க. ரவி, சென்னை: தபால், 'கார்டில்' முகவரி எழுதாமல் உங்கள் படத்தை ஒட்டினால் வந்து சேர்வது உண்மையா?
நீங்கள் தான் இப்பகுதியில் வெளியாகும் அஞ்சல் அட்டைகளை பார்க்கிறீர்களே... இதற்கு முன், 'கல்கண்டு' ஆசிரியர் தமிழ்வாணனின் அடையாளமான, கருப்பு கண்ணாடியும், தொப்பியும் வரைந்தால், அவரிடம் சென்று சேர்ந்து விடும்!
அப்துல், திருச்சி: நமது மீனவர்கள் மீதான, இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்கிறதே... இதற்கு நிரந்தர தீர்வு தான் என்ன?
நம் மீனவர்களின் மீது தான் தவறு! நம் எல்லையைக் காட்டும், ஜி.பி.எஸ்., அவர்களின் படகுகளில் உள்ளது. எல்லையை தாண்டும்போது, அது சுட்டிக் காட்டும். இவர்களின் எல்லை மீறிய ஆசை தான், கைதுக்குக் காரணம்!
கீதா வாசன், சென்னை: சினிமா விளம்பரங்கள், நம் இதழில் வருவதில்லையே ஏன்?
சினிமா விளம்பரங்கள் வரும் இதழில், மற்ற, 'கமர்ஷியல்' விளம்பர கட்டணத்தை விட, மிக குறைந்த அளவே வசூலிக்கின்றனர்... நாம் அப்படி அல்லவே... அதனால் தான்!
* வெ. விஜயகுமாரி, திண்டுக்கல்: நாளிதழ் விற்பனை குறைய காரணம் என்ன?
குறையவில்லையே... 'ஆடிட் பிரோ ஆப் சர்குலேஷன்' - ஏ.பி.சி., என்ற, அனைத்து இந்திய பத்திரிகைகளின் விற்பனை கண்காணிப்பு அமைப்பு, எந்த மொழி பத்திரிகையின் விற்பனையும் குறையவில்லை, அதிகரித்து இருப்பதாகத்தானே கூறுகிறது!
ரா. கல்யாணசுந்தரம், மதுரை: சிறுவர்மலர் போட்டிகளில் கலந்துகொள்ளும் சிறுவர்கள் எப்படி வங்கிக் கணக்கு விபரம் தர முடியும்? சிறு வயதிலேயே வங்கிக் கணக்கு வைத்திருப்பரா?
இல்லை! அம்மா, அப்பாவின் வங்கி விபரங்களை எழுதி அனுப்புவர். அவர்கள் கணக்கிற்கு பரிசுத் தொகை சென்று சேர்ந்து விடும்!
ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம், தென்காசி: திருநெல்வேலி என்றதும் தாங்கள் நினைவுக்கு வருவது எது சார்? நெல்லையப்பர் கோவிலா... தாமிரபரணி ஆறா... அல்வாவா?
தாமிரபரணி தான் முதலில் நினைவுக்கு வரும்! யூசுப்கான் என்பவர் தான், அங்கு நீச்சல் கற்றுக் கொடுத்தார்!
* அ. குணசேகரன், சென்னை: இப்போதெல்லாம், தாலியை ஜாக்கெட்டுக்குள் மறைத்துக் கொள்கின்றனரே...
தம்மை காத்துக் கொள்கின்றனர்... செயின் பறிப்பவர்களிடமிருந்து!