விஜயின், பெரிய மனசு!
விஜயை பொறுத்தவரை, நடிப்பை போலவே, இசையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அதன் காரணமாகவே, சினிமாவில் அறிமுகமானதிலிருந்து அவ்வப்போது தன் படங்களில் தனக்கு தானே பின்னணி பாடி வருகிறார். முக்கியமாக, யாராவது நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் சிறப்பாக பாடி, அவர்களின் பாடல்கள் அதிகமாக அவரை, 'இம்ப்ரஸ்' பண்ணி விட்டால், அதை தானே பாடும் விஜய், தன் படங்களில் அந்த நபர்கள் பாடுவதற்கும், நடிப்பதற்கும் வாய்ப்பளித்து வருகிறார். நாட்டுப்புற கலைஞர்களுக்கு, விஜய் ஆதரவுகரம் நீட்டி வருவதால், பட்டி தொட்டிகளில் பாடி வரும் சில இசைக் கலைஞர்கள், அவரை நோக்கி படையெடுக்க துவங்கி உள்ளனர்.
— சினிமா பொன்னையா
'எஸ்கேப்'பாகும், கல்யாணி பிரியதர்ஷன்!
சிம்புவுடன், மாநாடு படத்தில் நடித்துள்ள, கல்யாணி பிரியதர்ஷன், தற்போது, தமிழில் கவனிக்கப் படும் நடிகையாகி விட்டார். இதனால், அவரை தங்கள் படங்களுக்கு, ஒப்பந்தம் செய்ய முந்திக்கொண்டு ஓடுகின்றனர், தயாரிப்பாளர்கள். ஆனால் அவரோ, 'அட்வான்சை' திணித்தாலும் வாங்கிக்கொள்வதில்லை. 'முதலில், உங்கள் படத்தின் கதை என்னை, 'இம்ப்ரஸ்' பண்ண வேண்டும். அதன்பிறகு தான் உங்கள் படத்தில் நடிப்பது பற்றியே யோசிப்பேன். அதனால், உங்கள் பட இயக்குனரை அனுப்பி, என்னிடம் கதையை சொல்ல சொல்லுங்கள். முன்னதாகவே 'அட்வான்சை' கொடுத்து என்னை கட்டிப் போடாதீர்கள்...' என்று, அவர்களிடம் சிக்காமல், 'எஸ்கேப்' ஆகிறார். வகை அறிந்து செய்தால் வாதம் பலிக்கும்!
— எலீசா
தோழியரை அரவணைத்த, அமலாபால்-!
முன்னணி, 'ஹீரோ'களும், இயக்குனர்களும், தன்னை கழட்டிவிட்ட போதும் கலங்கவில்லை, அமலாபால். தற்போது, கடாவர் என்ற படத்தை தானே தயாரித்து, கதையின் நாயகியாக நடித்து வருகிறார். அதோடு, கடாவர் படத்தில், சினிமாவில் தனக்கு நெருக்கமாக இருந்து வரும் பல நடிகையருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவர்களில், அதுல்யா ரவி, ரித்திவிகா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்தப் படத்தில், தன்னை முன்னிலைப்படுத்தியபோதும் இவர்களின் கதாபாத்திரமும் பேசப்பட வேண்டும் என்பதற்காக, அழுத்தமான காட்சிகளில் நடிக்க வைப்பதற்கு, இயக்குனரிடத்தில் உத்தரவு போட்டுள்ளார், அமலாபால். அந்தளவுக்கு நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். கொடுத்து உறவு கொள்; கோளன் என்று இரேல்!
எலீசா
சூரிக்கு, 'அட்வைஸ்' கொடுக்கும், சினிமா நண்பர்கள்!
வெற்றிமாறன் படத்தில், 'ஹீரோ' ஆக நடித்து வரும் சூரியை, சில சினிமா நண்பர்கள், 'தொடர்ந்து, 'ஹீரோ' ஆக தான் நடிப்பேன் என்று, மற்ற காமெடியன்களைப் போன்று அடம் பிடித்து விடாதீர்கள்...' என்று, 'அட்வைஸ்' கொடுத்துள்ளனர். அதற்கு சூரியோ, 'என் தகுதி எனக்கு தெரியும். அதன் காரணமாகவே ஏற்கனவே, 'ஹீரோ' வாய்ப்புகள் வந்தபோதும், நான் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், வெற்றிமாறன் சொன்ன கதை, என்னை போன்ற நபர்களுக்கு தான் பொருத்தமாக இருக்கும் என்பதால், நடிக்க சம்மதித்தேன். மற்றபடி, எப்போதுமே காமெடியனாக வலம் வரவே ஆசைப்படுகிறேன்...' என்று, தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* சில ஆண்டுகளாக பட வாய்ப்பில்லாமல் போன லட்சுமிமேனன், மீண்டும் உடம்பை குறைத்து, மறுபிரவேசம் செய்துள்ளார். இந்நிலையில், ஒரு படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார்.
* விஷ்ணு விஷால் நடித்துள்ள, எப்ஐஆர் படத்தில், அவருக்கு ஜோடியாக ரெபா மோனிகா, மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் என மூன்று, 'ஹீரோயின்'கள் நடிக்கின்றனர்.
* விஜய் மில்டன் இயக்கி விஜய் ஆண்டனி நடிக்கும், மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நீண்ட இடைவௌிக்கு பிறகு, விஜயகாந்த் ஒரு வேடத்தில் நடிக்கப் போகிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை, அவரது வீட்டிலேயே படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்ளோதான்!