அனுமன் என்றாலே கம்பீரமாக கதாயுதம் தாங்கி, வலுத்த கரங்கள், பலத்த திருவடிகளுடன் நிற்பதைக் காண முடியும். ஆனால், ராஜஸ்தான் மாநிலம், சலாசர் நகரில் முகம் மட்டுமே உள்ள அனுமனைத் தரிசிக்கலாம். இந்த முகம், அரை வட்ட வடிவில் உள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து, 170 கி.மீ., துாரத்தில் சலாசர் அருகே, அசாட்டோ என்ற கிராமம் இருந்தது.
கடந்த, 1754ல், இங்கு வசித்த விவசாயி ஒருவர், வயலை உழுத போது, கலப்பையில் ஏதோ தட்டுப்பட, அந்த இடத்தை தோண்டிப் பார்த்தார். உள்ளே அரை வட்ட வடிவ முகம் கொண்ட அனுமன் சிலை இருந்தது. கிராமத் தலைவரிடம் விபரம் தெரிவித்தார்.
அதற்கு முந்தைய நாள், கிராமத் தலைவர் கனவில் தோன்றிய அனுமன், 'எனது விக்ரகம் அசாட்டோ கிராமத்தில் நிலத்தடியில் புதைந்து கிடக்கிறது. அதுபற்றிய விபரம் உனக்கு தெரிய வரும். அதை, சலாசர் நகரில் பிரதிஷ்டை செய்...' என்றார்.
மறுநாள் இந்த தகவல் கிடைக்க ஆச்சரியப்பட்டு, சிலை பிரதிஷ்டை ஏற்பாடுகளைச் செய்தார்.
அதே நாளில் அவ்வூருக்கு வந்த மோகனதாஸ் மகராஜ் என்ற துறவி, அவ்வூரில் அனுமன் சிலை கிடைத்ததா என விசாரித்தார். தன் கனவில் தோன்றிய அனுமன், அதை சலாசர் நகரில் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டதாக சொன்னார். அனைவரும் அதிசயித்தனர். இதையடுத்து பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடந்தது.
இந்த அனுமனுக்கு உடல் இல்லை. முகம் மட்டுமே உள்ளது. தாடி, மீசை இருக்கிறது. அனுமனை பாலாஜி என்றும், கோவிலை, 'பாலாஜி தாம் மந்திர்' என்றும் அழைக்கின்றனர், இவ்வூர் மக்கள்.
பாலாஜி என்றால் பலம். அனுமன் பலம் மிக்கவர் என்பதால், இப்படி சொல்கின்றனர். தாம் என்றால் வசிப்பிடம். மந்திர் என்றால் கோவில். பலம் மிக்க அனுமன் வசிக்குமிடம் என்பது, இதன் பொருள்.
அனுமன் சக்தி மிக்கவர் என்பதால், இவரிடம் வைக்கும் கோரிக்கைகள் பலிக்கின்றன. தேங்காயில் மஞ்சள் கயிறை சுற்றி கோவிலில் கட்டி விடுகின்றனர். இந்த பிரார்த்தனை மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்குமென நம்புகின்றனர்.
ஆவணி மாதம் சனிக்கிழமை, வளர்பிறை நவமியன்று இந்தச் சிலை கிடைத்தது மற்றொரு விசேஷம். நவமி, ராமனுக்குரிய திதி. சனிக்கிழமை ராமனின் மூலமான திருமாலுக்கு பிரியமானது. இதனால், இந்தக் கோவிலில் வழிபடுவது மிக மிக விசேஷம்.
இக்கோவில், காலை, 7:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை திறந்திருக்கும். சென்னையில் இருந்து ரயிலில் செல்வோர், லக்ஷ்மன்கார் ரயில் நிலையத்தில் இறங்கலாம். இங்கிருந்து, 34 கி.மீ, சாலை வழியில் சென்றால், கோவிலை அடையலாம். 'கொரோனா' பரவிய பின் சிறு மாற்றம் காரணமாக, தற்போது, சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது.
தொடர்புக்கு: 01568 252 059, 252 605.
தி. செல்லப்பா