வானமே எல்லை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2022
00:00

மென்பொருள் பொறியாளர் பணிக்கான இரண்டாம் நிலை எழுத்துத் தேர்வில் தேர்வாகி,
மூன்றாம் கட்ட கலந்துரையாடலுக்காக, அதீத நம்பிக்கையுடன் அந்த பெரிய நிறுவனத்தின் பிரமாண்டமான வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தான், ராஜசேகர்.
குளிரூட்டப்பட்ட அந்த பெரிய, 'லாபி'யில் இருந்த இருக்கையில் அமருமாறு அங்கிருந்த உதவியாளர் தெரிவித்தார். இவனோடு சேர்த்து, 20 பேர் மட்டுமே கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில், 12 பேருக்கு மேல் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது, அவர்கள் பேசும்போது தெரிந்தது.

குறித்த நேரத்திற்கு கலந்துரையாடல் ஆரம்பிக்க, ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். ராஜசேகரின் மனம் கொஞ்சமாக படபடக்க அதை வெளிக்காட்டாமல் இயல்பாக இருந்தான். அடுத்ததாக அவன் முறை.
இருக்கையில் இருந்து எழுந்து ஆழ மூச்சிழுத்து, நிதானமாக நேர்முகத்தேர்வு நடக்கும் அந்த அறைக்குள் சென்றான், ராஜசேகர். அங்கே மத்திம வயதில் இருவரும், நரையோடிப் போயிருந்த ஒரு நபரும், அவருக்கு அருகே ஒரு பெண்மணியும் இருந்தார்.
விதவிதமான கேள்விகளை, வித்தியாசமான கோணத்தில் அந்த நால்வரும் எழுப்பினர். பதில்களை சொன்னதும், எதிரில் இருந்தவர்களின் முகத்தில் மெச்சுதலான பார்வை. சம்பளம் மற்றும் இதர படிகள் குறித்து பேசி, கிட்டத்தட்ட தேர்வான நிலையில், அவனது சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டது.
சட்டென சிறு மவுனம். தெரிவுக்குழுவில் இருந்த ஒருவர், மற்ற மூவரை பார்த்து, 'கிசுகிசு'வென பேசினார். அனைவரின் பார்வையிலும் சின்ன இளக்காரம் தெரிந்தது. ஒருவேளை அது இவனது யூகமோ?
எதிரே மத்திம வயதிலிருந்த ஒருவர், சற்றே செருமியவாறே, ''மிஸ்டர் ராஜசேகர், உங்களை இந்த வேலைக்கு தேர்வு செய்ய முடியாது,'' என்றார்.
சின்ன அதிர்வுடன் முகத்தில் குழப்ப ரேகை படிய, ''ஐ பெக் யுவர் பர்டன்?'' என்றான், ராஜசேகர்.
''இந்த கம்பெனியோட விதிபடி, அஞ்சல் வழியில் படிச்சவங்கள நாங்க, வேலைக்கு எடுக்க முடியாது,'' என்றவர் தொடர்ந்து, ராஜசேகரின் முகத்தை வருத்தத்தோடு பார்த்து, ''உங்க பர்பாமென்ஸ் எல்லாரை விடவும் நல்லா இருந்தும்...'' என்று வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தினார், அந்த பெண்.
''மேம்... நான் அஞ்சல் வழியில படிச்சதுக்கான காரணம், பிளஸ் 2 முடிச்சு விடுமுறையில் இருக்கும்போது ஏற்பட்ட விபத்தில், என் இரு கால்களும் பாதிக்கப்பட்டது. நல்ல வேளை, பக்கத்துலயே, ஜி.எச்., இருந்ததால என்னை உடனே சேர்க்க முடிஞ்சது.
''கிட்டத்தட்ட துண்டா போன ரெண்டு காலையும், 'பிளேட்' வச்சு அறுவை சிகிச்சை பண்ணி சேத்தாங்க. அடுத்தடுத்து, 'பிஸியோ, நெர்வ் தெரபி'-ன்னு ஒன்றரை வருஷம் ஆச்சு.
