அன்புள்ள சகோதரி-
வயது: 62. அரசு கால்நடை மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவன். மனைவி வயது: 58. எங்களுக்கு இரு மகள்கள். மூத்தவள் வயது: 35. நுாலகராக பணிபுரிகிறாள். அவளது கணவர், மீன்வளத்துறையில் பணிபுரிகிறார். திருமணமாகி, 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.
இரண்டாவது மகளுக்கு வயது: 30. தபால்துறையில் பணிபுரிகிறாள். அவளது கணவர், மின்வாரியத்தில் பொறியாளராக பணிபுரிகிறார். திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகியும் அவர்களுக்கும் குழந்தை இல்லை.
என், 35 ஆண்டு பணி காலத்தில் லட்சக்கணக்கான கால்நடைகளின் உயிர்களை பாதுகாத்து, சேவை புரிந்திருக்கிறேன். பணி ஓய்வுக்கு பிறகும், கூப்பிட்ட இடங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு மருத்துவம் பார்த்து வருகிறேன்.
நுாற்றுக்கணக்கான உறவினர் மற்றும் நண்பர்களுக்கு, கல்வி, வேலை தொடர்பான உதவிகளை முழு மனதுடன் செய்துள்ளேன்.
எனக்கு இறை பக்தி அதிகம். தினமும் காலையில் சாமி கும்பிட்ட பிறகுதான், அன்றைய பணிகளை கவனிக்க ஆரம்பிப்பேன். தமிழகத்தில் உள்ள எல்லா கோவில்களுக்கும் மனைவியுடன் சென்று வந்திருக்கிறேன்.
மனைவிக்கு நல்ல கணவராகவும், மகள்களுக்கு நல்ல அப்பாவாகவும் இருந்து வருகிறேன். யாரிடமும் கடன் வாங்கியதில்லை; கடன் கேட்டு வருபவர்களுக்கு திருப்பித் தரவேண்டாம் என கூறி, உதவிகள் செய்திருக்கிறேன். மகள்கள் விரும்பிய அளவுக்கு படிக்க வைத்து, அவர்கள் விரும்பியவர்களுக்கு பெரிய அளவில் செலவு செய்து, திருமணமும் செய்து வைத்திருக்கிறேன்.
என் வயது ஒத்த நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், குறைந்தபட்சம் இரண்டிரண்டு பேரன் -- பேத்திகள் உள்ளனர். அவர்கள் தங்கள் பேரன் - பேத்திகளுடன் கொஞ்சி விளையாடுவதை ஆற்றாமையுடன் பார்த்திருக்கிறேன்.
மூத்த மகளும், மருமகனும் கருத்தரிப்பு மையத்தில் குழந்தை பேறுக்காக, சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இளைய மகள், பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. 'குழந்தை பிறக்கும்போது பிறக்கட்டும் என்ன அவசரம்...' என்கிறாள்.
பேரன் - பேத்தி இல்லையே என்ற ஏக்கத்தில், மனைவி உடம்புக்கு எதாவது வந்துவிட போகிறதோ என்ற கவலைதான் அதிகம்.
எங்களுக்கு பேரன் - பேத்திகள் இல்லாதததை குத்திக்காட்டுகின்றனர், உறவினர்கள். என் அக்கா மற்றும் தங்கைக்கு இரண்டிரண்டு பேரன் - பேத்திகள் உள்ளனர்.
எனக்கு மட்டும் ஏனிந்த சோதனை... போன பிறவியில் பாவம் செய்திருப்பேனோ அல்லது இந்த பிறவியிலேயே அறியாமல் பல பாவங்கள் புரிந்திருப்பேனோ... என் சந்ததி தழைக்கவில்லையே... இதை நினைத்து அழாத நாட்கள் இல்லை.
இறைவனே, என்னை சீக்கிரம் கொண்டு போ என வேண்டிக் கொண்டிருக்கிறேன். குடும்பத்தை விட்டு, எங்காவது ஒரு கோவில் வாசலில் யாசகனாக அமர மனம் ஆசைபடுகிறது.
