''பாலகிருஷ்ண சண்முகம், இதுதான் உங்கள் அசல் பெயரா?'' கேட்டாள், நித்யா.
''ஆமாம்.''
''என்ன இவ்வளவு பெரிய பெயராக வைத்திருக்கின்றனர்?''
''ஏன், பெயர் நன்றாக இல்லையா?''
''நன்றாக இருக்கிறது. ஆனால், ரொம்ப நீளமாக, கூப்பிடுவதற்கு கஷ்டமாக இருக்காதா?''
''கிருஷ்ண பக்தர், அப்பா. சனிக்கிழமை, பஜனைக்கு போகாமல் இருக்க மாட்டார். முருக பக்தை, அம்மா. செவ்வாய்க்கிழமை, கார்த்திகை வந்தால், சொட்டு தண்ணீர் கூட பல்லில் படாமல் விரதம் இருப்பார். அவர்கள் இருவரும் சேர்ந்து தங்கள் இஷ்ட தெய்வப் பெயராக வைத்தனர். அப்பா, பாலகிருஷ்ணா என்று கூப்பிடுவார். அம்மா, சண்முகம் என்று கூப்பிடுவார்.''
''நல்ல வேளை... உங்க தாத்தாவுக்கு அய்யப்பன் பிடித்திருந்து, பாட்டிக்கு பிள்ளையார் பிடித்திருந்து, அந்த பெயரையும் சேர்த்து இன்னும் நீளமாக மாற்றாமல் இருந்தனரே, அதுவரை சந்தோஷம். உங்களை, பாலு என்றே கூப்பிடுகிறேன்,'' என்றாள், நித்யா.
எப்படிப்பட்ட சாப்ட்வேர் பிரச்னை என்றாலும் தீர்த்து விடுவான், பாலு. வேலையில் கெட்டிக்காரன். டீம் லீடர்; அவனுக்குக் கீழ் வேலை பார்க்கக் கூடிய சிலரில் நித்யாவும் ஒருத்தி.
சின்னச்சின்ன சந்தேகங்களை கூட கேட்டபடி இருப்பாள், நித்யா.
ஒருநாள்-
''பாலு... உங்களைப் பார்த்தால் கையெடுத்துக் கும்பிட வேண்டும் போல் இருக்கிறது.''
''ஏன்?''
''இந்த வயதில், நெற்றி நிறைய திருநீறு அணிந்து பளிச்சென்று இருக்கிறீர்கள்.''
பாலுவுக்கு குஷி தாங்கவில்லை. இதுவரை, அவனை ஒரு மாதிரி பார்த்துச் சென்றவர்கள் தான் அதிகம்; யாரும் கேட்டதில்லை.
''ஆமாம் நித்யா... சின்ன வயதில் இருந்தே பழக்கம். காலையில் சந்தியாவந்தனம், சுலோகங்களை பாராயணம் செய்து, பூஜை முடித்து வந்த பின் தான், டிபன் கொடுப்பாள், அம்மா.''
''அப்புறம்?''
''சனிக்கிழமை, அப்பாவை பஜனைக்கு அழைத்துச் செல்வேன்; பாடுவார்.''
''நீங்கள் பாடுவீர்களா?''
''பாடுவேனே.''
மெல்லிய குரலில், 'தாயே யசோதா...' என்று ஆரம்பித்தான்.
''இன்னொரு நாள் கேட்கிறேன்... புதுப் பாட்டு கேட்க வேண்டும்,'' என்றாள், நித்யா.
''கிருத்திகை வந்தால், அம்மாவை முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.''
''ஒரே பக்தி மயம் என்று சொல்லுங்கள்.''
''ஆமாம் நித்யா... சுவாமி ஓம்காரனந்தா, சென்னைக்கு வந்தால், அவர் நடத்தும் கீதை வகுப்புக்கு என்னையும் தவறாமல் அழைத்துச் செல்வார், அப்பா. அனந்த சிந்தயோமாம்.''
''அனந்த சிந்தயோமாம்... என்ன இது?''
''கீதை சுலோகம்.''