''அந்த சமயத்துல நான் படிச்ச காலேஜ்-ல, 'உன் படிப்பை, 'டிஸ்டன்ஸ் எஜுகேஷனு'க்கு மாத்திடறோம், அப்போதான் வருகை பதிவேட்டில் பிரச்னை வராது. நீ தேர்வு மட்டும் எப்படியாவது வந்து எழுது. வீல் சேர்-ல வந்தா கூட உனக்கு வேண்டிய ஏற்பாட்டை நாங்க பார்த்துக்கறோம்'ன்னு சொன்னாங்க. எனக்கும் வேற வழி தெரியல. அதனால, 'யூ.ஜி., டிஸ்டன்ஸ்-'ல படிக்க வேண்டியதா போச்சு.
''ஆனா, அதுலயும், 'டிஸ்டிங்ஷன்'ல
பாஸ் பண்ணியிருக்கேன். இதை ஒரு காரணம்ன்னு சொல்லி என்னை,
'ரிஜெக்ட்' பண்றதுங்கிறது?'' என்று நிறுத்தினான்.
ஆண்கள் முகத்தில் புரிதலான
பாவமும், அப்பெண்மணி மற்றும் அந்த வயதான இருவரிடமிருந்தும் பச்சாதாப பார்வை ஓடுவதை, ராஜசேகரால் உணர
முடிந்தது.
இப்போது, அந்த குளிரூட்டப்பட்ட அறையில் அவனுக்கு மூச்சடைப்பது போல இருக்கவே, கழுத்தில் இருந்த, 'டை'யை தளர்த்தி, ஆழ சுவாசித்தான். தேர்ந்த அரசியல்வாதிபோல சட்டென ஒரு செயற்கை புன்னகையை முகத்தில் வரவழைத்து, ''அதிகமா பேசினத்துக்கு மன்னிக்கவும். இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்,'' என்று, கிளம்ப எத்தனித்தான்.
''ஒரு நிமிஷம் இளைஞனே... உங்க விண்ணப்பத்தை நிலுவையில் வைத்து, 'மேனேஜ்மென்ட்'ல பேசலாம்ன்னு இருக்கோம். ஆனா, அதிக நம்பிக்கை வளர்த்துக்காதீங்க; ஏன்னா, 'ரெகமென்டேஷன்'- இந்த கம்பெனி மேனேஜ்மென்டு-க்கு பிடிக்காது. பேசிட்டு உங்களுக்கு போன் செய்றேன். ஆனா, எதையும் ஏத்துக்க தயாரா இருங்க,'' என்று நெடுமூச்சுடன் கூறினார், நரையோடிய மனிதர்.
கார்டை வாங்கி சட்டைப் பையில் வைத்து, தனக்காக பேசுவதாக சொன்ன அவருக்கு, மனமார்ந்த நன்றியை தெரிவித்து, அறையை விட்டு வெளியேறினான்.
தன் எதிர்காலம் இங்கேதான் என்ற பல நாள் கனவு துாள் துாளாய் போனதாக உணர்ந்தான். தன் தகுதியில் குறையிருந்து நிராகரித்திருந்தால் கூட இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டிருப்பான், ராஜசேகர்.
வீட்டுக்குச் செல்ல பேருந்துக்காக காத்திருந்தபோது, கடவுள் மேல் கோபம் வந்தது. 'அந்த விபத்துல இருந்து எதுக்கு என்னை காப்பாத்தின... பேசாம சாகடிச்சிருக்கலாமில்ல... இருக்கற காசு பணமெல்லாம் போயி, இந்த காலை சரி பண்ணி என்ன ப்ரயோஜனம்... தோ, சொல்லிட்டாங்க பாரு... நீ, இங்க வேலை பார்க்கறதுக்கு லாயக்கில்லே...'ன்னு புலம்ப ஆரம்பித்தான்.
பத்து நிமிடங்கள் காத்திருந்தும், பேருந்து வரவில்லை.
