.
தொண்டையை கனைத்து, ''எதைப் பத்தி கேக்கறே மா?'' என்றார்.
வந்த கோபத்தில் அங்கிருந்த டீப்பாயை எட்டி உதைத்தாள். அதன் மேலிருந்த புத்தகங்கள், எகிறி போய் விழுந்தன.
''ஒருத்தன் உன்னோட மூணு பொண்ணுங்களை திட்டம் போட்டு காதலிச்சு ஏமாத்தியிருக்கான். பயமே இல்லாம தான் சொன்னதெல்லாம் பொய்ன்னு சொல்றான். ஏதோ ஒரு கார்டை துாக்கி போட்டு, சவால் விடற மாதிரி பேசிட்டு போறான்.
''அவனை அடிச்சு, கட்டிவெச்சு, 'யார்ரா நீ, யாரை மிரட்டுற... என் பொண்ணுங்களை கிள்ளுக்கீரைன்னு நினைச்சியா... நீ சொல்ற யாரையும் எனக்கு தெரியாது'ன்னு ஏன் சொல்லல?
''உங்களை சொல்ல விடாம எது தடுத்தது... பொள்ளாச்சி முத்துராமன் யார், உனக்கும் அந்தாளுக்கும் என்ன சம்பந்தம்... ஏன் அந்த பேரை கேட்டதும், உடைஞ்சு போய் சோபாவில் உட்கார்ந்த... இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரியும்? சொல்லு பா சொல்லு,'' என்று கத்தினாள்.
எதுவும் பேசாமல், மெதுவாக எழுந்து ஜன்னல் அருகே போய் தோட்டத்தை பார்த்தபடி நின்றார், ராமலிங்கம்.
- தொடரும்
கோபு பாபு

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X