குவைத்தில், சம்பள பிரச்னை, ஸ்பான்சர் பிரச்னை மற்றும் மருத்துவ உதவி போன்றவற்றை கவனிப்பதெற்கென்று, 'எம்பஸி'யில் தனிக்குழுவை நியமித்திருக்கின்றனர்.
ஆலோசனை வழங்க, வழக்கு எடுத்து வாதாட வக்கீல் என, எல்லா வசதியும் இப்போது, 'எம்பஸி'யில் உள்ளன. என்ன பிரச்னையென்றாலும், 24 மணி நேர சேவைக்கு, தனி டெலிபோன் எண்கள் தரப்பட்டுள்ளன.
சான்றிதழ்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வேலைகளை, 'எம்பஸி' கவனித்தாலும், படிப்பறிவில்லா தொழிலாளர்களை வழி நடத்தவும், அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அனுசரணையாய் உதவவும், 'பிரன்ட்லைனர்ஸ்' அமைப்பின் செயலர் மதி தலைமையில், 'தொழிலாளர் நலப் பிரிவு' இயங்குகிறது.
லட்சக்கணக்கில் சம்பாதிப்போர், லட்சக்கணக்கானோர் இருக்கின்றனர். ஆனால், சுயநலமாய் சுழல்பவர்களே அதிகம்.
'பிரன்ட்லைனர்ஸ்' போலவே இங்கு பல அமைப்புகளும், சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ளன.
வாரி வழங்க, டி.வி.எஸ்., குழும டாக்டர் ஹைதர் அலி, ராமதாஸ் போன்ற தமிழ் தொழிலதிபர்களும் உள்ளனர்.
இந்திய துாதரகத்தில், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில், காலை நேரத்தில் இந்திய துாதுவர் கொடியேற்றுவார். பள்ளிப் பிள்ளைகள் தேசபக்தி பாடல்கள் பாடி, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கூறும் நிகழ்வு, மெய்சிலிர்க்க வைக்கும். அங்கே ஆயிரக்கணக்கில், இந்தியர்கள் திரண்டு, 'வந்தே மாதரம், ஜெய்ஹிந்த், பாரத் மாதாகி ஜே...' என்று முழங்கி நாட்டுப்பற்றைப் பறைசாற்றுவர்.
திறமையானவர்களை பாராட்ட என்றுமே தயங்கினதில்லை, பாலச்சந்தர். ஆனால், அவருக்கு பாராட்டு என்றால் பிடி கொடுக்க மாட்டார்.
நான்கு தலைமுறையாக முதல் இடத்திலேயே இருந்து, ஜாம்பவான்கள் பலரையும் உருவாக்கிய, கே.பி.,க்கு குவைத்தில் விழா எடுக்க வேண்டும் என்று தோன்றிற்று.
அவரது சந்திப்பிற்கு செய்தி வாசிப்பாளரும், நாடக கலைஞருமான, வரதராஜன் ஏற்பாடு செய்தார்.
பாலசந்தரிடம் தகவல் தெரிவிக்க, 'சரி பார்க்கலாம்...' என்றார்.
அந்த ஒரு வார்த்தையை வைத்தே அவரை தொந்தரவு செய்து தேதி வாங்கி, அவருக்கு துணையாக வரதராஜனும் குவைத் வந்தார்.
அந்த தேதியில் இன்னொரு விசேஷம் கூட இருந்தது. மார்ச் 30, 2000 - அன்று தான், அவரது சிஷ்யரான ரஜினிக்கு, டில்லியில், 'பத்மபூஷண்' பட்டம் கொடுக்கப்பட்டது. அதே நாளில் அவரது குருவுக்கு குவைத்தில், 'படவுலக பிரும்மா' எனும் பட்டத்தை நாங்கள் வழங்கினோம்.
பாராட்டு விழாவிலேயே, 'பிரன்ட்லைனர்ஸ்' நான்காம் பகுதியையும், கே.பி., 40 எனும் சிறப்பு மலரையும் வெளியிட்டோம்!