'நானல்லாம் பொறந்ததே வேஸ்டு. எனக்கு பஸ் வேற கேடா, நடந்தே போறேன்...
10 - 20 ரூபா மிச்சமாகும்; தம்பி குணாவுக்கு ரெண்டு சமோசாவாவது வாங்கலாம்...' என்று நினைத்தபடி, நடக்க ஆரம்பித்தான்.
பதினைந்து நிமிட நடைக்குப் பின், ஒரு சிற்றுண்டி நிலையத்தினுள் சென்றான். அப்போது அழுக்கான உடையுடன் ஒருவன் வந்து, கேக் விலை கேட்க, அந்த குரல் பரிச்சயமானது போல் இருக்க, திரும்பிப் பார்த்தான், ராஜசேகர்.
''ஹே... வாசுதான நீ?'' என்று அந்த அழுக்கு உடைக்காரனைப் பார்த்து ஆச்சர்ய அதிர்ச்சியை வெளிப்படுத்தினான்.
எதிர்பாரா நேரத்தில் நண்பனைப் பார்த்த உற்சாகத்தில், ''ஹாய் ஷேக்ஸ்... என்ன ஆச்சரியம், எப்டிடா இருக்க?'' என்று, கை குலுக்கி, ''ஒரு நிமிஷம் இரு. எங்க அக்கா பொண்ணுக்கு பிறந்தநாள். கேக், 'ஆர்டர்' பண்ணிட்டு வர்றேன்,'' என்றான்.

ராஜசேகரின் பள்ளித் தோழன், வாசு. அருகருகே வீடு. கல்லுாரியில், ராஜசேகர் கணினியை முதன்மைப் பாடமாக எடுத்து படிக்க, வாசுவோ கட்டட பொறியியலை தேர்ந்தெடுத்தான். துரதிஷ்டவசமாக, கல்லுாரியில் சேர்ந்த மூன்றே மாதத்தில் வாசுவின் அப்பா இறந்துவிட, அவர் செய்து வந்த கட்டுமானத் தொழில் முடங்கியது.
சொத்து அனைத்தும் அவர் கட்டடத்திற்கென முன் பணமாக வாங்கியதை திருப்பிச் செலுத்தவே சென்றது. விளைவு, வாசுவின் படிப்பு தடைபட்டது. கடைசி சொத்தாக அவர்கள் வசித்த வீடும் விற்கப்பட, அதன் பின், வாசுவைப் பற்றி அறிந்து கொள்ள முடியாமல் போனது.
நண்பர்கள் இருவரும் அவரவருக்கு தேவையானதை வாங்கி, அங்கிருந்து வெளியேறினர்.
''சொல்லுடா எப்படி இருக்க?'' என்று, ஆரம்பித்தான், ராஜசேகர்.
''அருமையா இருக்கேன்டா. வா அப்படியே, 'சைட்'க்கு போயி பேசலாம். அம்மா - அப்பால்லாம் எப்படி இருக்காங்க... உன் தம்பி குணா, என்ன படிக்கிறான்?'' என்று சளசளத்தவாறே இருவரும் ஒரு பெரிய கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.
''எங்களை பத்தி கேட்டது போதும், நீ சொல்லு என்ன பண்ற... சுமதி அக்கா எப்படி இருக்காங்க... அம்மா?''
''அக்காக்கு கல்யாணம் ஆகி, ஒரு குழந்தை இருக்கு. இரு போட்டோ காமிக்கிறேன்,'' என்று, 'ஐ போனில்' சில புகைப்படங்களைக் காண்பித்தான். அதில், சுமதி அக்கா, கணவர் மற்றும் குழந்தையோடு சிரித்தபடி
இருந்தார்.
''வாவ், சூப்பர்டா... அம்மா இவங்களோட இருக்காங்களா?''
''இல்லடா, அம்மா போன
ஜூன்-ல தவறிட்டாங்க,'' என்று சில நொடி மவுனமானான்.
