'யூ - டியூபால்' வந்த வினை!
நிறைமாத கர்ப்பிணியான மகள் பிரசவத்திற்கு, மருத்துவர் குறிப்பிட்ட தேதிக்கு, நான்கு நாட்களே இருந்தது.
'நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பு உள்ளது. வலி வந்ததும் அழைத்து வாருங்கள்...' என்றார், மருத்துவர்.
வலியை வரவழைக்க, 'யூ டியூபில்' ஏதேனும் வழி சொல்லியிருப்பரே என்று தேடி பார்த்தேன். அதில் ஒருவர், விளக்கெண்ணெயை வயிற்றில் தடவி, வெந்நீர் ஊற்றினால் வலி வரும் என்று கூறியிருந்தார்.
அதன்படியே, மகள் வயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, இடுப்பில் வெதுவெதுப்பான வெந்நீர் ஊற்றினேன். நடு இரவில், மகளுக்கு காய்ச்சல் வந்ததுமில்லாமல், பனிகுடமும் உடைந்து விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றோம்.
'இனி, நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பில்லை. நீர் எல்லாம் போய் விட்டது. இன்னும் தாமதித்தால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு விடும்...' என்று, சிசேரியன் செய்து, குழந்தையையும், தாயையும் காப்பாற்றி விட்டார், மருத்துவர்.
'யூ - டியூபை' பார்த்து நான் செய்த முட்டாள்தனமான செயலால், பட்டபாடு சொல்லி மாளாது.
'யூ - டியூப்' மூலம் சம்பாதிக்க விரும்புவோர், இதுபோன்ற தவறான ஆலோசனைகளை கூறாதீர்கள். 'யூ - டியூப்' பார்ப்பவர்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும். மருத்துவரின் ஆலோசனைகளை மட்டும் கேட்டு நடந்து கொள்ளுங்கள்.
— என். குர்ஷித், நெல்லை.
உஷார் நண்பர்களே!
சமீபத்தில், நண்பர் ஒருவரிடமிருந்து முகநுாலில், 'நண்பர் விண்ணப்பம்' - 'பிரண்ட் ரிக்கொஸ்ட்' வந்தது. தெரிந்தவர் தானே என்று அனுமதி அளித்தேன். அடுத்த நிமிடமே முகநுால் மெசஞ்சரில் அவரிடமிருந்து ஒரு செய்தி வந்தது.
தான் மருத்துவமனையில் உள்ளதால், உடனடியாக, 10 ஆயிரம் ரூபாய் வேண்டும்; 'கூகுள் பே' வழியாக அவருடைய உறவினர் கணக்கில் அனுப்பும்படியும், அவருடைய, 'கூகுள் பே' கணக்கு, 'சர்வர்' பிரச்னை காரணமாக இயங்கவில்லை என, செய்தி அனுப்பியிருந்தார்.
உடனே நான் சுதாரித்து, மெதுவாக அவனிடம் மெசஞ்சரில் பேசி, அது போலியான முகநுால் கணக்கு என்று கண்டுபிடித்தேன். கடைசியில், நான் பணம் அனுப்ப மாட்டேன் என்று தெரிந்ததும், கெட்ட வார்த்தையில் செய்தி அனுப்பினான்.
இது, ஒரு புதுவிதமான ஏமாற்று வேலை. இவ்வாறு நடப்பது, இது இரண்டாவது முறை.
நமக்குத் தெரிந்த நண்பர்கள் பெயரில், முகநுாலில் போலியான கணக்குகளை உருவாக்கி, நம்மிடம், 'நண்பர் விண்ணப்பம்' கேட்பர். நாம் நண்பனாக ஏற்றுக் கொண்டதும், மெசஞ்சரில் நம்மைத் தொடர்பு கொண்டு ஏதேதோ காரணம் சொல்லி, 'கூகுள் பே' அல்லது 'போன் பே' வழியாக சிறிய அளவு பணம் கேட்டு, இன்னொருவரின் அக்கவுன்ட்டுக்கு போட சொல்வர்.
நாமும் கொஞ்சம் பணம்தானே என்று அனுப்பினால், அடுத்த நிமிடமே அந்த முகநுால் கணக்கு முடக்கம் செய்யப்படும்; நம் பணமும் காணாமல் போய்விடும். நாம் அவர்களை தொடர்பு கொள்ள முடியாது.
சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மற்றும் இணையதள பரிவர்த்தனை மேற்கொள்வோர் கவனமாக இருக்க வேண்டும்.
பென்ஸ் பிரான்சிஸ், கோவை.
தாம்பூலத்தில் அசத்தல்!
கடந்த மாதம், எங்கள் அலுவலக தோழியின் திருமணத்திற்கு சென்றிருந்தோம். வரவேற்பிற்கு பாதி பேர், மறுநாள் திருமணத்திற்கு பாதி பேர் என பிரித்து, அழைப்பிதழ் கொடுத்திருந்தாள்.
நிகழ்ச்சி முடிந்து சாப்பிட்டு வரும்போது, அஞ்சறை பெட்டியுடன் கூடிய ஒரு தாம்பூலப் பையை அனைவருக்கும் கொடுத்தனர்.
கேட்டரிங் செய்பவரிடம், கலப்பில்லாமல் வறுத்தவைகளை அரைத்து பொடி செய்து, 'பேக்' செய்யச் சொல்லியுள்ளனர். அதில், ஒவ்வொரு டப்பாவிலும் ஒரு பொடியை, 'பேக்' செய்து, அதுபற்றிய குறிப்பையும் வைத்திருந்தனர்.
அஞ்சறை பெட்டியில், கறிவேப்பிலை பொடி, மிளகு குழம்பு பொடி, அங்காயப் பொடி, கஷாயப் பொடி, துாதுவளை பொடி, உலர்ந்த தேன் நெல்லி, உலர்ந்த இனிப்பு இஞ்சி இருந்தது. தாம்பூல பையில், 'காட்டன் மாஸ்க், கிளவுஸ்' மற்றும் இயற்கை முறையில் செய்த, 'சானிடைசர்' கொடுத்தனர்.
'கொரோனா' காலத்தில், எண்ணெய் பலகாரங்கள், இனிப்புகள் கொடுப்பதற்கு பதில், இவைகளெல்லாம் ஆரோக்கியத்திற்கு நல்லது என, ஏற்பாடு செய்திருந்தனர்.
அனைவரும் இதை பாராட்டினோம்.
எஸ். சித்ரா, சென்னை.