சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான பேட்டி ஒன்றில், சரோஜாதேவி கூறியது:
சினிமா நடிகை ஆவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எங்க அம்மா ஆசைப்பட்டதால், சினிமாவுக்கு வந்தேன்.
நாடோடி மன்னன் படத்திற்கு பின், 30 படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஒரே சமயத்தில், ஒரு நாளில் மூன்று உச்ச நடிகர்களுடன் நடித்த, 'ஹீரோயின்' நானாக தான் இருப்பேன்.
அந்தக் காலத்தில், 'கேரவன்' வசதியெல்லாம் கிடையாது. ஒரு மின்விசிறிக்கு கீழ் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து, யார், யார் எப்படி நடிக்கின்றனர் என்று பார்த்துக் கொண்டிருப்போம்.
22 ஆண்டுகளுக்கு முன், கணவரை இழந்தேன்.
'நான் சரோஜாவை விதவை கோலத்தில் பார்க்க மாட்டேன்...' என்று, மூன்று ஆண்டுகள் என்னை பார்க்காமல் இருந்தார், சிவாஜி.
நானாக மனதை தேற்றி, அவரை சந்தித்தேன். நான் சென்னை வந்தால், சிவாஜி வீட்டில் இருந்து தான் சாப்பாடு வரும்.
'ஜனரஞ்சக இயக்குனர் பாக்யராஜ்' என்ற நுாலிலிருந்து: சினிமாவுக்கு வரவேண்டும் என்ற ஆசையில், எவ்வளவு பெரிய தவறு செய்தோம் என்று பழைய சம்பவங்களை நினைத்து பார்ப்பேன்.
ஒரு சூழ்நிலையில் எல்லா நண்பர்களிடமும் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி விட்டேன். இனிமேல் யாருக்கும் கடிதம் எழுதி, பணம் பெற முடியாத நிலை. நான் தங்கியிருந்த அறையில், ஆறு பேர் இருந்தனர். அவர்களுக்கு தினமும் நான் தான் சாப்பாடு போட வேண்டும். என்னோடு இருந்த நண்பர், ஒரு திட்டம் சொன்னார்.
'கருமாரி பிலிம்ஸ் என்று வெளியே, 'போர்டு' போட்டு, புதுமுகங்கள் தேவை என்று சொன்னால், பலர் வருவர். ஒவ்வொருவரிடமும், 'மேக் அப் டெஸ்டு'க்கு, 300 ரூபாய் வாங்கினால், நாம் பசியாறலாம்...' என்றார்.
சற்று தயங்கினாலும், எனக்கும் வேறு வழி தெரியவில்லை.
வெளியே, 'போர்டு' தொங்க விடப்பட்டது. மேஜை மீது அழகான விரிப்பு. ஆஷ்ட்ரே, பைல்கள், செக் புக் என, ஆடம்பரமாக வைத்துக் கொண்டு உட்கார்ந்தேன்.
மிக கஷ்ட நிலையில் இருந்த, 'மேக் - அப் மேன், போட்டோகிராபர்' இருவரை தயாராக வைத்துக் கொண்டோம். வருகிறவர்களிடம், என் நண்பர் தான் பேசுவார்.
நடிக்கும் ஆசையில் வருகிறவர்கள், எங்கள் ஆர்ப்பாட்டங்களை நம்பி, பணம் கொடுத்து, தாங்கள் தான், 'ஹீரோ' என்று, சென்று விடுவர்.
ஒரு ஆள் சிக்கினால் எல்லா செலவும் போக, 100 ரூபாய் மீதம் இருக்கும். அதை வைத்து, ஆறு பேரும் சாப்பிடுவோம்.
ஒருநாள், ஒரு முரட்டு ஆள் வந்தார்.
'நல்லா ஸ்டன்ட் செய்வேன். உங்க படத்துல ஒரு நல்ல வேடம் கொடுக்கணும்...' என்றவர், பணத்தோடு வருவதாக நம்பிக்கையோடு போனார்.
அவர், சினிமாவில் நடிக்கும் ஆசையால், சைக்கிளை விற்று, எங்களுக்கு, 300 ரூபாய் கொடுத்திருக்கிறார். நான்கு நாளைக்கு ஒருமுறை வந்து விசாரிப்பார்.
'கதை டிஸ்கஷன், பைனான்ஸ் ஏற்பாடு நடக்கிறது...' என்று பொய் சொல்லி, சமாளித்து வந்தோம்.
ஒருநாள், நண்பரின் சட்டையை பிடித்து, 'என்னாங்கடா டபாய்ச்சுக்கினே இருக்கீங்க... வாய்ப்பு கொடு; இல்லேனா பணத்தைக் கொடு...' என்று எகிறினார்.
அவர் திரும்ப வந்தால், உடம்பில் கை கால் மாறிவிடும் என்ற பயம் எழுந்தது; ஊரை பார்க்க கிளம்பினர், நண்பர்கள். லாட்ஜ் அறை என் பெயரில் பதிவு செய்திருப்பதுடன், வாடகை பாக்கி, 750 ரூபாயும் கொடுக்க வேண்டும். அதனாலேயே என்னுடைய துணிகளை எல்லாம் மற்றவர்களிடம் கொடுத்தனுப்பி, இரவோடு இரவாக கம்பி நீட்டி விட்டேன்.
தற்போது, பாண்டிபஜார் பக்கம் போனாலும், அந்த லாட்ஜை பார்த்துக் கொண்டே போவேன்.
நடுத்தெரு நாராயணன்