கூச்ச சுபாவமுள்ள கே.பி., மூன்று நாட்கள் குவைத்தில் அனைவருடனும் சகஜமாய் பேசி பழகியது, இன்ப அதிர்ச்சி. மேலும், ஹோட்டல் வேணாம் என்று, நண்பரின் வீட்டிலேயே தங்கினார்.
மேடையில் வயதையும் மீறி உற்சாகமாக பேசினார்...
'சென்னையில் உள்ள இயல்பான, 'டென்ஷன்' வாழ்க்கையிலிருந்து மூன்று நாட்கள் விடுபட வைத்து, சம்பந்தியை போல் கவனித்து, என் வாழ்வில், 10 வயதை குறைத்து தந்திருக்கிறீர்கள் சாமி...' என்று உருகினார்.
சில விஷயங்களில் ரொம்ப கறார், கே.பி., அனாவசியமாய் அடுத்தவர்களுக்கு செலவு வைக்கக் கூடாது என்பதில் அதிக கவனம். கடைவீதிக்கு போனபோது கூட யோசித்துதான் செலவழித்தார்.
அந்த நிகழ்ச்சியின் மூலம், ஊனமுற்ற, குழந்தைகள் காப்பகம் நடத்தி வரும் அமர்சேவா சங்கத்திற்கு அவர் முலமே நிதி வழங்கினோம்.
உள்ளூர் ரசிகர்களுக்கு அவருடன் நெருங்கி பழக கிடைக்காத வாய்ப்பு, அப்போது குவைத் ரசிகர்களுக்கு கிடைத்தது. அதே மாதிரி உள்ளூரில் கிடைக்காத சுதந்திரம் தனக்கு குவைத்தில் கிடைத்ததாக, கே.பி., மகிழ்வோடு குறிப்பிட்டது, எங்களுக்கு மன நிறைவாக இருந்தது.
'அன்புப் பாலம்' அமைப்பின், 60ம் ஆண்டு விழா, டாக்டர் அப்துல் கலாம் தலைமையில், சென்னையில், எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில் நடந்தது. அதில், இயக்குனர் கே.பி.,க்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், அதே மேடையில், அப்துல் கலாம் கையால் சிறந்த சேவையாளர் விருது எனக்கும் கிடைத்ததில், இரட்டிப்பு மகிழ்ச்சி!
ஆனால், குவைத்திலிருந்து இதற்காகவே வந்திருந்த என்னிடம், அவரது உதவியாளர் மோகன் ஒரு குண்டை துாக்கிப் போட்டார்.
'சாரி, மோகன்தாஸ்... இந்த விழாவில் இயக்குனர் கலந்துகொள்வதாக இல்லை. நீங்களே சாரிடம் பேசுங்க...' என்று அவர் நழுவ, ஏதோ விஷயம் இருப்பது புரிந்தது.
இயக்குனரிடம் பேச---, 'வேணாம் சாமி, என்னை விட்டிரு... உனக்குத் தெரியும், அப்துல் கலாம் கையால் விருது என்பதால் தான், நான் சம்மதித்தேன். ஆனால், விழாக்குழுவினரின் செயல்கள் என்னை அவமதிக்கிற மாதிரி உள்ளன...' என்றார்.
'கலாம் சாரின் கையால் விருது வாங்குவதில் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்குமோ, அதே அளவிற்கு தன் கையால் விருது தருவதில் அவருக்கும் இருக்கும் தானே... நீங்க வரலைன்னா நிச்சயம் அவருக்கு ஏமாற்றமாகும். யாரோ செய்த தவறுக்காக அவரை வருத்தப்பட வைக்கணுமா...' என்று, அவரை சமாதானம் செய்தேன்.
'பாலம்' கல்யாணசுந்தரத்திடம் விபரம் சொல்ல, அவருக்கும் அதிர்ச்சி!
— தொடரும்
என். சி. மோகன்தாஸ்