'வீட்டை நல்லா பார்த்துக்க சொல்லுங்கம்மா...' என்று, கடைசியாக அவர்கள் வீட்டை காலி செய்யும்போது, வாசு அம்மாவின் கரகரத்த குரலும், கலங்கி இருந்த கண்களில் ததும்பிய நீரும் இன்னமும் ராஜசேகரின் நினைவில் இருந்தது.
அவரின் மறைவு ராஜசேகரை சோகமாக்க, வாசுவின் கையை பிடித்து, ''சாரிடா,'' என்றான்.
''ப்ச்... விட்றா,'' என்று புன்னகைத்த வாசு, திரும்பி கட்டடத்தைக் காண்பித்து, ''இதான்
நா வேலை பண்ற இடம்.''
''ஓ... என்னடா பண்ற?''
''இங்க, 'கான்ட்ராக்டரா' இருக்கேன்டா,'' என்றான்.
''கான்ட்ராக்டர்?'' என்றபடியே பெரிய வளாகத்தைப் பார்வையிட்டான்.
''என்ன கட்றாங்க?''
''டீம்ட் யூனிவர்சிட்டி கட்றாங்கடா... நாலு வருஷமா இந்த லைன்ல இருக்கேன். அப்பா இறந்ததுக்கப்புறம், அவரோட பிரெண்ட் ஒருத்தர், 'வா... 'பெயின்டிங்' வேலைல கூட மாட இரு'ன்னு சொல்லி கூப்பிட்டார். எனக்கும் ஆரம்பத்திலிருந்து அப்பா தொழிலை பார்த்து வளர்ந்தேனா, ஓ.கே.,ன்னு அவர்ட்ட சேர்ந்துட்டேன்.
''ரெண்டு வருஷம் அவர் கூட இருந்தேன். 'பெயின்டிங்' மட்டுமில்லாம, அதுல கொஞ்சம், 'ஆர்டிஸ்டிக் லுக்' கொண்டு வந்து, 'ரிச்சா, ராயலா' மாத்தறது நம், 'ஸ்டைல்!'
''போன வருஷம் ஒரு அபார்ட்மென்ட்டோட, 'கான்ட்ராக்ட்' கிடைச்சது. அது ரொம்ப அருமையாக இருக்கவே, ரொம்ப, 'இம்ப்ரெஸ்' ஆயிட்டார். அவர்தான் இந்த யூனிவர்சிட்டி கட்றார். 'கூட இருந்து எல்லாத்தையும் முடிச்சுக் குடுப்பா'ன்னு சொல்லிட்டாங்க. அடுத்தடுத்து, 'ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், கேட்டட் கம்யூனிட்டி ரோ ஹவுஸ்'ன்னு வரிசையா வேலை இருக்கு...
''அப்பா அடிக்கடி சொல்வாருடா... 'ஒரு விஷயம் நமக்கு கிடைக்கலைன்னா அதைவிட சிறப்பான ஒண்ணு நமக்காக காத்திட்டுருக்கு'ன்னு. நா நினைச்ச படிப்பு, எனக்கு கிடைக்கல... ஆனா, அந்த படிப்பு படிச்சவங்களுக்கு நா சம்பளம் குடுக்கறா மாதிரி வாழ்க்கை அமைஞ்சது.''
''அட, அப்படியா?'' என்றான், ராஜசேகர்.
''என்ன பார்க்கற... இப்போ அஞ்சு சிவில் இன்ஜினீயர்ஸ் என்கிட்டே வேலை பார்க்கறாங்க,'' என்றான், வாசு.
அவன் பேசுவதை கேட்டதும், வாசுவை தனக்காக கடவுள் அனுப்பினாரோ என்ற சந்தேகம் வந்தது.
''என்னை விடு, நீ என்ன பண்ற சொல்லு?'' கேட்டான், வாசு.
''இப்போதைக்கு வேலை தேடிட்டு இருக்கேன். ஆனா, ஒரு, 'ஆப் டெவலப்' பண்ற யோசனை இருக்கு. இன்னும் மூணு மாசத்துல தயார் பண்ணிடுவேன்.''