ஒருமுறை, ''ஏன் பாலு, திருமணம் செய்து கொள்ளவில்லையா?'' என்றாள், நித்யா.
''செய்யணும்.''
''செய்யணும் என்றால்... உங்கள் வீட்டில் அதற்கான முயற்சி எடுக்கவில்லையா?''
''எங்கே நித்யா பெண் கிடைக்கிறது?''
''நம் ஆபீஸில் எத்தனை திருமணமாகாத பெண்கள் இருக்கின்றனர்...''
''காதலா... காதலிக்கச் சொல்கிறாயா?'' கேட்டான், பாலு.
''இரு இரு... ஏன் பதறுகிறாய்... உன் கேள்வியே விசித்திரமாக இருக்கிறது. காதலிக்க சொல்கிறாயா என்று கேட்கிறாயே... காதல், சொல்லித்தந்தா வரும், அது தானாக வரவேண்டும். உனக்கு அப்படி ஒரு எண்ணமே வரவில்லையா... சாப்ட்வேர் கம்பெனியில் இப்படி ஒரு பத்தாம்பசலியைப் பார்ப்பது அபூர்வமாக இருக்கிறது, பாலு.''
பதில் சொல்லவில்லை, பாலு.
வெள்ளிக்கிழமை வந்தால், 'வீக் எண்டு ரிலாக்சேஷன்' என்று, மகாபலிபுரம் அல்லது பாண்டிச்சேரிக்கு ஒரு கோஷ்டி கிளம்பும். அன்று சீக்கிரம் வேலையை முடித்தாக வேண்டும் என்று பரபரப்பாக இருப்பர்.
அப்படி ஒருமுறை, ''ஏன் பாலு, நீயும் ஒருமுறை வந்தால் என்ன? ஐந்து நாட்கள் அடைந்து கிடந்து, மூளையைக் கசக்கி, வேலை பார்க்கிறோமே... இரண்டு நாட்களில் எத்தனை சந்தோஷம்... மூளைக்கு கொஞ்சம், 'ரிலாக்சேஷன்' வேண்டாமா?'' என்றாள், நித்யா.
''இல்லை... நீங்கள் போய் வாருங்கள்.''
''ஏன் உனக்கு ஆர்வம் இல்லையா?''
''இல்லை.''
''சனி, ஞாயிறு என்னதான் செய்வாய் நீ?''
''என்ன வேலையா இல்லை... ஆயிரம் வேலை. வீட்டை சுத்தம் செய்யணும்; அம்மாவுக்கு உதவி செய்யணும். ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம், பாரதிய வித்யா பவனில் ஒரு சத்சங்கம். அப்பாவோடு செல்ல வேண்டும்.''
''டேய்... 20 - 30 ஆண்டுகளுக்கு முன் பொறந்திருக்க வேண்டிய ஆளுடா... நான் ஹெச்.ஆரா இருந்தா, உன்னை வேலைக்கே எடுத்திருக்க மாட்டேன்.''
ஒருநாள் மதிய இடைவேளையில், தயிர் சாதத்தை சீக்கிரமாக சாப்பிட்டு, ஏதோ ஒரு மெயிலைப் பார்த்துக் கொண்டிருந்தான், பாலு.
அந்த பக்கமாக வந்த நித்யா, அவன் சீட்டுக்கு அருகில் உட்கார்ந்து, ''என்ன செய்கிறாய்?'' என்றாள்.
''சில ஜாதகத்தின் பிரதி எடுத்து வா என்று அம்மா சொன்னார். எடுத்துக் கொண்டிருக்கிறேன்.''
''இதை வைத்து என்ன செய்வார்,
உன் அம்மா?''
''வரும் ஞாயிற்றுக்கிழமை, ஜாதகங்களை எல்லாம் மையிலாப்பூரில் ஒரு ஜோதிடரிடம் காட்டுவாள்.''
''பெண்ணின் போட்டோ எதாவது இருக்கிறதா... நான் பார்க்கலாமா?''
ஏழெட்டு ஜாதகங்களோடு இணைக்கப்பட்டிருந்த படங்களைக் காட்டினான்.