'தாத்தா...' என, ஒரு பிஞ்சுக்குரல் அழைக்காதா என, ஏங்கி தவிக்கும் எனக்கு, தகுந்த ஆறுதலை கூறுங்கள் சகோதரி!
— -இப்படிக்கு,
அன்பு சகோதரர்.
அன்பு சகோதரருக்கு —
எடுத்து கொஞ்ச பேரன் - பேத்தி
இல்லை என்ற உங்களின் ஆவலாதி, என் இதயத்தை ஓங்கி அறைகிறது.
இயற்கை, மனித உயிர்களின் தொடர்ச்சியை பிரபஞ்சக் கண் கொண்டு கண்காணிக்கிறதே தவிர, தனி மனித தேவைகளை, விருப்பங்களை நிறைவேற்றுவதில்லை.
ஒரு ஆண், நல்ல குடும்ப தலைவனாக, நல்ல மனிதனாக, மெய்யான ஆத்திகனாக இருப்பதற்கு ஊக்க பரிசு குழந்தைகள் என நினைப்பது பேதமை.
உங்களுக்கு பேரக் குழந்தைகள் இல்லை. ஆனால், உங்கள் சகோதரிகளுக்கு பேரக் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் மூலம் உங்கள் சந்ததி தழைக்கவே செய்யும்.
கருத்தரிப்பு மையம் மூலம் உங்கள் மூத்த மகள், குழந்தைகள் பெற வாய்ப்பிருக்கிறது. எவ்வித மருத்துவ உதவிகளும் இல்லாமல் இளைய மகளும் குழந்தைகள் பெற வாய்ப்பிருக்கிறது. உங்கள் ஆவலாதி தற்காலிகமானது தான்.
போன பிறவியில் பாவம் செய்தோமா, இந்த பிறவியில் பாவம் செய்தோமா என்ற சுயபச்சாதாப ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை. தொடர்ந்து நல்லதையே நினைத்து செயல்படுங்கள்.
* உங்கள் மூத்த மகளின் கருத்தரிப்பு மைய சிகிச்சையை நம்பிக்கையுடன் தொடரச் செய்யுங்கள்
* இரண்டாவது மகளை அவளது கணவருடன் வார இறுதியில், எங்காவது, 'பிக்னிக்' போய் வர சொல்லுங்கள்.
உல்லாச தாம்பத்யம் குழந்தையை பரிசளிக்கும்
* உங்கள் சகோதரிகளின் பேரக் குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து, அவர்களுடன் விளையாடிக் கொஞ்சி மகிழுங்கள்
* கருத்தரிப்பு மைய சிகிச்சையை தொடர்ந்து கொண்டே எதாவது ஒரு குழந்தையை உங்கள் மூத்த மகள் தத்தெடுக்கட்டும். தத்துக்கு பிறகு குழந்தைகள் பெற வாய்ப்பு அதிகம்
* எங்களுக்கு பேரன் - பேத்திகள் இல்லை என்ற ஆவலாதியை வெளிப்படையாக காட்டாதீர். உறவினர்கள் குத்திக்காட்டினால் சிரித்த முகத்துடன் சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள்
* வாரா வாரம் மனைவியுடன் கோவிலுக்கு சென்று, இறைவனை வழிபட்டு, மன அமைதி பெறுங்கள். இதுவரை பேரன் - பேத்திகள் பிறக்காததற்கு எதாவது நியாய காரணத்தை இறைவன் வைத்திருப்பான் என, நம்புங்கள்
* குழந்தைகள் இல்லாதததை உங்கள் மகள் மற்றும் மருமகன்கள் தத்துவார்த்தமாக எடுத்துக் கொள்ளும்போது, நீங்கள் விஷயத்தை பெரிதுபடுத்தி அவர்களை துன்பக்கடலில் தள்ளாதீர்கள்
* விடுமுறை நாட்களில் பூங்காக்களுக்கு சென்று குழந்தைகள் விளையாடுவதை கண்டும், 'கார்ட்டூன் சேனல்'களை தொடர்ந்து பார்த்தும், உங்களுக்குள் இருக்கும் ஏக்கத்தை தணித்துக் கொள்ளுங்கள்.
—-என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்.