என் மனமே!
மேடும் பள்ளமும் வாழ்வில் உண்டு
தடைகள் பலவும் வழியில் கண்டு
திகையாத உள்ளத்தை நீயும் கொண்டு
முன்னோக்கி செல்ல முயன்றிடு மனமே!
எதிரும் புதிருமாய் மக்களின் கூட்டம்
ஏகமாய் எழும்பி எதிராய் நின்றாலும்
லட்சியப் பாதையில் சற்றும் விலகாமல்
உன்னத நோக்கத்தை அடைந்திடு மனமே!
ஊன வார்த்தையில் உயிரை கொல்லும்
நஞ்சு மனிதர்கள் வாழும் உலகில்
தளரா நம்பிக்கையை தாயின் பாலாய்
ஊட்டும் உறவினில் மகிழ்ந்திடு மனமே!
ரத்தம் உறிஞ்சும் அட்டை மனிதர்கள்
குணத்தில் பச்சோந்தி நிறம் கொண்டோர்
நித்தம் பொய்கள் பேசும் அசுத்தர்கள்
வசிக்கும் பூமியில் விழித்திடு தினமே!
அவசிய தேவைகள் மட்டும் இருந்தால் போதும்
வாழ்வும் வசிப்பும் இனிமை கொள்ளும்
எளியோர் துயரை துடைக்கும் உள்ளமோ
அனுதினம் மனதில் நுகரும் பேரின்பமே!
இச்சகம் பேசும் மடமையின் உலகில்
அச்சமின்றி ஆச்சரிய வாழ்வு வாழ்ந்திட
லட்சியம் உச்சமாய் கொண்டு உயர்ந்திட
வாழ்ந்து காட்டுவோம் வந்திடு மனமே!
சங்கீதா சுரேஷ், தருமபுரி.