பா - கே
சனிக்கிழமை காலை, 11:00 மணி, அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்க, அனைவருக்கும் டீ கொடுத்துக் கொண்டிருந்தேன்.
டீ அருந்தியபடி, அன்றைய நாளிதழை மேய்ந்து கொண்டிருந்த, உதவி ஆசிரியை ஒருவர், 'ஐயோ... இதென்ன அநியாயமா இருக்கு...' என்று சத்தமாக அலற, என்னவோ ஏதோன்னு அனைவரும் அவரை பார்த்தனர்.
அடுத்த வாரத்துக்கான, 'திண்ணை' மேட்டர் கொடுக்க வந்த, நாராயணன், 'என்னம்மா, என்ன விஷயம்?' என்று கேட்டார்.
'இங்க பாருங்க நாணா சார், வடகொரியாவில், சிரிப்பதற்கு தடை போட்டுள்ளனர்... இத எங்கே போய் சொல்வது?' என்று அங்கலாய்த்தார்.
விஷயம் இதுதான்:
வட கொரிய நாட்டின் முன்னாள் அதிபர், கிம் ஜோங் இல் என்பவரின், 10ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, 10 நாட்களுக்கு மக்கள் சிரிக்கவோ, மது அருந்தவோ, ஷாப்பிங் செய்யவோ தடை விதித்துள்ளார், அந்நாட்டின் தற்போதைய அதிபரான, கிம் ஜோங் உன்.
கம்மிங் பேக் டு த பாயின்ட்.
'நாம எந்த யுகத்தில் இருக்கிறோம். ஹிட்லர், முசோலினி, இடி அமீன் போன்ற சர்வாதிகாரிகள் கூட இப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார்கள்...' என்றார், அந்த உதவி ஆசிரியை.
'இதைவிட கேலி கூத்தெல்லாம் பல நாடுகளில் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. சமீபத்தில், நான் படித்த ஒரு புத்தகத்தில் ஐரோப்பா நாடுகளில் ஒன்றான, நார்வே நாட்டின், கட்டுப்பாடுகள் பற்றி படித்தேன்...' என்று கூறி, சுற்றுமுற்றும் பார்வையை சுழற்றியவர், 'லென்ஸ் மாமா இன்னும் வரலியா... எப்பப்பாரு எதையாவது சொல்லிட்டு இருக்காதீர் என்று கோபித்து கொள்வார்...' என்றார், நாராயணன்.
'அவர், வெளியே போயிருக்கிறார். நீங்கள் சொல்ல வந்ததை சொல்லுங்க...' என்று ஆர்வமானார், உதவி ஆசிரியை.
சொல்ல ஆரம்பித்தார்...
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வே நாட்டில் விதிக்கப்பட்ட நகைச்சுவை சட்டங்கள் இது:
* ரஷ்யாவை ஒட்டி, நார்வே நாட்டு எல்லையில் ரஷ்ய நாடு இருக்கும் பக்கம் பார்த்தபடி சிறுநீர் கழிக்க கூடாது. மீறி, சிறுநீர் கழித்ததைக் கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான தண்டனை உண்டு
* வெளிநாடுகளிலிருந்து உருளைக் கிழங்கை இறக்குமதி செய்யக் கூடாது
* கிறிஸ்துமஸ் தினத்தன்று, கண்டிப்பாக வீட்டில் பீர் இருக்க வேண்டும். இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டால், தண்டனை உண்டு
* நார்வேயின் வட துருவத்தை ஒட்டிய நகரங்களில், சிலர், பனிக்கரடியை வீட்டில் வளர்ப்பு பிராணியாக வளர்ப்பர். பனிக்கரடி வளர்க்கும் வீட்டு பக்கம் செல்பவர்கள், தங்கள் பாதுகாப்புக்காக, வெடிகுண்டு எடுத்துச் செல்லலாம். தன்னை தாக்கும் பனிக்கரடிகளை குண்டு வீசி கொல்லவும் அனுமதி உண்டு
* சத்தமாக பேசுவது குற்றம். நடுத்தெருவில் அப்படி பேசினால், உடனே சிறையில் அடைக்கப்படுவர்
* ஞாயிற்றுக்கிழமைகளில், மதுவை விற்பதோ, வாங்குவதோ குற்றம். மது கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருக்கும்
* கோடை காலத்தில், குளிர் கால கோட்டையும், குளிர் காலத்தில், வெயில் கால கோட்டையும் அணிந்து செல்வது சட்டப்படி குற்றம்
* குழந்தைகளை கோபத்தில் அடித்தால், அவர்களை அரவணைக்கும் இல்லத்துக்கு அழைத்துச் சென்று பராமரிப்பர்.