''அப்ப வருங்கால நாராயணமூர்த்திக்கிட்ட பேசிட்டு இருக்கேன்னு சொல்லு,'' என்று சிரித்தான், வாசு.
'இன்போசிஸ்' நிறுவனரோடு தன்னை இணைத்துப் பேசிய வாசுவின் பேச்சில், ராஜசேகரின் மனது இன்னமும் உற்சாகமானது. அந்த நொடியில் அவனது சொந்த, 'ஆப்' தயாரிப்பு எனும் விதை வளர்ந்து விருட்சமாகும் வாய்ப்பு பிரகாசமாக தெரிந்தது.
முகம் பிரகாசிக்க,''எஸ்...'' என்றான்.
அப்போது, ராஜசேகரின் மொபைல் ஒலிக்க, ''ஒரு நிமிஷம்,'' என்று அழைப்பை ஏற்றான்.
''ஹலோ!''
''ஹலோ, உங்களை, 'இன்டர்வியூ' பண்ணின நிறுவனத்திலிருந்து பேசறேன்,'' என்று கொஞ்சம் அழுத்தமான குரலில் மறுமுனை பதில் அளிக்க... பேசுபவர் யாரென புரிந்தது, ராஜசேகருக்கு.
''சொல்லுங்க சார்.''
சற்றே வருத்தத்தோடு, ''சாரி, சொல்ல ரொம்ப வருத்தமா இருக்கு. உங்க விண்ணப்பத்தை மேனேஜ்மென்ட் நிராகரிச்சுட்டாங்க,'' என்றார்.
''பரவாயில்லை ஸார்... ஆனா, ஒரு சின்ன ஆப்ளிகேஷன், நீங்க, 'இன்டர்வியூ' பண்ணும்போது கேட்டீங்கல்ல, 'எப்படி நீங்க, 'டெவலப்' பண்ற சாப்ட்வேர, எல்லாருக்கும் ஏத்தா மாதிரி ஈஸியா வடிவமைக்கறது'ன்னு... அதுக்கு என்கிட்டே கொஞ்சம் யோசனைகள் இருக்கு. அதை உங்ககிட்ட வேலை பார்க்கறவனா இல்லாம, 'பிரீலான்சரா சஜ்ஜஸ்ட்' பண்றதுக்கு வாய்ப்பு குடுக்க முடியுமா?'' என்றான், ராஜசேகர்.
மறுமுனை சில நொடி அமைதியானது. மெதுவான குரலில் நால்வரும் கலந்து ஆலோசிக்கின்றனர் என்று ராஜசேகருக்கு புரிந்தது.
பின்னர், அவர் தொண்டையை செருமி, ''யா ஷ்யூர்... மிஸ்டர் ராஜசேகர். நீங்க நாளைக்கு உங்க ப்ரபோசலோட வாங்க. மீட்டிங் வச்சுக்கலாம்,'' என்றார்.
பேச்சில், பாராட்டு இழையோடியது.
அவர் மனதில், 'ஒளிபடைத்த கண்ணினாய்
வா வா வா...' என்ற வீரத்தமிழ்க்கவி பாரதியின் வரிகள் ஓடியதை சொல்லவும் வேண்டுமோ?

லட்சுமி கணபதி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Girija - Chennai,இந்தியா
03-ஜன-202201:08:19 IST Report Abuse
Girija அபத்தமான கதை தொலைதூர கல்வி சான்றிதழ் அரசு அலுவலகத்தில் பதவி உயர்விற்கு தான் செல்லாது . வாயில் வடை சுடுவது போல் கான்ட்ராக்ட்டர் நண்பர் . யூனிவர்சிட்டி பில்டிங்காம் ?. அதைவடிவமைத்து கட்டுவது என்பது எவ்வளவு பேர் வேலை என்று தெரியுமா ? அந்த காண்ட்ராக்ட் பெற ஆயிரம் நிபந்தனைகள் உள்ளது. என்னடா இன்னும் மொபைல் அடிக்கலை ன்னு பார்த்தேன் அடிச்சிடிச்சு. .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X