படங்களைப் பார்த்ததும், நித்யா விழிகள் விரித்து ஆச்சரியத்தோடு, ''ஓ மை காட்,'' என்றாள்.
''ஏன் நித்யா?''
''இல்லை, உன் அம்மா, வீட்டுக்கு விளக்கு ஏற்றுவதற்கு மகாலட்சுமியை தேடுகிறாள். இஸ் இட்?'' என, உரக்க சிரித்தாள்.
''ஏன் சிரிக்கிறாய்... நன்றாக இல்லையா?''
''ரொம்ப நன்றாக இருக்கிறது,'' என்று சொல்லிச் சென்று விட்டாள்.
பாலுவுக்கு ஒன்றும் புரியவில்லை.
மூன்று நாட்களுக்கு பின், பாலுவிடம், ''என்ன ஏதாவது ஒன்று முடிந்ததா?''
''இல்லை,'' என்றான்.
''ஏன்... என்ன காரணம், அவர்களுக்கு உன்னைப் பிடிக்கவில்லையா... இல்லை உங்களுக்கு அவர்களைப் பிடிக்கவில்லையா?''
''உங்களுக்கு என்றால்?''
''உனக்கு, உன் அம்மா - அப்பா எல்லாரும் சேர்ந்து தானே முடிவு எடுப்பீர்கள். அதனால் கேட்டேன்,'' என்றாள்.
''அவர்கள் போடுகிற நிபந்தனை தான் பிடிக்கவில்லை.''
''என்ன நிபந்தனை போடுகின்றனர்?''
''முதல் நிபந்தனை, அப்பா - அம்மாவோடு நான் இருக்கக் கூடாதாம்.''
''இந்த நிபந்தனையிலேயே எல்லாம் அடிபட்டு போயிருக்குமே.''
''ஆமாம் நித்யா... அப்பா - அம்மாவுக்குத் துணையாக இல்லாமல், நான் மட்டும் எப்படி தனியா இருக்க முடியும்?''
''நீ தனியாக இருக்கக் கூடாது என்று தானே அந்தப் பெண் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறாள். அப்பா - அம்மாவை தனியாக விட்டுவிட வேண்டியது தானே!''
''ஏன்?''
''அவர்களுக்குப் பென்ஷன் வருகிறது. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக் கொள்கின்றனர். உன் வாழ்க்கையை நீ பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.''
''அது பாவம் இல்லையா?'' என்றான்.
பயங்கரமாகச் சிரித்தாள், நித்யா.
''உன் அப்பா - அம்மா தனியாக இருப்பதும், நீ தனியாக இருப்பதும் பாவமா என்ன? அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால், நிச்சயம் பார்த்துக் கொள்ளப் போகிறாய்.''
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான், பாலு.
நாற்காலியை இழுத்துப் போட்டு, ''இதோ பார் பாலு, இந்த அலுவலகத்தில் என் மேலதிகாரி நீ... 'டீம் லீடர்!' அருமையாக வேலை பார்க்கிறாய்... நீ தான் எனக்கு எல்லா வேலையும் சொல்லித் தருகிறாய்...
''உன்னிடம் நெருக்கமாக பேசி, எல்லா வேலையும் நான் சாதித்துக் கொள்கிறேன் என்று, இந்த அலுவலகத்தில் எல்லாரும் சொல்கின்றனர். ஏன், நான் உன்னைக் காதலிப்பதாகக் கூட சிலர் சொல்லி கொண்டிருக்கின்றனர்... தெரியுமா உனக்கு?'' என்றாள்.
''அப்படியா... யார்?''
''யாராகவாவது இருக்கட்டும்... ஒரு விஷயத்தில் பெருமையாக இருக்கிறது. இந்த காலத்தில் இப்படி ஒரு ஆண்மகனா என்று நினைக்கத் தோன்றுகிறது.''
''காரணம்?''
''ஆயிரம் பூக்களுக்கு நடுவில் ஒரு பூ வித்தியாசமாக இருந்தால், அந்தப் பூவின் மீது தான், நம் கவனம் செல்லும். அதைப்போல, அரட்டை, சிகரெட், கேன்டீன், ஊர் சுற்றல், தண்ணீ, 'வீகெண்ட் டிரிப்' என்று படு ஜாலியாக இருக்கும் ஆண்கள் உலகத்தில் வித்தியாசமாக இருக்கிறாய்.