- இவ்வாறு நாராயணன் சொல்லி முடிக்கவும், லென்ஸ் மாமா உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.
ஜாலி மூடில் இருந்தவர், 'ஓய் நாணா... என்ன கதை அளந்துகிட்டு இருக்கீர்...' என்றார்.
'ஒண்ணுமில்லப்பா...' என்று நழுவ பார்த்தார், நாராயணன்.
'அதுவா மாமா... வடகொரியாவில் சிரிப்பதற்கு தடை போட்டதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்...' என்றார், உதவி ஆசிரியை.
'லுாசாப்பா அவன். சிரிக்க தெரிந்த ஒரே உயிரினம் மனிதன் தான். அதற்கும் தடை போடுறானே... நம்மூர் கோமாளி மன்னன், முகமது பின் துக்ளக், இவரை விட எவ்வளவோ மேல்... பாவம்பா, வடகொரிய மக்கள். நம்மூரில் அவ்வப்போது கலகலப்பூட்டும் அரசியல்வாதிகளை, 'மீம்ஸ்' போட்டு கலாய்க்கும் நெட்டிசன்களை பார்த்தாவது அந்த குண்டு மூஞ்சி, கிம் ஜோங் உன் திருந்தட்டும்...' என்று கூறி, என் அருகில் வந்தார்.
'மணி... அடுத்த வார வாரமலர் இதழுக்கு அருமையான நடிகை படம் எடுத்துட்டு வந்திருக்கேன்; பார்க்கிறாயா... கேபினுக்கு வா, காட்டுறேன்...' என்றார்.
மாமாவின் ஜாலி மூடுக்கு காரணம் தெரிந்து, 'பொறுப்பாசிரியரிடம் கொடுங்க மாமா...' என்று கூறி, அங்கிருந்து நகர்ந்தேன்.
ப
நடுத்தெரு நாராயணன், மறதியாக அலுவலகத்தில் விட்டுச் சென்ற, 'புத்தகங்களும், அதன் பயன்களும்' என்ற புத்தகத்தை எடுத்து படித்தேன். அதில் ஒரு சிறு பகுதி இது:
ஒரு மனிதனின் குண நல பண்புகளை உயர்த்தி, துாய்மைப்படுத்தி சிந்திக்கவும், சிறந்த முறையில் வாழச் செய்பவை புத்தகங்கள் தான்.
புத்தகத்தை வாசித்ததன் காரணமாக, தங்களுக்குள் இருக்கும் கதவு திறக்கப்பட்டு, மகான்களாகவும், மகாத்மாக்களாகவும் பலர் மாறியிருக்கின்றனர்.
* மோகன்தாஸ் காந்தியாக இருந்தவரை, மகாத்மா காந்தியாக மாற்றியது, ஜான்ரஸ்கின் எழுதிய, 'கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்ற புத்தகம்
* வெங்கட்ராமனாக இருந்தவரை, மகான் ஸ்ரீரமண மகரிஷியாக மாற்றியது சேக்கிழார் எழுதிய, 'பெரிய புராணம்' என்ற புத்தகம்
* லண்டன் நுாலகத்தில், 33 ஆண்டுகள் கிடந்து, கார்ல் மார்க்ஸ் எழுதிய, 'மூலதனம்' என்ற புத்தகம், உலக சமுதாயத்தை, உழைக்கும் வர்க்கத்தை உயர்த்திப் பிடித்தது
* டால்ஸ்டாய் எழுதிய, 'போரும் அமைதியும்' மற்றும் 'அன்னகரீனா' இரண்டும் உலக இலக்கியத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றவை. இப்படி மன மாற்றத்திற்கும், சமூக மாற்றத்திற்கும் புத்தகங்களே சாட்சியங்களாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றன
* காளிதாசன் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனைகள் இப்போது இல்லை. ஆனால், அவர் எழுதிய, 'சாகுந்தலம்' இன்றும் ஜீவித்துக் கொண்டிருக்கிறது
* வாழ்வாங்கு வாழ வழி சொன்ன, வள்ளுவரும், கம்பரும் இன்று இல்லை. ஆனால், அவர்கள் எழுதிய, 'திருக்குறளும், ராமாயணமும்' இன்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன
* 'புத்தகங்கள் காலத்தின் விதை நெல்' என்பார், பாவேந்தர் பாரதிதாசன். ஆம், ஒரு விதை நெல்தான், பல நெல் மணிகளை உற்பத்தி செய்கிறது. புத்தகங்களில் பொதிந்திருக்கிற கருத்துகளும் விதை நெல்லாய் தான் பலரை உருவாக்குகின்றன.
புத்தக பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி:
வரும் ஜன., 6ம் தேதி முதல், சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. தேவையான புத்தகங்களை வாங்கி, படித்து மகிழுங்கள்.