''விபூதி பூசி, சந்தியாவந்தனம் செய்கிறாய்; ஆர்.கே மடத்துக்கு ஆன்மிகச் சொற்பொழிவுக்குப் போகிறாய்; பகவத்கீதை வாசிக்கிறாய்; விடுமுறையில் கோவில்களுக்குப் போகிறாய். அப்பா - அம்மாவை, தெய்வமாக நினைத்து அவர்களோடு இருப்பதை விரும்புகிறாய்.
''ஆனால், உன்னை இந்தக் காலத்து பெண்கள் ஒரே வார்த்தையில் தான் சொல்வர். நீ கஷ்டப்படாமல் இருந்தால் நான் அந்த வார்த்தையைச் சொல்கிறேன்.''
அவள் பேசப் பேச குழம்பினான், பாலு.
ஆயினும் அவள் பேச்சில் ஆர்வம் அதிகரித்து, ''சொல் நித்தியா,'' என்றான்.
''கோபித்துக் கொள்ள மாட்டாயே.''
''இல்லை, சொல்.''
''பண்டார பரதேசி என்று சொல்வர்.''
''என்ன சொல்கிறாய்?''அதிர்ந்தான்.
''உண்மையைச் சொல்கிறேன், உன்னை எனக்கு மிகவும் பிடிக்கிறது; உன் வித்தியாசம் எனக்கு பிடிக்கிறது; என் மனதில் கூட சில சலனங்கள் வரும். 'இவ்வளவு நல்லவனாக இருக்கிறானே... இவனை கல்யாணம் செய்து கொண்டால் என்ன...' என்று கூட தோன்றும். 'அப்கோர்ஸ்' நீ, என்னிடம் அப்படி பழகி இருக்காவிட்டாலும்...
''ஆனால், யோசிப்பேன்... என் பழக்க வழக்கங்கள், ஆடை, அலங்காரங்கள், நிச்சயமாக உன்னோடு ஒத்து வராது; பிரச்னை தான் வரும். ஒன்று, நீ மாற்றிக்கொள்; இல்லாவிட்டால் நான் மாற்றிக் கொள்ள வேண்டும். இரண்டும் நடக்காதபோது எப்படி வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்...
''இங்கே இருக்கக்கூடிய பெரும்பாலான பெண்கள் அப்படித்தான். ஆனால், நீ எப்படி அற்புதமாக, அபூர்வமாக இருக்கிறாயோ, அதைப்போல அபூர்வமாக இருக்கும் ஒருத்தி சீக்கிரம் உனக்குக் கிடைக்க வேண்டும். சில விஷயங்கள் மாறுபாடாக இருக்கிறபோது, அது எத்தனை உயர்வானதாக இருந்தாலும் அதிகமாக சங்கடத்தை எதிர்கொள்கிறது.
''ம்... என்ன செய்வது, இக்கால பெண்களுக்கு ஏற்றதாக உன்னை மாற்றிக்கொள் என்று கூட சொல்லலாம் என்று தோன்றுகிறது. ஆனால், உன் அபூர்வமான சுயத்தைத் தொலைத்து, அப்படி என்ன ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை உன்னால் வாழ்ந்து விட முடியும்... எனவே, நீ நீயாகவே இரு பாலு. உன் சுயத்தைச் சிதைக்காத ஒரு பெண்ணுக்காக காத்திரு. அவள் சீக்கிரம் கிடைக்கட்டும்.''
அவளையே பார்த்தான், பாலு.
இதுவரை பார்த்த நித்யா வேறு; இப்போது பார்க்கிற நித்யா வேறு.
ஆனால், அவள் போகும்போது லேசாக கண்கள் கலங்கியிருந்தது. அந்தக் கண்ணீருக்கான காரணம், பாலுவுக்குத் தெரியவில்லை.
'நித்யாவுக்கு ஏதோ ஆகியிருக்கிறது...' என்று நினைத்தான்.
எஸ். கோகுலாச்சாரி